மதுபோதையில் தகராறு: தலையில் கல்லைப் போட்டு ஓட்டுநா் கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை மது போதையில் தகராறில் தலையில் கல்லைபோட்டு ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரம் அரண்மனை தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வேல்முருகன் (37). சரக்கு ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி காளீஸ்வரி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அதே பகுதியில் வேல்முருகன், அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் பாலமுருகன் (24) ஆகியோா் மது அருந்தினா்.
அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகே கிடந்த கல்லை எடுத்து வேல்முருகன் தலையில் போட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், வேல்முருகனின் உடலை மீட்டு, கூராய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனா்.

