

ஜன நெரிசல் அதிகம் உள்ள ஒரு தெருவில் என் வீடு அமைந்துள்ளது. எந்நேரமும் தெருவில் வாகன ஒலிப்பான்களின் அலறல் கேட்டுக் கொண்டே இருக்கும். இது வேதனையாக உள்ளதுடன், நாளடைவில் என் காதின் கேட்கும் திறன் குறைந்துவிடுமோ? என்று பயமாக உள்ளது. கேட்கும் திறன் குறையாது இருக்க ஆயுர்வேதத்தில் தீர்வு ஏதேனும் உள்ளதா?
ராஜா, சென்னை - 21
சரகர் தான் இயற்றிய சரகஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் குறிப்பிடுவதாவது - மிகக் கொடூரமான ஒலியைக் கேட்பது, எவ்வகையிலும் ஒலியே கேட்காதவாறு செய்து கொள்வது, காதால் நன்கு கேட்க முடியாத அளவிற்குக் குறைந்துள்ள ஒலியை உற்றுக் கேட்பது இவை தொடர்ந்தால் மனிதன் ஜடமாகிவிடுவான். கொடூரமானதும், பயங்கரமானதும், அமங்கலமானதும், விரும்பாததும், பின்வரும் கெடுதலை உணர்த்துவதுமான சொற்களையே கேட்பது முறை தவறிய கேட்பு. இதுவும் உடல், மனநிலையைப் பாதிக்கும்.
அவர் மேலும் குறிப்பிடுவதாவது - பொதுவாக மனித உடலையும் மனமும் பாதிப்புறச் செய்பவை சில. தனியாக அவரவரை மட்டும் பாதிப்புறச் செய்பவை சில. இவற்றை அஸôத்மயம் என்பர். தன்னோடு பொருந்தாதவை என இதற்குப் பொருள். மனிதன் தன் புலன்களால் உலகுடன் தொடர்பு கொள்கிறான். இது பொதுவாகவும், அவனவனுக்கும் இசைந்து இதமாகவும் அமையுமானால் ஸôத்ம்யம். இதற்கு எதிரானவை அஸôத்ம்யம். அருகாமையில் இடைவிடாமல், ஒலி பெருக்கிகளின் மூலம் தான் விரும்பாத ஒலி வடிவம், தன்னால் தாங்க முடியாத ஒலிப் பெருக்குடன் கேட்குமேயானால் மனிதன் தெளிவை இழப்பான். கலக்கமுறுவான். இனமறியாத ஜடத்தன்மை பெறுவான் அல்லது மூர்க்கனாவான்.
எந்தச் சிகிச்சை முறையாலும் குறையாத பல வேதனைகளுக்கும் இதுவே காரணம். அத்தகைய சூழ்நிலையை விட்டு தாம் அகலுவதோ, அவற்றைத் தம் சூழ்நிலையிலிருந்தும் அகற்றுவதோ அல்லது அவை பாதிக்காத அளவு தற்காப்பு செய்து கொள்வதோ இதற்கு மாற்று. மூன்றும் முடியாவிடில், இதனை விதி எனலாம்.
வாத தோஷத்தின் உடல் இருப்பிடங்களில் காதுகளும் இடம் பெறுகின்றன. அதன் குணங்களாகிய வரட்சி, லேசானது, குளிர்ச்சி, நுண்ணியது, அசைவு போன்றவை உங்களுக்கு அதிக சத்தத்தினால் காதினுள் அதிகமாகி, வாதத்தின் சீற்றம் பெருகி, காதுகள் கேட்காத நிலையும் ஏற்படக்கூடும். ஆகையால் முன்னெச்சரிக்கையாக நீங்கள் தினமும் காலையில் தலைக்குச் க்ஷீரபலா தைலம் வெதுவெதுப்பாகத் தடவுவது, காதின் உள்ளேயும், அதனைச் சுற்றி வெளிப்புறங்களிலும் வசாலசுனாதி தைலத்தை இளஞ்சூடாக சுகம் தரும் வகையில் விட்டுக் கொள்வதும், தேய்த்துக் கொள்வதும் மிகவும் நல்லதாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்தெடுத்த துணியால் காதுகளைச் சுற்றி ஒத்தடம் கொடுப்பதும் மிகவும் நல்லதே.
தலையில் குளிர்ந்த நீரை விட்டுக் குளிப்பது. பிரயாணங்களில் காதினுள் செல்போன் ஒயரைச் சொருகி பாட்டுக் கேட்பது, அலுவலகத்தில் கடும் இரைச்சல் உள்ள பகுதியில் வேலை செய்வது, கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, பட்டாணி, வேர்க்கடலை, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது போன்றவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். அடிக்கடி செல்போனில் பேசுவது, தலைப் பகுதியில் காற்றுப்படும் படி டேபிள் மின்விசிறியைப் பயன்படுத்துவது, ஏசி அறையில், ஏசி உபயோகத்தின் நடுவே, மின்விசிறியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களையும் தவிர்க்கவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.