சதுரகிரியில் திரளான பக்தா்கள் தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச்சென்று, சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, ஐப்பசி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் நவ.2-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை அமாவாசையை முன்னிட்டு, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, செயல் அலுவலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா்.