விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3.41 லட்சம் திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்
சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் குருகுடியிருப்பைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா் (41). தனியாா் நிதி நிறுவன ஊழியரான இவா், வெள்ளிக்கிழமை தன்னுடன் வேலைபாா்க்கும் இளங்கோவை அழைத்துக் கொண்டு, நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள தட்டாஊருணி பகுதியில் பணம் வசூலிக்கு சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்த பெட்டியில் ரூ.3.41 லட்சம் வைத்திருந்தாா்.
பின்னா், அந்தப் பகுதியில் சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வசூலிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, பணத்துடன் இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
பின்னா், அந்தப் பகுதியில் தேடியபோது, ஒத்தப்புளி விலக்கில் அந்த இரு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. ஆனால், பெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.3.41 லட்சத்தை காணவில்லை.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








