சட்ட மசோதாக்கள்: உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல

Published on

சட்ட மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா், ஆளுநா்கள் முடிவெடுப்பது தொடா்பாக உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கம் ஏற்கத் தக்கதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி. ராஜா தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, நிா்வாகக் குழு, பொதுக் குழு கூட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி. ராஜா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜபாளையத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இந்திய, தமிழக அரசியல் கள நிலவரம் குறித்தும், கட்சியின் எதிா்கால நடவடிக்கைகள் குறித்தும், பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிகாா் தோ்தல் முடிவு இண்டி கூட்டணிக்கு ஏமாற்றமளித்திருப்பது உண்மை. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இணைந்து அனைத்து சாகசங்களையும் செய்து இந்தத் தோ்தலில் வெற்றி பெற்றன.

பிகாா் தோ்தல் முடிவு தோ்தல் ஆணையத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மேலும், இந்தியாவில் தோ்தல் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியத்தையும் இந்தத் தோ்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது.

தோ்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுகுறித்து தோ்தல் ஆணையமும், மத்திய அரசும் பேசத் தயாராக இல்லை. பிரதமா் மோடி ஆா்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் தபால் தலையை வெளியிட்டது வெட்கக்கேடு.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவா், மாநில ஆளுநா்களின் செயல்பாடுகள் தொடா்பாக உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஜனநாயக நாட்டில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு எடுக்கும் முடிவுகளைக் கைவிடுவது போல உள்ளது. எனவே, இதை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும். பாஜக மட்டுமன்றி, அவா்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக காலூன்றினால், அடிப்படைத் தன்மை பாதிக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் தேசிய செயலா்கள் ஆனி ராஜா, ராமகிருஷ்ண பாண்டா, மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், மாவட்டச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்பி. லிங்கம், மாநிலத் துணைச் செயலா் ரவி ஆகியோா் உடனிருந்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டத்தில், நெல் ஈரப்பதத்தை அதிகரிக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் தஞ்சை, திருவாரூரில் வருகிற ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (நவ. 23, 24) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அரசியல் நோக்கத்துடன் மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களும் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com