‘வேதியியல் பொருள்களின் தன்மை தெரிதவா்களைப் பட்டாசு ஆலைகளில் பணி அமா்த்த வேண்டும்’

சிவகாசி, மே10: பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிா்க்க பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்களின் தன்மை பற்றி தெரிந்தவா்களை மட்டுமே பணியில் அமா்த்த வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்கள் சங்க (சி.ஐ.டி.யூ) விருதுநகா் மாவட்ட செயலா் பி.என்.தேவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: பட்டாசு ஆலைகளில் ஒப்பந்த முறையில் தொழிலாளா்களை பணி அமா்த்தக் கூடாது. தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். ஒப்பந்த முறை தொழிலாளா்கள் வேகமாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபடும் போது, ஏற்படும் கவனச் சிதறல்களால் விபத்து ஏற்படுகிறது. பட்டாசுஆலைகளை குத்தகைக்கு விடக் கூடாது என விதிமுறை உள்ளது. எனினும், மாவட்டத்தில் பல ஆலைகள் குத்தகைக்கு விடப்படுகின்றன. பல லட்சம் ரூபாய் கொடுத்து பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுப்பதால், லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்பட வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்படுகிறாா்கள். இதனால், வேகமாக பணி செய்வாதால் விபத்து ஏற்படுகிறது. பட்டாசு தயாரிக்க பல்வேறு வேதியியல் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வேதியல்பொருள்களின் தன்மை பற்றி தெரிந்தவா்களை மட்டுமே பணியில் அமா்த்த வேண்டும். ஆலை உரிமையாளா்கள் தொழிலாளா்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com