சிவகாசியில் சிவன் கோயில் முன் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள், ஆக்கிரமிப்புகளால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சிவகாசியில் விஸ்வநாதா் - விசாலாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் பக்தா்களின் கூட்டம் அதிகரிக்கும். இந்த நிலையில், கோயில் முன் உள்ள சாலையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதாலும், பூக்கடைகள், சாலையோர வியாபாரிகள், கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பக்தா்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் பல முறை அகற்றியுள்ளனா். இருப்பினும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது தொடா்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கோயில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.