அன்னையர் எழுவர்

சப்தமாதர்கள் என்றழைக்கப்படும் அன்னையர் எழுவர், தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடித் தெய்வங்களாவர். இவர்கள், ஸ்கந்தனுடனும், சிவனுடனும் தொடர்புடையவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.
Published on
Updated on
8 min read

சப்தமாதர்கள் என்றழைக்கப்படும் அன்னையர் எழுவர், நமது தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடித் தெய்வங்களாவர். இந்தியா முழுமையிலும் வணங்கப்பட்டு வந்த இத்தாய் தெய்வங்கள், ஸ்கந்தனுடனும், சிவபெருமானுடனும் தொடர்புடையவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். மு.பொ.ஆ. 30 முதல் வ. 375 வரை, இன்றைய ஆப்கானிஸ்தான் உள்பட வடஇந்தியப் பகுதிகளை ஆட்சி புரிந்த குஷானர்கள் காலத்தில், தாய் தெய்வங்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வணங்கி வந்தனர். மத்தியப் பிரதேசத்தில், குடவரைக்குள் சப்தமாதர்கள் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

அன்னையர் எழுவரும், பெண் தெய்வங்களும் போர்த் தெய்வங்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கொடிய அரக்கர்களிடம் இருந்து காப்பதற்காகப் பிறப்பெடுத்தவர்கள். இவர்களது கைகளில் காணப்படும் ஆயுதங்களைக் கொண்டே இவர்களைப் போர்க்கடவுளர் எனக் கருதி, அவர்களின் வன்மையில் தங்களைக் காக்க வேண்டும் என வழிபட்டனர். அன்னையர் எழுவரையும் ஒட்டுமொத்த தெய்வங்களின் தொகுப்பாகவே கிராமங்களில் கருதினர். இவர்களுடன், வீரபத்திரரையும், விநாயகரையும் சில இடங்களில் இணைத்து, அவர்களுக்குக் காவல் தெய்வங்களாக அமைத்துச் சிறப்பித்துள்ளனர். சில இடங்களில் வீரபத்திரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார் என்பதையும் ஆங்காங்கே காணப்படும் சிற்பத் தொகுப்புகளிலிருந்து அறியமுடிகிறது.

தமிழகத்து சமயச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டியது சங்க இலக்கியங்களும், பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களாகத் திகழும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், அன்னையர் எழுவரைப் பற்றிய சில தகவல்களை சிலப்பதிகாரம் முதன்முதலாக வெளிப்படுத்துகிறது. அன்னையர் எழுவரில் இளைய பெண் தெய்வம் காளி என்பதை சிலப்பதிகாரத்தில் வழக்குரைக் காதையில் தெளிவுபட கூறப்பட்டுள்ளது.*1 இறைவனை ஆடல்கண்டருளிய அணங்கு யாரென்பதை சிலப்பதிகாரத்துக்குச் சற்று பின்வந்த அப்பரும் சம்பந்தரும்கூட, தங்கள் பதிகங்களில் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர்.

சிலம்பு கூறும் அன்னையர் எழுவர்

சிலம்பில், ‘அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை’ எனக் கொற்றவையைக் கூறிய பிறகே காளியைப் பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. இது, கொற்றவையான துர்க்கைக்கு அடுத்த நிலையிலே காளியைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருந்த நிலையைக் காட்டுகிறது. இது, கொற்றவை, துர்க்கைக்கு அடுத்துதான் பிற அன்னையர் வழிபாடு வழக்கத்துக்கு வந்தது என்று உய்த்துணர வழிவகுக்கிறது.

அறுவர்க்கு இளையநங்கை, இறைவனை ஆடல்கண்டருளிய அணங்கு, சூரரைக் கானகம் உகந்த காளி, தாருகன் பேருரம் கிழித்த பெண் என்று புதியதொரு பெண் தெய்வத்தையும், அதன் வழி அன்னையர் எழுவர் வழிபாட்டின் தொடக்கத்தையும் சிலம்பின் வழக்குரைக் காதை எடுத்துரைக்கிறது.

“அறுவர்க்கிளைய நங்கை இறைவனை

ஆடல் கணடருளிய அணங்கு சூருடைக்

காணகம் உகந்த காளி, தாருகன்

பேரூரங் கிழித்த பெண்”.

அறுவர்க்கு இளையநங்கை என்பதால், அன்னையர் எழுவரில் இளைய பெண் தெய்வம் காளி என்பது எளிதில் புலப்படுகிறது.

{pagination-pagination}

அன்னையர் எழுவர் என்பது காளியையும் உள்ளடக்கி, காளியை அறுவர்க்கும் இளையவர் எனக் குறிப்பிடும் சிலம்பின் கருத்து, தேவார காலத்தில் அன்னையர் எழுவராக மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, பிராமி, வாராகி, இந்திராணி ஆகிய அறுவருடன் காளியையும் ஏழாவதாக இணைப்பதிலிருந்தும் பெறமுடிகிறது. இவர்கள், சைவ சமய மக்களால் போற்றப்பட்ட ஆண் தெய்வங்களின் துணைவிகளாகவும் பின்னர் கருதப்பட்டனர். ஆனால், காளி மட்டும் இறைவியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தனி பெண் தெய்வமாகும். மற்ற அறுவரும், அரக்கர்களை அழிக்கத் தோற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவர். காளி போர்க்கடவுளாகவும், துஷ்டர்களை அழிக்கக்கூடிய சக்தியாகவும் உருவாக்கப்பட்டவள். அப்பரும் சம்பந்தரும் தங்கள் பதிகங்களில் பல இடங்களில் காளியைக் குறிப்பிட்டுள்ளனர்.*2

“ஆடினார் பெருங் கூத்து காளி கான”*3

“காளிமுன் காணக் கானிடை நடனஞ் செய்த”*4

என்று தேவாரப் பதிகங்களில் காணமுடிகிறது.

தக்கையாக்கப்பரணியில் அன்னையர் எழுவர்

சோழப் பேரரசின் அவையை அலங்கரித்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், தாய் தெய்வ வழிபாட்டை தக்கையாக்கப்பரணியில் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்.*5

“எறிபடைவிசையை யிசைகெழு தெய்வமகளிர்

எழுவரும் வௌ;ளை முரளி யினிதுறை செல்வமகளும்

மறிகடல் வையமகளு மலா;கெழு செய்யதிருவும்

வரவிரு மெல்ல வரகன் மணியணி பள்ளியருகே” என்றும்,

மேலும், சமய இலக்கியங்களில் தன்னிகரில்லா சிறப்பைக் கொண்ட திருமூலர் பாடிய திருமந்திரத்தில், கன்னியர் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது, எண்மர் என்பதை,

“பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேயோர்;

ஆரியத் தாளுண்டங்கு எண்மர் கன்னியர்

பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்

சாரித்துச் சக்தியைக் தாங்கள் கண்டாரே” என்று குறிப்பிட்டுள்ளனர்.*6

எனவே, எழுவர், எண்மர் என்ற கருத்து காளியையும், சாமுண்டாவையும் உள்ளடக்கிய நிலையா, அல்லது சாமுண்டாதான் காளியாகி மறுபிறவியாக நிற்கின்றாரா என்பதும் உற்று நோக்கத்தக்கதாகும். சாமுண்டா பின்னர் இணைக்கப்பட்டதாகவும் கருத்துகள் உண்டு. காளியே சாமுண்டாவாகக் கருதும்படி உருவ அமைதியிலும், செயலிலும், கையில் வைத்திருக்கும் ஆயுதங்களிலும் ஒற்றுமை காணப்படுகிறது.

எனவே,  சிவனோடு பார்வதி நாட்டியமாடி அமர்ந்த நிலையாகக் காட்டும்போது, அவள் காளியாக உருவெடுத்து மக்களுக்கு நன்மை பயத்தலால், அவளைத் தனித் தெய்வமாகப் கிராம மக்கள் போற்றி வழிபட ஆரம்பித்தனர் என வரலாற்றுப்போக்கு கொண்டு கருதலாம். பின்னர் அவளுக்கென்று தனிக்கோயில்களும் அமைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்மனின் பல பெயர்களில், பல உருவங்களில் தமிழகக் கிராமங்களில் எழுந்தருளியதைப் பின்னர் கிராமியக் கடவுள்களாகப் பெண் தெய்வங்கள் என்ற தலைப்பில் விரிவாகக் காண்போம்.

சைவ சமயத்தில் அன்னையர் எழுவர்

சைவ சமயத்தில் சிறப்புற்றிருக்கக்கூடிய பெண் தெய்வங்கள், தங்களின் தனிப்பட்ட திறமைகளையும், உண்மையான தோற்றத்தையும், தேவையான சமயங்களில் வெளிப்படுத்தினர். சிவனின் துணைவியரான பார்வதி, தனது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்த அவதாரம் எடுத்துள்ளாள். இவரைப் போன்றே, இவருடன் இருக்கும், அதாவது மக்களால் வணங்கப்பட்ட பிற பெண் தெய்வங்களும் தங்களது சொந்த வடிவிலிருந்து தாங்கள் மேற்கொள்ளும் கொள்கைக்கு ஏற்ப வடிவை மாற்றி அமைத்துக்கொண்டு செயல்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவார்கள் இன்றியமையாத பெண் தெய்வங்களாக, கிராமங்களிலும், பெருங்கோயில்களிலும் தற்பொழுது வலம் வந்துகொண்டுள்ளனர்.

{pagination-pagination}

கன்னிமார் சாமிகள்

கிராமங்களில், இத்தெய்வங்களின் தொகுப்பை கன்னிமார் சாமிகள் என்றே அழைத்து வழிபாடு செய்கின்றனர். கன்னிமார்சாமி என்பது நாட்டார் வழக்காக இன்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் நிலவி வருவதைக் காணலாம். இதுபோன்றே, பெண் தெய்வங்கள் என்று குறிப்பிடப்படும், குறிப்பாக ஜேஸ்டா, ரௌத்திரி, காளி, காளவிக்ராணி, பாலவிக்ராணி, பாலபிரமாதானி, சர்வபூததாமணி மற்றும் மனோன்மணி ஆகியோர், சிவனின் மறுவடிவங்களாகவே அமையப்பெற்றவர் எனலாம். இவர்கள் இறுதியாக பெண் தெய்வ அமைப்பைப் பெற்று, தங்களது கருத்துகளைச் செயல்படவைக்கும் திறனையே வெளிப்படுத்துகின்றனர். சைவப் பெண் தெய்வங்களின் ஒரு தொகுப்பை கன்னிமார் எழுவர் என்றும் குறிப்பர். அவர்கள் பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, மகேந்திரி, மற்றும் சாமுண்டா என கிருஷ்ண சாஸ்திரி குறிப்பிடுகிறார்.*7 சில இடங்களில் மகாலட்சுமியையும் இணைத்து எண்மராக பெண் தெய்வங்களைச் சித்தரித்துள்ளதையும் காணமுடிகிறது.

எண்மர் தாய்மார்கள்

சாமுண்டா என்பது நரசிம்மி உருவமாகும். இதன் அமைப்பு, மனித உருவமும், சிம்ம முகத்தையும் கொண்ட நரசிம்மக் கடவுள் அமைப்பு ஆகும். சில இடங்களில், நரசிம்மிக்குப் பதிலாக சாமுண்டாவை வைத்து வழிபடுவதும் வழக்கமாக இருந்துள்ளது. கிருஷ்ண சாஸ்திரி குறிப்பிடும்பொழுது, சாமுண்டா தான் நினைத்த வடிவத்தை எடுப்பவள் என்பார். அதனால், சாமுண்டா என்பது நரசிம்மி உருவம் எடுத்துக்கொள்வதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. மகாலட்சுமி இரண்டு கரங்களுடன் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருப்பாள். கைகளில் கபாலமும், தாமரை மலரையும் ஏந்தியிருப்பாள். இவளைக் காளியாகவும் சித்தரிப்பர். மாகாளி தனிச்சிறப்பு பெற்ற வடிவமாகும்.

சில்பசங்கிரகம் கூறும் கன்னியர் எழுவர்

சில்பசங்கிரகம் (Silpasangraha) கூறும்பொழுது, பிரம்மா, மகேஸ்வர் குமரன், விஷ்ணு இவர்களின் செயல்படும் சக்திகளாகவே பிரம்மி, வைஷ்ணவி, கௌமாரி, மகேஸ்வரி ஆகிய பெண் தெய்வங்கள் எனக் குறிப்பிடுகிறது.*8 எனவேதான், இப்பெண் தெய்வங்கள் அனைத்தும் அவரவர் துணைவர்களின் வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி, தங்களது சக்தியை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் கருதப்படுவர்.

சில்பசங்கிரகம் கூறும்பொழுது, வராகி எமனில் இருந்து உருவாக்கப்பட்டவர். எமன் இறப்புக்கான கடவுளாக சைவ சமயத்தில் போற்றப்படுபவர். வராகி, எருமை வாகனத்தில் பயணித்துக்கொண்டு, மண்டை ஓட்டில் ரத்தத்தைக் குடிப்பவள். மேலும், தண்டநாத வராகி, சுவப்னவராகி, சுத்தவராகி என அவரின் பல தோற்றங்களை சில்பசங்கிரகம் வெளிப்படுத்துகிறது. பெண் தெய்வங்கள், அவ்வப்போது நடக்கும் இன்னல்களைப் போக்கவும், மக்கள் துயர் நீங்கி நல்வாழ்வு அமையவும் இதுபோன்ற தோற்றங்களைப் பெற்று, பல தீய செயல்களையும், தீய சக்திகளையும் அழித்து பல நற்காரியங்கள் நடைபெற வழிவகுத்துத் தந்துள்ளனர்.*9

மகேஸ்வரி (பைரவி) தனது வாகனமாக பசுமாட்டையும், ஐந்து தலைகளும், மூன்று கண்களும், பத்து கரங்களுடனும் தனது தலையில் பிறைச் சந்திரனுடனும் காட்சியளிப்பவள். பிரம்மி, நான்கு முகங்களும். ஆறு கரங்களும், அன்னத்தை வாகனமாகவும் கொண்டவள். கௌமாரி ஆறு முகங்களையும், பன்னிரண்டு கரங்களையும் கொண்டு மயிலை தனது வாகனமாகவும் கொண்டவளாவாள். வைஷ்ணவி கருட வாகனத்தில் வலம் வருபவள். வைஷ்ணவி நீலவண்ணனின் நீல நிறத்தைக் கொண்டவள். மலர்களைத் தொகுத்து மாலையாக அணிந்தவள். அம்மாலையை வனமாலை என்று குறிப்பிடுவர். வராகி பெண் பன்றி முகத்தையும், கருப்பு நிறத்தையும் பருத்த வயிரும், எருமை வாகனத்தையும் கொண்டவள். இவளே வராகியம்மன் என்று அழைக்கப்படுபவள்.

{pagination-pagination}

மகேந்திரி என்று அழைக்கப்படும் இந்திராணி ஆயிரம் கண்ணுடையாள். இந்திரனுக்கும் ஆயிரம் கண்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரனுக்குரிய வாகனமான யானை மீது வலம் வருகின்றாள். சாமுண்டா, தனது விருப்பத்துக்கு ஏற்ப தன் உடலமைப்பை மாற்றிக்கொள்ளும் திறன் பெற்றவள். கருப்பு நிறத்தவள். வெளியே நீட்டிக்கொண்டுள்ள பற்களும். நீண்ட நாக்கு அமைப்பையும் கொண்டவள். சிவந்த கண்களும், வெளித்தள்ளிய வயிறும் அமைந்தவள். நாகத்தை அணிகலனாக அணிந்தவள். மண்டை ஓட்டையும் மாலையாக அணிந்தவள். இவளது பத்து கரங்களும், ஆயுதங்கள் தாங்கி அபய, வரத முத்திரையில் காட்சியளிப்பவள். கேடயம், வில், ஈட்டி, அம்பு, உடுக்கை, வட்டு, கத்தி, அரிவாள், போன்றவற்றை தனது பத்து கரங்களிலும் கொண்டவள். அன்னையர் எழுவருக்கும் பாதுகாவலராக வீரபத்திரரும் விநாயகரும் வீற்றிருப்பர். இவர்கள் இருவரையும் சிவனின் மறுவுருவமாகவே கருதுவர். அன்னையர் எழுவர் சிற்பங்களுக்கு முன், தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில், ஆலமரத்தின் அடியில் சிவன் அமர்ந்துள்ளவாறு காட்டப்படுவர்.*10

அன்னையர் எழுவரின் புனித மரங்கள்

அன்னையர் ஒவ்வொருவருக்கும் வாகனம் அமைந்ததுபோல, புனித மரமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கௌமாரிக்கு உடும்பரா (Figtree) மரமும், வைஷ்ணவிக்கு பீப்பல் (pipal) மரமும், வராகிக்கு கரன்ஜா (Karanja) மரமும், இந்திராணிக்கு கல்பத்தரு அதாவது கற்பகவிருட்சம் (Kalpataruma) மரமும், சாமுண்டாவிற்கு ஆலமரமும் (Banyan) உண்டு. இம்மரங்களின் கீழ் இவர்கள் வீற்றிருப்பர். எனவே, இம்மரங்களும் புனிதத்தன்மையைப் பெற்றன என்பர்.*11

சிந்து சமவெளி நாகரிகத்தில் அன்னையர் எண்மர்

சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய அகழாய்வில் கிடைத்த முத்திரை ஒன்றில், சிவன் தியான நிலையில் அமர்ந்துள்ளார் என்றும், அவரைச் சுற்றி விலங்குகள் காட்டப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகழாய்வில் கிடைத்த மற்றொரு முத்திரையில், கீழ் பகுதியில் ஏழு பெண்களும், மேல் பகுதியில் ஒருவரும் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இதனை, தாய் தெய்வ வழிபாட்டின் அங்கமாகவே கருதத் தோன்றுகிறது. இவற்றிலும் விலங்குகளும், நடுவில் ஒருவன் அவர்களை வணங்குவதுபோல் கையேந்திய நிலையில் அமர்ந்துள்ளதையும் காணலாம். எனவே, அம்முத்திரையில் காணப்படுவது தாய் தெய்வங்களைக் குறிக்கிறது எனக் கொள்வதே சரியாக இருக்கும்.

மேலும் இலக்கியங்கள், தாய் தெய்வங்கள் அறுவர் என்றும், அடுத்து தாய் தெய்வங்கள் சாமுண்டாவைச் சர்த்து எழுவர் என்றும், ஒரு சிலர் மகாலட்சுமியையும் சர்த்து எண்மர் என்றும் கூறுகின்றனர். இக்கருத்தின் அடிப்படையில் தாய் தெய்வங்கள் குறித்த சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் எண்மர் உருவங்கள் காட்டப்பட்டுள்ளதையும் இங்கு கவனத்தில் கொண்டால், தாய் தெய்வங்களைப் பற்றிய உருவ வடிவில் காணப்படும் முதன்மையான சான்றாகவே இம்முத்திரையைக் காணலாம்.

அன்னையர் தெய்வங்கள் - மதுரா

கர்நாடகத்தில் கன்னியர் எழுவர் சிற்பம்

கர்நாடக மாநிலத்திலும், கன்னியர் எழுவர் சிற்பம் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. அங்கு, பொ.ஆ. 5-ஆம் நூற்றாண்டு கங்கர்கள் காலம் முதலே, கன்னியர் எழுவர் தாய் தெய்வங்கள் வழிபாட்டில் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றாக, ஒரு சிற்பத் தொகுப்பு அண்மையில் முகநூலில் காண நேரிட்டது. எனவே, இந்தியா முழுவதும் இருந்த தாய் தெய்வங்கள் எழுவர் வழிபாடுப் பண்பாடு பரவலாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. கர்நாடகாவில் கோலார், முகுர், நகரலே, குணகுன்டா போன்ற இடங்களில் உள்ள சிவாலயங்களில், இந்த சப்தமாத்திரிகா சிற்பங்களைக் காணலாம் என கர்நாடக இதிகாச அகாடமி முகநூல் பதிவில் தெரிவிக்கிறது.

{pagination-pagination}

கல்வெட்டில் பெண் தெய்வங்கள்

பொ.ஆ. 2 மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளில், தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி நடைபெற்று வந்துள்ளது. இதனை பூலாங்குறிச்சி கல்வெட்டு தள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இருப்பினும், சிற்பங்களோ, கோயில்களோ காணப்படவில்லை. இதனை அடுத்து, பொ.ஆ. 6 – 8-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், வழக்கத்தில் இருந்த வழிபாட்டில் போற்றப்பட்ட பெண் தெய்வங்களைக் குறித்த கல்வெட்டுகளைவிட சிற்பங்களின் சான்றுகளே குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குக் காணப்படுகின்றன. அக்காலத்தில், வட தமிழ்நாடு பல்லவர் ஆட்சியிலும், தென் தமிழ்நாடு பாண்டியர் ஆட்சியிலும், இடைப்பட்ட பகுதிகள் முத்தரையர் ஆட்சியிலும் இருந்துள்ளது.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட கொற்றவைத் தெய்வமே பல்லவர் காலத்தில் துர்க்கை அம்மனாக வலம் வந்தார். இவரையே போர்க்கடவுளாகவும் ஏற்றுக்கொண்டு, தங்களின் வீரச் செயல்களுக்கு சங்க காலத்தில் கொற்றவையை முன்னிறுத்தினர். பின்னர் வந்த அரச மரபினர், துர்க்கையை முன்னிறுத்தி, தங்களது வாழ்வை வழி நடத்தித்தரவேண்டி அவரை வணங்கி, போற்றி சிறப்பித்தனர். பல்லவ நாட்டில் மட்டுமின்றி, இதே காலகட்டத்தில் பாண்டிய நாட்டிலும் இப்பண்பாடு சிறப்புற வளர்ந்தோங்கியது.

பொ.நூ. 8 – 9-ஆம் நூற்றாண்டுகளில் உள்ள கல்வெட்டுகளைத் தொகுத்துப் பார்த்தபோது, பெண் தெய்வங்களைக் குறிக்க படாரி, பிடாரி, பட்டாரி என்ற வழக்கே மேலோங்கி நிற்கிறது. மாயாபடாரி, மாகாளத்துப்படாரி, துர்க்காபடாரியார், உமாபிடாரி என்ற சொற்களையே கல்வெட்டுகளில் காணமுடிகிறது. ஆலம்பாக்கம் கோயில் கல்வெட்டில், அன்னையர் எழுவர் கோயில், பிடாரி கோயில் என்றே சுட்டப்படுகிறது. எனவே, மக்களிடம் பிடாரி என்ற சொல் வழக்கு மிகவும் செல்வாக்கைப் பெற்றுள்ளது என்பதையே இவை உணர்த்துகின்றன. சாத்தம்படாரி, வேளாண்படாரி, ஆதித்தபடாரி, பட்டம்படாரி என கல்வெட்டுகளில் கையாளப்பட்ட இச்சொற்கள், எளிய மக்களிடத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றிருத்தல் வேண்டும். எனவேதான், இப்பிடாரி என்ற சொல்வழக்கு கல்வெட்டுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில், ஆண்பால் சொல் படாரர் என்றும், பெண்பால் சொல்லாக பட்டாரகியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பிடாரி என்ற சொல் பெண் தெய்வக் கோயில்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது.*12

கல்வெட்டில் இடம்பெற்ற முதல் பெண் தெய்வம்

சங்க இலக்கியங்களில் போற்றப்படும் கொற்றவை, நீலி, சூலி போன்ற பெயர்கள், காலமாற்றத்தால் அரசு உருவாக்கத்தின்போது ஆட்சியாளர்கள் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் காண்பது அரிதாகவே உள்ளது. இருப்பினும், சங்க காலம் முதல் தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்ற தகடூர் நாட்டில் (தற்போதைய தருமபுரி மாவட்டம்), தீர்த்தமலையில் அமைந்துள்ள கோயிலில் உள்ள கல்வெட்டானது, சூலி என்று துர்க்கையைக் குறிப்பிடுகிறது. இதுவே கல்வெட்டில் காணப்படும் முதல் பெண் தெய்வத்தின் பெயராகும். அதன் கல்வெட்டு*13 வாசகம்…

‘ஸ்ரீ பகவதி

     குறுச்

     சூலி

     கோடு

     டையம்(மன்)’

எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வட்டெழுத்து எழுத்தமைதியைக் கொண்டு, இதன் காலத்தை பொ.ஆ. 6-ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்த்தமலை - தருமபுரி மாவட்டம் வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் சூலி (துர்க்கை) உருவம் பொறித்த கற்பலகை.

(படம்: நன்றி – தகடூர் பார்த்திபன், யுத்தபூமி ஆசிரியர்)

{pagination-pagination}

தீர்த்தமலையில் காணப்படும் பலகைக்கல்லில் செதுக்கப்பட்ட இச் சிற்பம், சூலி எனப் பெயர் பொறித்தும், அம்மனின் பெயராக கோடுடையம்மன் என்றும் தெளிவாகக் காணப்படுகிறது. கோடுடையம்மன் என்பதை மலை மீது அமர்ந்த அம்மன் எனப் பொருள் கொள்ளலாம். (கோடு ஸ்ரீ மலை) இதுவே மிகவும் பழமையான சிற்பமாகவும், சங்க இலக்கியங்களில் குறிப்பிடும் பெயர்களில் ஒன்றான சூலி என்ற பெயர் கொண்டதுமாகும் எனக் குறிப்பிடலாம்.

அடுத்து, கல்வெட்டில் இடம்பெற்ற பெண் தெய்வம், உமாதேவிதான். திருச்சி மலைக்கோட்டையின் மேல் அமைந்த குடவரையிலுள்ள பல்லவர் கால கல்வெட்டில், முதலாம் மகேந்திரவர்மனது கல்வெட்டே உமாதேவி பெயரை அறியச் செய்கிறது. “நதிப்பிரியனான சிவபெருமானை தனியே விட அஞ்சி, மலையரசன் மகளும் உடன் வந்ததாகக் கூறுகிறது”. சென்னை வேளச்சேரியிலும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரிலும், அன்னையர் எழுவரைக் குறிக்கும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. திருவொற்றியூரிலுள்ள கோயில் கல்வெட்டு, அன்னையர் எழுவரை சப்தமாத்துருக்கள் என்று அழைக்கிறது. தமிழகத்தில், அன்னையர் எழுவருக்கென்று தனியாக அமைந்த கோயிலாக, ஆலம்பாக்கம் செல்லியம்மன் கோயிலைக் குறிப்பிடலாம்.

மேற்கோள் எண் விளக்கம்

1. சிலப்பதிகாரம் – வழக்குரைக் காதை

2. மு. நளினி, முனைவர் இரா.கலைக்கோவன், பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், திருச்சி, பக். 19.

3. ஆறாம் திருமுறை, பக். 607.

4. முதல் திருமுறை, பக். 195.

5. ஒட்டக்கூத்தர் – தக்கையாக்கப்பரணி.

6. திருமூலர், திருமந்திரம்.

7. H. Krishna Sastri. South Indian Images of God and Goddessess.1916.

8.  Silpasangraham.

9. மேலது.

10. மேலது.

11. H. Krishna Sastri, South Indian Images of God and Goddessess, 1916.

12. மு. நளினி, முனைவர் இரா.கலைக்கோவன், பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், திருச்சி, பக். 21.

13. தருமபுரி மாவட்டக் கல்வெட்டுக்கள். தொகுதி-1. தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com