பிரச்னை: இலவச டிவி + இலவசப் புத்தகங்கள்!

அனைத்துத்துறை நூல்களையும் வெளியிடும் தமிழ்ப் பதிப்பகத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால், உடனே சொல்லிவிடலாம் நர்மதா பதிப்பகம் என்று. புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குத் தரும் அதே முக்கியத்துவ
பிரச்னை: இலவச டிவி + இலவசப் புத்தகங்கள்!

அனைத்துத்துறை நூல்களையும் வெளியிடும் தமிழ்ப் பதிப்பகத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால், உடனே சொல்லிவிடலாம் நர்மதா பதிப்பகம் என்று.

புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை அதன் கட்டமைப்பிற்கும் தருவது நர்மதாவின் தனிச்சிறப்பு.

நவீன தமிழ் இலக்கிய நூல்களை வெளியிட்ட முன்னோடி நிறுவனங்களில் அதுவும் ஒன்று.

நர்மதா பதிப்பகத்தின் உரிமையாளர் ராமலிங்கத்துடன் உரையாடினோம்.

முன்பைக் காட்டிலும் இப்போது புத்தகக் கண்காட்சிகள் அதிகம் நடைபெறுவதால் புத்தக விற்பனை அதிகம்தானே?

புத்தகக் கண்காட்சிகள் இப்போது நிறைய நடக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவற்றில் அதிகம் விற்பனையாவது வியாபார நோக்கத்தோடு வெளியிடப்படும் புத்தகங்கள்தாம். நல்ல இலக்கியப் புத்தகங்களோ, ஆன்மீகப் புத்தகங்களோ விற்பனையாவதில்லை.

நூலக ஆர்டர் கிடைக்கிறதல்லவா? அவற்றிற்குப் புத்தகங்கள் தேவைப்படுமே?

எல்லா நூல்களும் வாசகர்களால் படிக்கப்பட வேண்டும். அதற்கு நூலகங்களை விரிவுபடுத்த வேண்டும். நூலகங்களில் இப்போது புத்தகம் தேர்வு செய்யும்முறை பற்றிய விமர்சனம் ஒருபுறம் இருக்க, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகத்திற்குத் தரும் விலைதான் கவலைப்பட வேண்டிய விஷயம். 16 பக்கத்திற்கு ரூ.2.80 என்று நிர்ணயித்துள்ளார்கள்.

மட்டமான தாளில் நல்ல அச்சமைப்பு இல்லாமல் உள்ள புத்தகத்திற்கும் இதே விலைதான். சிறப்பான அச்சமைப்பும் நல்ல கட்டமைப்பும் உள்ள புத்தகத்திற்கும் இதே விலைதான்.

நல்ல விஷயங்களைச் சிறந்த வடிவமைப்பில் கொடுக்க நல்ல பதிப்பாளர்கள் நினைப்பார்கள். சமஸ்கிருதத்தில் "புஸ்தகம் ஹஸ்தபூஸணம்' என்பார்கள். கைக்கு அழகு புத்தகம் என்பது இதன் பொருளாகும். ஒரு புத்தகம் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருந்தால் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் படிக்கத் தோன்றும்.

நூலகத்திற்குப் புத்தகம் வாங்கும் போது பல வண்ணங்களில் போட்டாலும், நல்ல பைண்டிங் செய்து தந்தாலும் ஒரே விலையைத்தான் நிர்ணயிக்கிறார்கள். இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டால் நல்லது.

ஏராளமான பதிப்பகங்கள் பெருகி வரும் வேளையில் நூலகத்திற்கு எப்போதுமே அதிக நிதி தேவைப்பட்டுக் கொண்டே இருக்குமே?

கோவாவில் விற்கப்படும் ஒரு லிட்டர் மதுவுக்கு 50 பைசா நூலக வரியாக எடுத்துக் கொள்கிறார்கள். அதை வைத்து நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் அதிகம் விற்கும் பொருள் சாராயம். இங்கேயும் அதுபோல் கொண்டுவந்தால் அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் மொபைல் நூலகங்களின் மூலம் அவர்கள் இருக்கும் தெருவுக்கே புத்தகங்களைக் கொண்டு செல்ல முடியும். இதனால் நல்ல பண்பு வளரும். குற்றங்கள் குறையும். போலீஸýக்கும், சிறைச்சாலைகளுக்கும் ஆகும் செலவு குறையும்.

சாராயம் பின்தங்கிய மாவட்டங்களில்தான் அதிகம் விற்பனையாகிறது. ஏனென்றால் அங்கே கல்வித்தரம் குறைவு; சமூக விழிப்புணர்வு குறைவு. இந்த விழிப்புணர்வை நூலகங்களின் மூலம் ஏற்படுத்தலாம்.

எல்லாரும் புத்தகம் படிப்பதில்லை. ஒருவருக்கு புத்தகம் படிக்க ஆர்வம் இருக்கும். ஆனால் வாங்கக் காசு இருக்காது. அப்படிப்பட்டவர்களின் ஆர்வம் காசு இல்லாத காரணத்தால் வீணாகப் போய்விடக் கூடாது. எத்தனை புத்தகக்கண்காட்சிகள் நடைபெற்றாலும் நூலகங்களும் இருக்க வேண்டும்.

புத்தகம் படிக்கும் பழக்கத்தை மக்களிடம் அதிகரிக்க அரசாங்கம் வேறு என்ன செய்யலாம்?

அரசாங்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாகக் கொடுக்கிறது. அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளுடன் ரூ.300 மதிப்புள்ள புத்தகங்களையும் இலவசமாகக் கொடுக்கலாம்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான தமிழ் அகராதி, ஆங்கில அகராதி, குழந்தை வளர்ப்பு தொடர்பான புத்தகங்கள், சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சியைப் பார்ப்பதால் ஏற்படும் ஒழுக்கச் சிதைவை இந்தப் புத்தகங்களின்மூலம் ஓரளவுக்காவது குறைக்க முடியும்.

கம்ப்யூட்டர் வந்துவிட்டதால் புத்தகத் தயாரிப்பு எளிதாகியிருக்கிறதல்லவா?

அது உண்மைதான். புத்தகத் தயாரிப்பைப் பொறுத்தவரையில் பைண்டிங் செய்வதுதான் பிரச்னையாக உள்ளது. மிகச் சிறந்த புத்தகத்தை நல்ல தரமான, கனமான அட்டையுடன், கட்டமைப்புடன் ஒரு பதிப்பாளர் கொண்டு வர நினைப்பது இயற்கை. ஆனால் இங்கே நல்லமுறையில் கட்டமைப்பு செய்துதரும் நிறுவனங்கள் குறைவு. அந்த நிறுவனங்களிலும் தேர்ச்சி பெற்ற, சிறந்த தொழிலாளிகள் கிடைப்பது அரிது.

ஐந்நூறு பக்கம் ஆயிரம் பக்கம் என்று புத்தகங்களை உருவாக்குகிற பதிப்பாளர்கள் சிறந்த கட்டமைப்புடன் புத்தகம் வெளிவர வேண்டும் என்று நினைப்பது இயற்கைதானே?

ஐடிஐயில் நூல்கட்டமைப்பிற்கென்று படிப்பெல்லாம் உள்ளது. ஆனால் யாரும் ஆர்வமாகச் சேர்வதில்லை. நல்ல கட்டமைப்புடன் புத்தகங்கள் இருந்தால் சாதாரண மக்களுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படும்.

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருந்தபோதிலும் நல்ல தரமான விஷயங்கள் உள்ள புத்தகங்களைப் பதிப்பிப்பது தமிழில் குறைவு என்று கூறப்படுகிறதே?

நல்ல தரமான இலக்கியப் புத்தகங்கள், ஆன்மீகப் புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்று நினைக்கிற பதிப்பாளர்கள் கூட ஜோதிடம், சுயமுன்னேற்றம், சமையல் என்று விற்பனையாகிற புத்தகங்களாகப் போட வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகங்களை வெளியிடவில்லையென்றால் நல்ல புத்தகங்களை வெளியிடுவதற்கு முடியாது.

வாசகர் வட்டம் என்ற தரமான புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகம் இப்போது செயல்பட முடியவில்லை. அந்தநிலைதான் பிறருக்கும் ஏற்படும்.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பதிப்பகங்கள் ஏதாவது இஸத்தைச் சார்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம், புரட்சிகர அமைப்பு என்று எந்த இஸத்தையாவது சார்ந்து நின்றால் புத்தகங்களை விற்பனை செய்வது எளிது.

நீங்கள் சம்பந்தப்பட்ட அந்த அமைப்பின் கருத்துகளுடன் முழுவதும் உடன்பட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. மனமாற அந்த அமைப்பை, கொள்கையை நேசிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. நீங்கள் அந்த அமைப்பை நம்புகிற மாதிரி காட்டிக் கொண்டால் போதும். இந்தநிலைதான் தமிழ்ப் பதிப்புலகில் ஆதிக்கம் வகிக்கிறது.

இது இஸம் சார்ந்த பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களைப் படிப்பதில் மட்டும் கொண்டு போய்விடுகிறது. பிற பதிப்பகங்கள் எவ்வளவு நல்ல புத்தகங்களைக் கொண்டு வந்தாலும் வரவேற்பைப் பெறுவதில்லை. இந்தக் குழுமனப்பான்மை முதலில் அகல வேண்டும்.

பொதுவான பதிப்பாளர்களுக்காக இயங்கும் பதிப்பாளர் சங்கங்கள் கூட இந்தக் குழுமனப்பான்மைக்கு விதிவிலக்கல்ல. இதில் செயல்படுவர்களிடம் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் போக்கைப் பார்க்க முடிகிறது. அரசியல் தன்மை எல்லா இடத்திலும் இருக்கிறது.

இந்த நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு புத்தகம் போட வேண்டியிருக்கிறது.

உங்கள் பதிப்பகத்தின் சிறந்த நூல்கள் என்று எதைக் கருதுகிறீர்கள்?

எங்கள் பதிப்பகத்தைப் பொறுத்தவரை தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் நூல்களை பதிப்பித்திருக்கிறோம். அசோமித்திரன், ஜெயந்தன், நீல பத்மநாபன், பாலகுமாரன், சுப்ரமண்யராஜூ, க.நா.சு. போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். வண்ணநிலவனின் "கடல்புரத்தில்' என்ற சிறந்த நாவலை நாங்கள்தான் வெளியிட்டோம். விட்டல்ராவ், சா.கந்தசாமி, இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா ஆகியோரின் நூல்களையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறேம்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள், ஓஷோவின் நூல்கள், ஜென் தத்துவங்கள் என சிறந்த நூல்களைப் பதிப்பித்து வருகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com