ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தம் போக்கும் பூ!

என் வீட்டிலுள்ள வேப்ப மரத்தில் பூக்கள் அடர்த்தியாக மலர்ந்து அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆயுர்வேதம் வேப்பம்பூ பற்றிக் கூறும் குறிப்புகள் எவை? தாமோதரன், திருமாநிலையூர். கைய்ய தேவ நிகண்டுவில் வேப்பம்பூ சக
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தம் போக்கும் பூ!
Updated on
2 min read

என் வீட்டிலுள்ள வேப்ப மரத்தில் பூக்கள் அடர்த்தியாக மலர்ந்து அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆயுர்வேதம் வேப்பம்பூ பற்றிக் கூறும் குறிப்புகள் எவை?

தாமோதரன், திருமாநிலையூர்.

கைய்ய தேவ நிகண்டுவில் வேப்பம்பூ சக்ஷுஷ்யம் என்று காணப்படுகிறது. அதாவது வேப்பம்பூ கண்களுக்கு நல்லது என்று அதற்கு அர்த்தமாகும். பூவை குளிர்ந்த நீரில் நன்றாக அலசிச் சுத்தப்படுத்தி, கண்களை மூடிய நிலையில் அதன் மேல் வைத்துக் கட்டிக் கொள்ளலாம். பார்வைக்கு பொருட்களைப் புலப்படுத்தும் ஆலோசகம் எனும் பித்த தோஷத்தின் சீற்றத்தின் காரணமாக ஏற்படும் எரிச்சலை மட்டுப்படுத்தும். அதுபோலவே கண்களில் கபத்தின் சீற்றத்தால் ஏற்படும் நீர்த்தேக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

அடுத்ததாக "கிருமி பித்த விஷப்பரணுத்' என்று உள்ளது. அதாவது வயிற்றிலுள்ள பூச்சி, பித்த ஊறல், குடலிலுள்ள விஷச் சத்து ஆகியவற்றைப் போக்கும். வேப்பம் பூவை நெய் அல்லது எண்ணெய்யில் பொரித்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட கீரிப்பூச்சி, ஆஸனவாய் அரிப்பு முதலியவை நீங்கிவிடும். பூவை பச்சையாகச் சேகரித்து லேசாக வறுத்துப் பொடித்து தண்ணீரில் வெல்லத்துடன் வேக வைத்துப் பச்சடி செய்து சாப்பிட பித்தா ஜீரணத்திற்கும் வயிற்றுப் புண்ணை ஆற்றுவதிலும் சிறந்தது. துவரம் பருப்பை வறுத்து வேக வைத்து வடித்த நீரில், சுட்ட புளியோ, எலுமிச்சம்பழச்சாறோ சேர்த்து மிளகோ, மிளகாயோ கூட்டி ரஸம் வைத்துப் பொரித்த வேப்பம்பூவை அதில் கலக்கிச் சாப்பிட வயிற்றிலுள்ள விஷத்தின் மூலமாக ஏற்படும் வாய் உலர்ந்து போதல், ருசியின்மை, வாந்தி, ஏப்பம் போன்ற உபாதைகள் நீங்கிவிடும். இந்த உபாதைகள் நீங்குவதால் இரைப்பை மறுபடியும் சுறுசுறுப்படைந்துவிடும்.

"வாதலம் கடுபாகம் ஸ்யாத்' அதாவது பூவின் அதிக அளவிலான சேர்க்கை அதன் கசப்புச் சுவையின் வாயிலாக தாதுக்களில் அதிலும் முக்கியமாக மாமிச, சதைப் பகுதிகளில் வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தும். பச்சையான பூவை வறுத்தும் காய்ந்ததை நெய்யிலும் எண்ணெய்யிலும் பொரித்துச் சேர்ப்பதால் உணவின் இறுதியில் அதன் காரமான சுவையின் வாயிலாக நாக்கிலுள்ள ருசியின்மை, உணவின் மேலுள்ள வெறுப்பு, எதுக்களிப்பு,வாந்தி, பித்தத்தால் ஏற்படும் அடைப்பினால் உண்டாகும் தலை சுற்றல், ஏப்பம் ஆகியவற்றைத் தணிக்கும்.

"சர்வ அரோசக நாசனம்' அதாவது சுவையில் கசப்பானாலும் மற்றவற்றைச் சுவைத்து உண்ணச் செய்யும். காய்ந்த பூவை நெய்விட்டு வதக்கி உப்பு, சுட்ட பழம்புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் துவையலாக்கிச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட, நாக்கிலுள்ள ருசி கோளங்களை நன்றாகத் திறக்கச் செய்து, உணவுவகைகளின் சுவையை நன்றாக அறியும்படி செய்யும்.

சிலருக்கு எண்ணெய் அஜீரணத்தினால் ஏற்படும் தலைசுற்றலுக்கு, வேப்பம் பூ ரசம் நல்ல பலனளிக்கிறது. புழுக்களால் தோலில் ஏற்படும் புண் ஆறாமல், மேன்மேலும் கெட்டுப் போகும் நிலைகளில் காய்ந்த வேப்பம்பூவை, நன்றாக இடித்து, துணியால் சலித்து, புண் மீது தூவ, அங்குள்ள புழுக்கள் செத்து மடியும். அதன் மீது வேப்பம்பட்டையினால் காய்ச்சிய தண்ணீரால் தொடர்ந்து சில நாட்கள் கழுவி வர, புண் விரைவில் ஆறிவிடும்.

வேப்ப மரத்தில் உணவாகப் பயன்படுவது பூ மட்டுமே. மற்றவை மருந்தாகும். புத்தாண்டு தினத்தன்று உணவில் பூவைச் சேர்க்கத் தொடங்குவர். காய்ந்த பூவை நாட்பட வைத்திருக்கக் கூடியதால் அதை ஒரு கண்ணாடி பாட்டில் சேகரித்து வைத்து நீங்கள் வருடம் முழுவதும் பயன்படுத்தி ஆரோக்கியம் கெடாமல் வாழலாம்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்,

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதிஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை-600 123

செல்:9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com