வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடியில் உள்ள ராஜா-ராணி மலைக்குன்றின் தோற்றம்.
வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடியில் உள்ள ராஜா-ராணி மலைக்குன்றின் தோற்றம்.

காதல் சின்னமாகத் திகழும் ராஜா - ராணி பாறை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிராமத்தில், தாஜ்மஹால் போல, மலைக்குன்று மீதுள்ள ராஜா - ராணி பாறை காதலின் சின்னமாக விளங்கி வருகிறது.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிராமத்தில், தாஜ்மஹால் போல, மலைக்குன்று மீதுள்ள ராஜா - ராணி பாறை காதலின் சின்னமாக விளங்கி வருகிறது.

வாழப்பாடிக்கு அடுத்து 5 கி.மீ. துாரத்தில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சேசன்சாவடி கிராமம் அமைந்துள்ளது. காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தில் தென்கிழக்கு பகுதியில் காணப்படும் சிறிய மலைக்குன்றின் உச்சியில், இரு பெரிய பாறைகள் அருகருகே நீள்வாட்டத்தில் காணப்படுகின்றன.

சேசன்சாவடி கிராமத்தில் இருந்து பார்ப்பதற்கு, அந்த மலைக் குன்றின் மேல் ஒரு ஆணும் பெண்ணும் கம்பீரமாக நிற்பதைப் போல தோற்றமளிக்கிறது. இப்பகுதியை ஆட்சி செய்து வந்த இணைபிரியாத காதலர்களான குறுநில மன்னரும், அரசியும் நீண்ட காலம் வாழ்ந்தபிறகு அந்த மலைக்குன்றில் மறைந்ததாக அப்பகுதி நம்பிக்கை கொண்டுள்ளதால், இப்பாறைக்கு ராஜா-ராணி பாறையென பெயரிட்டு இன்றளவும் அழைத்து வருகின்றனர்.

மலைக்குன்றில் கீழ் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமான காளியம்மன், முனியப்பன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும், இந்த மலைக்குன்றின் மீது ஏறி, தாஜ்மஹால் போல காதல் சின்னமாக விளங்கும் ராஜா-ராணி பாறையை அருகில் சென்று பார்த்துச் செல்கின்றனர்.

இப்பகுதி சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு இந்த ராஜா-ராணி பாறை பொழுதுபோக்கு இடமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த ராஜா-ராணி மலைக்குன்றை சுற்றியும் அரணாக இருந்த கருங்கல் பாறைகளை உடைத்து எடுக்கப்படுவதால், காதலின்  சின்னமாகத் திகழும் ராஜா-ராணி மலைக்குன்று சிதைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த மலைக்குன்றையும், ராஜா-ராணி பாறையும் சிதையாமல் பாதுகாக்கவும், சுற்றிலும் மரம், செடி கொடிகளை வளர்த்து பூங்காவாக மாற்றிடவும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி இளைஞர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com