சென்ற இதழ் தொடர்ச்சி
வாசுதேவனின் இந்தப் பதில் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கின்றனர் அனைவரும் . அடுப்படியிலிருந்து காப்பியுடன் வெளிவந்த ஜானகி ஒன்றும் புரியாமல் வாசுவை நோக்குகிறாள்.
"" மனசு பொங்கிய வருத்தம்தான்'' என்கிற வாசுதேவனின் பதிலைக் கேட்டுத் திடுக்கிட்ட டேனியல், ராமு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். வாசுவின் பதிலால் திகைத்து நின்ற ஜானகி, காபியை விருந்தினர்களுக்குக் கொடுத்த பின், வாசுவிடம் நீட்டுகிறாள். வாசுவிடம் , ஜானகியின் கவிபாடும் கண்கள், "" ஏன் வருத்தம் உங்களுக்கு ?'' எனும் கேள்வியில் நீந்துகின்றன.
இந்த வினாவிற்குப் பதில், வாசுவிடமிருந்து ஒரு மாதத்திற்குப் பின், புதுதில்லியில் பரிசளிப்பு விழா முடிந்த அன்றிரவு , ஓர் ஆங்கில ஊடக நேர்காணலில் கிடைக்கிறது:
"" இந்தப் பரிசு பற்றியும் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற உங்கள் புகைப் படங்கள் பற்றியும் உங்களது உண்மையான கருத்து என்ன ?''
"" ஒரு புகைப்படக் கலைஞனாக , ஒரு நிருபராக இந்தப் படம் என்னுள் ஒரு விழிப்பை ஏற்படுத்தியது. பரிசுக்குத் தேர்வு செய்யப் பெற்றுள்ள படம் எடுக்கப் பெற்ற சூழல் பற்றிச் சொல்கிறேன். முன்னர் நான் பணியாற்றிய "தமிழ்க் குரல்' நாளிதழ் ஆசிரியர் மணி சார் ஒரு வினோத நடைமுறையை மேற்கொள்வார். மாநிலத்தில் எங்களுக்கு எங்கெங்கு பதிப்புகள் உள்ளனவோ அந்தந்தப் பதிப்பு நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் இவர்களை ஆறு மாதத்திற்கோர் முறை ஒரு வாரம் மட்டும் வேறெந்தப் பகுதிக்கோ அனுப்பி அப்பகுதிச் செய்திகளைச் சேகரிக்கச் செய்வார். நிருபர்களுக்கு அப்போதுதான் பலவித அனுபவங்கள் கிடைக்கும்; வாசகர்களுக்கும் பல கோணங்களில் இருந்து விஷயங்கள் கிடைக்கும் என்பது அவரது அனுபவ பாடம்.
அப்படித்தான் நான் செல்வபுரம் சென்றேன். ஊரின் பெயரில்தான் செல்வமிருந்தது; வறண்ட பிரதேசம்; வளமில்லா மக்கள்; பச்சைப் பசும் விவசாய நிலம் . எனினும் மண்ணையும் விண்ணையும் நம்பி சிறு பகுதியினர் குழாய்க் கிணற்றுப் பாசனம் செய்தனர்.
திங்கள் காலை பதினோரு மணி. மக்கள் கூட்ட நெருக்கம் மிகுந்த அரசு அலுவலகம். உள்ளே மக்கள் குறை தீர்க் கூட்டம். பெரும்பாலானோர் கரங்களில் வெள்ளைத்தாளைக் கருப்பாக்கியிருந்த மனுக்கள். நடுவே மேசை. அதன் ஒரு பக்கம் நாற்காலிகளில் அதிகாரிகள். எதிர்ப்பக்கம் மர பெஞ்ச்சில் மனு நீட்டிய கரங்கள் கொண்ட ஊர் மக்கள். அதிகாரிகளைச் சுற்றிப் பாதுகாப்பு அரண்போல் ஊழியர்கள் , தரகர்கள், கரை வேட்டிக்காரர்கள். என் காமிராவைத் தலைக்குமேல் உயர்த்தி , கீழ் நோக்கி மேஜைப் பகுதியைப் ஃபோகஸ் செய்து ஏரியல் வ்யூவாகப் படங்கள் எடுத்தேன். பின்னர் , நேரெதிர்க் காட்சிகள் சிலவும் எடுத்தேன். மக்கள் சிலரிடம் அவர்கள் கோரிக்கைகள் பற்றியும் கேட்டுக் குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். அவர்களில் சிலர், விடிவு கிடைத்துவிடும் எனும் மிகு நம்பிக்கையுடன் என்னிடம் செய்தி பகிர்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை. பெரும்பாலும் அரசுத் துறைகள் , பொதுத் துறைகள், வங்கிப் பிரச்னைகள், சட்டம் சார்ந்த தாவாக்கள், காவல் துறை, கடன், வட்டி, மிரட்டல், உருட்டல் எனப் பலப் பலப் பிரச்னைகள்.
குறிப்பெடுத்துக் கொண்டபின் வாசல் படியிறங்கித் தெருவோரம் வேப்பமர நிழல் நாடினேன். வழக்கம் போல் இரை தேடி காமிரா கண்கள் அலை பாய்ந்தன.
அலுவலகத்தின் உள்ளிருந்து நசுங்கிக் கசங்கி சிறுவனின் கரம் பற்றி வெளியே வருகிறார் நாற்பது வயது மதிக்கத் தக்க விவசாயி . மறு கையில் ஒரு மஞ்சள் பை. உழைத்து உரமேறிய கறுத்த உடல்வாகு . ஆனால் , முகமெங்கும் சோகம் கப்பியிருந்தது . கண்களில் அயர்ச்சியும் விரக்தியும் அப்பியிருந்தன.
"சரி, தேநீர் அருந்தி வந்தபின் இவரிடம் இவரது விஷயம் பற்றிக் கேட்போம்' எனக் கருதி கடை அடைந்தேன். முறுக்கு டப்பா மூடி மேல் பத்து ரூபாய்த் தாளை வைத்து "" இதோ பத்து ரூபா வச்சிருக்கேன், டீ குடுங்க'' நுரை பொங்கும் டீயை நீட்டியபடியே, "" டீயக் குடிங்க சார் மொதல்லே . காசெங்கே ஓடிடப் போகுது ?'' என்றவர் , மீதிச் சில்லறையைத் தந்தார். டீக்கடைக்காரரின் சொற்களும் சுவைத்தன. ரசித்துக் குடித்தேன்.
நடுத் தெருவில் அலுவலக வாசல் எதிரே திடீரென ""ஐயோ! ஐயோ! நெருப்பு!'' என்ற அலறல் கேட்டு அருகே ஓடினேன். இயல்பாகக் காமிராவின் லென்ஸில் எனது கை ஓடியது . சற்று முன் நான் கண்ட அந்த நாற்பது வயது நபரும் அந்தச் சிறுவனும் உடலெங்கும் தீ யுடன் அங்கும் இங்கும் ஓடுகின்றனர் ... "" வேண்டாம் அப்பா ! அப்பா வேண்டாம்ப்பா'' என அலறும் சிறுவனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது .
நான் தரையில் படுத்து, மண்ணுக்கும் விண்ணுக்குமாய் அச்சிறுவன் ஓடுவதைப் படம் பிடிக்கிறேன். டில்ட் செய்கிறேன் , மேலும் சில கோணங்களில் படம் எடுக்கிறேன்.
அருகிருக்கும் மக்கள் சிலர் தெருவோர மணலை அள்ளி அவ்விருவர் மீதும் வீசுகின்றனர் . டீக்கடைக்காரர் , தம் கடையிலிருந்து நசுங்கிய அலுமினிய வாளித் தண்ணீரைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார் .
சிறுவன் அங்குமிங்கும் ஓடி தரையில் சரிகிறான் . அருகே , அந்த நாற்பது வயது நபர் விழுகிறார் .
நான் , எழுந்து ஓரமாகச் சென்று 108 க்குப் ஃபோன் செய்கிறேன்; விவரம் கூறுகிறேன்.
அதன் பின் எனது ஆசிரியருக்குப் போன் செய்து பதட்டத்துடன் தகவல் தருகிறேன். ஒருநாள் தங்கித் தகவல் சேகரித்து, மறுநாள் சென்னை வரச் சொல்கிறார் . பகல் ஒரு மணிக்குள் படமும் செய்தியும் உடனுக்குடன் அனுப்பச் சொல்கிறார்.
ஜீப்புகள், வேன்கள், ஆம்புலன்ஸ் வருகின்றன. சிறுவனும் அவனது தந்தையும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். நானும் பின் தொடர்ந்து மருத்துவமனை செல்கிறேன் . ஊர்க்காரர்கள் தந்த தகவல்கள் , காவல்துறை தரும் தகவல்கள் எல்லாம் சேகரிக்கிறேன்.
வாங்கிய கடனில் பெரும்பகுதி வட்டியுடன் அடைக்கப் பட்டுவிட, மீதமுள்ள அசலும் வட்டியும் மூன்று மாதங்களாகத் தரப்படவில்லை.
பொய்த்துப்போன விவசாயம் , கரும்பு விற்பனை நிலுவைத் தொகை என ஒரு பக்கம் சுமை அழுத்தம், மறுபக்கம் வட்டி, வட்டிமேல் வட்டி கேட்டு மிரட்டல், உருட்டல் அதிகரிக்க , அரசு அதிகாரிகளிடம் முறையீடு, காவல்துறையினரிடம் முறையீடு, எந்தவித ஆதரவான அரசு நடவடிக்கையுமில்லா நிலையில் மறு பக்க அழுத்தம் ...
இதற்கெல்லாம் தீர்வாய் இந்தத் தீக்குளிப்பு விடை கொடுக்கும் என நைந்த மனசின் முடிவு ....
""அதெல்லாம் சரிங்க , அந்தப் பச்சைப் புள்ளை , அது என்ன பாவம் பண்ணுச்சுங்க ? அவனையுமில்ல தீக்கிரையாக்கிப்புட்டான் பாவிப் பய ...'' என்ற ஊர்க்காரர்கள் புலம்பலும் தொடர்ந்தது .
பகலில் படமும் செய்தியும் சென்னைக்கு அனுப்பிவிட்டேன் .
இரவில் உறக்கமின்றி எழுந்து நடந்தேன் ...
மறுநாள் பகல் , ஈருயிரும் விண்ணில் பறக்கக் கரிக்கட்டைகளாய் அந்த உடல்கள் மட்டும் வீடு திரும்ப , அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படப் பதிவாக்கிக் கொண்டு கனத்த இதயத்துடன் சென்னை பயணப்பட்டேன் .
வழக்கமாய் உற்சாகம் தரும் ஜன்னலோரப் பயணம் அன்று நேர்மாறானது. விட்டில் பூச்சிகளாய் கரும் இருளில் தோன்றி மறையும் ஒளிப் பூக்களைக் காண மறுத்து ஜன்னலை மூடிவிட்டேன் . மனசென்னவோ புயலில் தலை விரித்தாடும் பனைமரமானது ...
அலுவலகத்தில் பெரும் பாராட்டு ! மிகச் சிறப்பாக இருந்தது நான் எடுத்திருந்த சிறுவனின் படம் என்பதாக ஒவ்வொருவரும் தனித் தனியே வந்து கை கொடுத்தனர் .
ஆசிரியர் மணி சார் என்னைத் தனியாக அவர் அறைக்கு அழைத்தார். சென்றேன். என் தோளணைத்துத்துக் கூறினார் : "" விசு ! முதல்ல எல்லோரது பாராட்டுக்களையும் மனசுல வாங்கிக்குங்க . சொல்கிற வேலையைச் செய்யும் வெறும் யந்திரமல்ல மனுஷன். அப்படியும் பலபேர் எல்லாத் துறையிலும் இருக்காங்க. ஆனா, நீங்க ரொம்ப இந்த விசயத்தால பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன் .
உண்மைதான். நிஜமான எந்தக் கலைஞனும் இப்படித்தான் இருப்பான்''.
நான் அவரை இடைமறித்தேன்: "" அதில்லை சார் ! ஒரு நிமிஷம் நான் இந்தக் காமிராவைத் தூக்கிப்போட்டுட்டு ஓடிப்போய் அந்தப் பயலை மட்டுமாவது காப்பாத்தி இருக்கலாமோன்னு தோணுது . கண்ணு முன்னாடி ஓர் உயிர் பறிபோகுது. காப்பாத்த முயலாமே அதைப் படம் பிடிக்கிறது என்ன நியாயம்னு புரியலை சார் . மொதல்ல ஒரு புகைப்படக் கலைஞனாகத்தான் லோ ஆங்கிள் ஷாட்டா அந்தப் பையனை வானுக்கு உயர்ந்து காண்பிக்கிற வகையில் நான் தரையில் படுத்தெல்லாம் அந்தக் காட்சியைப் படமெடுத்தேன் . அந்த நெருப்பின் சூடு அந்தக் கணத்தில் எனக்கு உறைக்கலை. ஆனா, அந்தப் பையன் அங்கே இங்கே உயிருக்கு மன்றாடி ஓடினப்போ நான் ஓடிப்போய், முடிஞ்சா காப்பாத்தியிருக்கணுமேங்கிற கடமையுணர்வுதான் என்னைக் கொடையுது. சார், ராத்திரி படுத்தா தூக்கம் வரலை. கண்ணை மூடினா அந்தப் பையன் உயிருக்குப் போராடின அந்தத் தவிப்புத்தான் நிழலாடுது ...''
"" உண்மைதான் விசு ! கூடியிருந்த மத்தவங்க ஓடிவந்து காப்பாத்த முயன்றது எல்லாமும் அங்கே நடந்து தானே இருக்கு . மனுஷனா நீ உன் கடமையைச் செய்யலைங்கிற குற்ற உணர்வு உனக்கு இனியும் வேண்டாம் . நீயும் ஆம்புலன்சுக்குப் ஃபோன் செய்திருக்கே ...''
"" என்ன சொன்னாலும் எனக்கு மனசு ஆறலை சார் ...''
"" விசு , முதல்ல தண்ணியைக் குடி .... இந்தா! இத பாரு , இப்ப நான் சொல்றத நிதானமாக் கேளு . நீ
எடுத்தனுப்பிய புகைப்படங்களும் , சேகரித்தனுப்பிய செய்தியும் எவ்வளவு முக்கியமான தகவலை இந்த க்கள்கிட்டே கொண்டுபோய்ச் சேர்த்திருக்கு தெரியுமா ? எந்த ஒரு படைப்பாளிக்கும் , எத்துறைக் கலைஞனுக்கும் , எந்த வழிச் செய்தியாளனுக்கும், ஊடகக் கலைஞனுக்கும் இந்த மாதிரி செய்திகளை விஷயங்களைப் பதிவு செய்து மக்கள்கிட்டே பகிர்ந்துக்கறதுதான் முதல் கடமை . சக மனுஷனா அங்கே நீ செயல்படலையேங்கிற குற்ற உணர்வை விட, அந்த விஷயங்களைப் பதிவு செய்ஞ்சு அதை ஊடகம் வழியா பொதுமக்களுக்கும் உரிய துறை அதிகார வர்க்கத்துக்கும் கொண்டு வந்து தந்திருக்கேங்கிற நிலையிலே உன் கடமையை நியாயமாகவே, முழுமையாகவே செய்திருக்கே நீ . இனியும் இந்த மாதிரி அவலப் போக்குகள் நடவாதிருக்க இச் செய்தியும் படமும் பயன்படும்ங்கிற நம்பிக்கை உனக்கு வேணும் . இது ஒரு வணிக நோக்கமல்ல; சமூக அக்கறைங்கிற புரிதல் உனக்கு வேண்டும். இந்த அவலங்களுக்குக் காரணகர்த்தாக்களையும் அடையாளங் காட்டும் உனது இந்தப் படங்கள் !''
ஊசலாடிய என் மனசை ஒரு நிலைக்குக் கொண்டுவர உதவியது மணி சாரின் பேச்சு. இயல்புக்கு வர முயன்ற நான் அவரைத் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவரே தொடர்ந்தார்:
"" நீ தானே விசு , கொஞ்ச நாள் முன்னாடி வேற ஒரு படமும் செய்தியும் தந்தாய் . பிறந்து சில மணி நேரமேயான ஒரு பச்சிளங் குழந்தையை ஒரு துணியில் சுற்றி குப்பைத்தொட்டி அருகே யாரோ வைத்துச் சென்றுவிட , அந்தக் குழந்தைக்கு எந்தத் தீங்கும் வந்துவிடாதிருக்க , நான்கைந்து நாய்கள் அந்தக் குழந்தையருகே காவலிருந்து குரைத்து, மக்களின் கவனத்தைக் கவர்ந்து அக் குழந்தையைக் காப்பாற்ற முயன்றதை உன் புகைப்படங்கள் தானே வெளியுலகிற்குக் காண்பித்தன ? அப்போது நீயுந்தானே அருகிருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் தந்து அக் குழந்தையைப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கும், பின்னர் விடுதிக்கும் அனுப்ப உதவினே? நீ எடுத்த அந்தப் படமும் தந்த செய்தியும் எவ்வளவு கவனம் பெற்றன !''
ஆசிரியர் மணி சார் சொன்னதை ஆமெனத் தலையசைத்து ஆமோதித்துப் பெருமூச்சு விட்டேன்.
* * *
""ஹ ம் ... ஆக , பிறப்பிலும் இறப்பிலும் ஒரு கலைஞனாகவும் மனிதனாகவும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை எனக்கு உணர்த்திய இந்த இரு நிகழ்வுகளின் படங்களையும் "தமிழ்க் குரல்' ஆசிரியர் மணி சார் தான் மும்பைக்கு அனுப்பிவைத்துள்ளார்! இப்போது இந்தப் பரிசின் அடிப்படையே அவர்தான்! என் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்ததும் என் மனதைப் பக்குவப் படுத்தியதும் ஆசிரியர் மணி சார் தான்.
தீயில் கருகிய சிறுவனின் புகைப்படமும் , நாய்கள் புடை சூழ புதரருகே கிடந்த பச்சிளங் குழந்தையின் புகைப்படமும் தான் பரிசுக்கு உரியவை எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. இவையிரண்டுமே இரு வேறு நிலையில் எனக்கு வருத்தம் தந்தவை தானே ! இந்தப் பரிசும் பாராட்டும் எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அதற்குரிய காரணிகளாக அமைந்த இந்தச் சமூக நிலையும் எனக்கு வருத்தம் தந்தவைதானே, சொல்லுங்கள் ?''
இந்தக் கேள்வி கேட்கும் விசுவநாதனின் முகத்தில் நேர்காணல் நிறைவு கண்டது ! கேள்விகள் மட்டும் கேள்விகளாகவே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


