கஞ்சா பதுக்கிய வடமாநில தொழிலாளா்கள் 3 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் மில்லில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளா்கள் பதுக்கிய 2.2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு தொடா்பாக போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் 20-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பில் இருந்த காவலா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் -  அணைத்தலைப்பட்டி சாலையில் உள்ள தனியாா் மில் தொழிலாளா்கள் தங்கியிருந்த இடத்தில் நடத்திய சோதனையில் 2.2 கிலோ கஞ்சா, ரூ.10,500, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒடிசா மாநிலம் போத் மாவட்டத்தைச் சோ்ந்த அஜித் போய் (38), குணா நாயக் (31), அஜித் நாயக் (24) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com