பிடித்த பத்து: புடவையால் கிடைக்கும் மரியாதை!
இந்தப் பிரபஞ்சத்தில் இசைக்கு மயங்காத உயிரினங்கள் இல்லை. இசைக்கு மொழி கிடையாது. இன, மத, வேறுபாடு கிடையாது.


இசை: இந்தப் பிரபஞ்சத்தில் இசைக்கு மயங்காத உயிரினங்கள் இல்லை. இசைக்கு மொழி கிடையாது. இன, மத, வேறுபாடு கிடையாது. பசு மாடு கூட இசையைக் கேட்டு பால் சுரக்கும். கொடிய விஷம் உள்ள நாகப் பாம்பும் இசை கேட்டு நர்த்தனம் ஆடும். இசை கேட்டால் இந்த உலகமே அசைந்தாடும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? இந்த இசைதான் எனக்கு எல்லாம் என்று கூறும்போது என் நெஞ்சம் துள்ளிக் குதிக்கிறது.
குருநாதர்கள்: உண்மையிலேயே எனக்கு பலர் குருநாதர்கள் உண்டு. ஆரம்பத்தில் நான் இசையை கற்றுக்கொண்டு பாடியதெல்லாம் என் தாயார் ராஜலஷ்மி சேதுராமனிடம்தான். நன்றாகப் பாடுவார்கள். நான் படித்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில. நான் பாடியதைக் கேட்ட என் குரு டி. பிருந்தா என்னை அழைத்து தனது சிஷ்யையாக சேர்த்துக் கொண்டார். ஆங்கிலத்தில் சொல்வார்களே guru finds her sisya அது இது தான். என்னை ஈர்த்த பாடகி என்றால் அவர் இசையரசி எம்.எஸ். தான். அவர்களது குரலில் ஒரு தெய்வீக தன்மை இருக்கிறது.
இடம்: நான் உலகெல்லாம் சுற்றி வந்திருக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா, மொரோக்கோ என்று பல நாடுகளில் கச்சேரியும் நடத்தியிருந்தாலும் பிடித்த நாடு என்ன என்று என்னை கேட்டால், எனது இந்தியா என்று தான் சொல்வேன். அதிலும் நமது தமிழ்நாட்டுக்கு ஈடு இணை வேறு எந்த நாட்டையும் கூற முடியாது. இங்கு மக்கள் ரசனையே தனி. தவறை சுட்டிக்காட்டவும், ஒரு நல்ல கச்சேரியை ரசித்து பாராட்டவும் தெரிந்தவர்கள். அதிலும் தமிழ் பாடல் பாடும்போது அவர்கள் தரும் பாராட்டு எந்த ஒரு கலைஞனையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்துவிடும்.
சாப்பாடு: நான் சாப்பாட்டுப் பிரியை கிடையாது. அதே சமயம் நல்ல ருசியான சாப்பாடு கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? நான் சுத்தமான சைவம். எனக்கு மிகவும் பிடித்த உணவு வத்தக் குழம்பு அல்லது மிளகு குழம்பு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட். இத்துடன் சுடச்சுட ஆவி பறக்கும் சாதம், கொஞ்சம் நெய். இந்தக் கலவைக்கு ஈடு இணை வேறு எந்த உணவும் கிடையாது.
உடை: நான் ஒரு முறை ஐரோப்பா சென்றிருந்தேன். அது 1980 -85 என்று நினைக்கிறேன். அன்று எல்லாம் இன்று எடுத்துப்போகும் அளவிற்கு எலக்ட்ரானிக் சுருதி பெட்டி வரவில்லை. பெரிய தம்புராவை கையில் வைத்துக் கொண்டு நான் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தேன். இதை தவிர என்னுடைய பெட்டிகள் வேறு. ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt Airport) விமான நிலைய வாசலில் நின்று கொண்டிருந்தேன். என்னை அழைத்துப் போக வேண்டியவர்கள் வரவில்லை. நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருக்கும்போது ஒரு ஜெர்மன் நாட்டவர் வந்து என்னை நெருங்கி "நான் உதவட்டுமா' என்றார். நானும் சரி என்று சொன்னவுடன் அவரே என்னை நான் போகும் இடம் வரை கொண்டுவந்து விட்டு விட்டுச் சென்றார். அப்படி போகும்போது என்னிடம் அவர் சொன்னது என்ன தெரியுமா? ""நீங்கள் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைத்தேன். அதற்கு உங்கள் புடவைதான் காரணம். இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் நான் தைரியமாக உங்களிடம் வந்து உதவி செய்யலாமா என்று கேட்டேன்'' என்றார். நான் கச்சேரிகளுக்குப் போகும்போது கண்டிப்பாக பட்டுப் புடவைதான் உடுத்துவேன். வெளிநாட்டில் கூட நான் புடவைதான் அணிவேன். குளிர் அதிகம் என்றால் கூட புடவை தான்.
புத்தகங்கள்: மும்பையில் இருக்கும் போது பி.ஜி. உட்ஹவுஸ், சாமர்செட் மாம் எழுதிய புத்தகங்களைப் படித்துள்ளேன். நமது இந்திய எழுத்தாளர்கள் என்றால் ராமச்சந்திர குஹா புத்தகங்களில் விருப்பம் அதிகம். தமிழில் கல்கியின் சரித்திரக் கதைகளான "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்' ஆகிய புத்தகங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரும்பத் திரும்ப படிப்பேன்.
நண்பர்கள்: பள்ளிப் பருவ தோழிகள் பலர் இப்பொழுதும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அப்புறம் கல்லூரி நட்பு. நல்லதோ கெட்டதோ எது என்றாலும் இவர்களிடம் நான் பகிர்ந்து கொள்வேன். அவர்களும் அப்படியே. நெருக்கமான நண்பர்கள் என்றால் ஒரு நான்கைந்து பேர் இருக்கிறார்கள். இந்த நட்பு உலகம் முழுவதும் எனக்கு இருக்கிறது.
வண்ணங்கள்: எனக்கு கிருஷ்ணனை மிகவும் பிடிக்கும். அவனது குழல் எப்படி இசையோடு சம்பந்தப்பட்டதோ அதே போல்தான் எனது வாழ்க்கையும், அவனது கருணையினால் நிரம்பப் பெற்றது. எனது படுக்கை அறையில் நான் கண் விழிக்கும் போது அவனது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டே எழுந்திருப்பேன். அதே போல் இரவு படுக்கைக்குப் போகும் போதும் அந்த நீலமேக ஷியாமளனை வணங்காமல் படுக்க மாட்டேன். என்னை வாழவைக்கும் கிருஷ்ணன் என்ன வண்ணம் என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு விருப்பமான கலரும் அதுதான்.
பயணம்: சிறு வயதில் என் தாயார் என்னைப் பலமுறை பயணங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒருமுறை திருவேங்கடம் முதல் குமரி வரை பல்வேறு திவ்ய சேத்திரங்களுக்கு சென்றோம். என் தாயார் ஒவ்வொரு கோயிலின் உள்ளேயே என்னை உட்கார வைத்து ஒரு பாடலை பாடச்சொல்வார். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இப்படி நான் கோயில் கோயிலாக சென்று பாடிய பாடல்கள் இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
திரைப்படங்கள்: நான் பல படங்களைப் பார்த்திருந்தாலும் இன்றும் உட்கார்ந்து பார்க்கத் தூண்டும் படம் "தில்லானா மோகனாம்பாள்'. அதே போன்று இன்னொரு படம் உண்டு. அது "மைக்கேல் மதன காமராஜன்'. இந்த இரண்டு படங்களையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் என்றும் பார்க்க தூண்டும் படம் "காட் பாதர் சீரிஸ்' (God Father Series). இந்தியில் "மதர் இந்தியா'. நல்ல பொழுதாக போக வேண்டும் என்றால் இந்தப் படங்களை பார்த்தாலே போதுமே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...