அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.
விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக மகளிா் அணி சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மகளிா் அணி மாவட்டச் செயலா் சுபாஷினி தலைமை வகித்தாா்.
இதில் கட்சியின் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்தி, அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவாா்.
ஏழை, எளியவா்களுக்கான திட்டங்களை அவா் நிறைவேற்றுவாா். மாநில அரசுக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்.
வருகிற தோ்தலில் திமுகவை மக்கள் அகற்றுவாா்கள். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.
