

பிரபுவைப் பற்றி சங்கர் சொன்ன விஷயம் மகேஷின் தலைக்குள் எரிமலையை உருவாக்கியது.
""சங்கர், நெஜமாத்தான் சொல்றியா... அந்த ராஸ்கல், இப்ப சென்னையில்தான் இருக்கானா...நல்லா பாத்தியா.. அது அவன்தானான்னு?''
""ஆமாம் மகேஷ். நானென்ன உன்கிட்ட பொய்யா சொல்லப் போறேன். பிரபுவை ஒருநாள் தி.நகரிலேயும் இன்னொரு நாள் வடபழனி ஏ.வி.எம்.க்கு எதிரேயும் பார்த்தேன். பைக்கிலே போய்க்கிட்டிருந்தான். அவனுக்கு இங்கேதான் வேலை கிடச்சு ஜாயின்ட் பண்ணியிருப்பான்னு நெனைக்கிறேன்.''
""அவனைச் சும்மா விடக் கூடாது. ஊரிலேயே அடிச்சு நொறுக்கியிருக்கணும். சூழ்நிலை சாதகமா இல்லாமப் போச்சு. இப்ப இங்கே வச்சு குமுறினோம்னா கேக்க நாதி இல்லே..என்ன சொல்றே?''
""உண்மைதான். ஒரு நாளைக்கி அவனைப் பதம் பார்த்துட வேண்டியதுதான்''
""இன்னொருநாள் அவனைப் பார்த்தா அட்ரஸ் கேட்டு வாங்கு. என்ன''
""ஓ.கே.'' என்றான் சங்கர்.
***
மகேஷ், சங்கர், பிரபு மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தான். பக்கத்து பக்கத்துக் கிராமம். பத்து கிலோ மீட்டர் தூர இடைவெளியில் வசிப்பவர்கள்.
மகேஷின் அப்பாவிற்கு மத்திய அரசில் உத்யோகம். வேலை இடமாற்றம் காரணமாக சென்னைக்கு மாற்றலாகி இருந்தது குடும்பம்.
மகேஷிற்கு பிரபுவிற்கும் மோதல் கல்லூரி ஆண்டு விழாவின்போதுதான் நிகழ்ந்தது.
கல்லூரி ஆண்டு விழாவில் மகேஷ் மேடையேறி ஒரு கவிதையை வாசித்தான். சக மாணவர்களின் கைதட்டலைப் பெற்றான்.
பிரபு சும்மா இருக்க முடியாமல், அந்த மேடையிலேயே அந்தக் கவிதையைப் பற்றி மட்டமாக விமர்சனம் செய்தான். அப்போது அவனை விட்டுவிட்ட மகேஷ் மறுநாள் கல்லூரி வளாகத்தில் பிரபுவைப் பிடித்தான்.
""ஏன்டா, என்னயப் பத்தி எல்லோர்கிட்டேயும் தப்பா பேசிக் கிட்டுத் திரியிற?'' என்றான்.
""முதல்ல வார்த்தையைத் திருத்திக் கொள். நான் விமர்சனம் பண்ணியது உன்னைய இல்ல. நீ வாசிச்ச கவிதைய''
""நீ ரசனை கெட்டவன். அதான் கவிதையே புரியலை''என்றான் மகேஷ்.
""நீ எழுதியதா அன்னிக்கு வாசிச்சியே...அது உன்னோட கவிதையே இல்ல. பழைய புக்ல காபி பண்ணினது. அதனாலதான் அப்படிச் சொன்னேன். உண்மையை எல்லார்கிட்டேயும் சொல்லணுமா... சொல்லட்டுமா?'' என்றான் பிரபு.
மகேஷ் கூனிக் குறுகிப் போனான். அவமானம் அவனைச் சாட்டையால் அடித்தது. அந்தச் சம்பவம் அத்துடன் முடிந்துவிடவில்லை. எரியும் நெருப்பில் சிறு சிறு துரும்பை எடுத்துப் போட்டதுபோல வார்த்தைகளாலும், பார்வைகளாலும் அவ்வப்போது மோதிக் கொண்டனர். ஒரு சின்ன விஷயம் பெரிதானது. சிறுநெருப்பு புகைந்து புகைந்து பெரும் பகையானது. பார்த்தால் ஒருவரையொருவர் தாக்கும் அளவுக்கு.
இந்த நிலையில் கல்லூரி படிப்பு முடியவும், மகேஷின் இடமாற்றம் நிகழவும் சரியாக இருந்தது.
அப்போது மகேஷின் மனதில் பற்றிய தீ இன்னும் அணையாமல் அப்படியே இருந்தது.
இப்போது சங்கர், பிரபுவைப் பற்றிச் சொல்லி மேலும் அதைக் கிளறி விட்டுவிட்டான்.
என்றாவது ஒருநாள் அவனிடம் ஏதாவது வம்புச் சண்டையிழுத்து அவனை அடித்தால்தான் மனது ஆறும் என்று தோன்றியது.
***
அன்று-
மகேஷ் ஒரு கம்பெனி இண்டர்வியூ விஷயமாகப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
பேருந்தின் ஜன்னலோரமாக இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்க, பேருந்து அசோக் நகர் நெடுஞ்சாலையில் சிக்னலுக்காக நின்றது.
மகேஷ் ஜன்னல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தக் காட்சி அவன் கண்ணில் பட்டது.
சிக்னலுக்கு எதிர்திசையில் பைக்கில் பிரபு இருப்பதைப் பார்த்தான். அவனைப் பார்க்கப் பார்க்க உடலெங்கும் உஷ்ணம் பரவியது.
"விடாதே பிடி' என்று மனதிற்குள் ஆத்திரம் பொங்கியது. அதற்குள் சிக்னல் விழ எதிர்திசையில் வாகனங்கள் கிளம்புகின்றன.
பிரபு வண்டியைக் கிளப்புகிறான் அவன் பின்னால் யாரது? தெரிந்த முகமாக இருக்கிறதே. அது...அது...உமா அல்லவா?
பிரபுவின் இடுப்பைச் சுற்றி வளைத்துப் பிடித்தபடி அமர்ந்திருக்கிறாள் உமா, மகேஷின் தங்கை.
மகேஷுக்குக் கோபம் உச்சிக்குப் போனது. ஆனாலும் கொஞ்சம் யோசித்தான்.
உமா பிறவியிலேயே கால் ஊனமாகப் பிறந்தவள். அந்த ஊனமே அவள் திருமணத்திற்குத் தடையாக இருந்தது. இதுவரை ஒருவர் கூட அவளைப் பெண் கேட்டு வரவில்லை. இவனாகச் சிலரிடம் முயற்சித்த போது அவமானமே பரிசாகக் கிடைத்தது. உமாவைக் கரையேற்ற என்ன செய்யலாம் என்று தடுமாறிக் கொண்டிருந்தான் மகேஷ்.
இந்தப் பிரபு என் தங்கை உமாவைக் காதலிக்கிறானா? அவளைக் கல்யாணம் செய்து கொள்வானா? உமாவின் எதிர்கால வாழ்வில் வெளிச்சம் தெரிந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு கண்ணெதிரே உதவிக்கரம் ஒன்று தென்படுவதைப் போல இருந்தது.
இவ்வளவு நாட்களாக மகேஷின் மனதில் கனன்று கொண்டிருந்த கோபம் சட்டென்று காணாமல் போனது. தன் தங்கைக்குக் கணவனாகப் போகிறவன் என்ற எண்ணம் வந்ததும் ஒரு புதிய கோணத்தில் அவன் பிரபுவைப் பார்த்தான். சிக்னல் மாறி பஸ் புறப்பட்டது. புதிய பாதையில் சென்றது. மகேஷின் சிந்தனையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.