ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரவணைப்பு!
வரலாறு படிப்பவர்களும் உண்டு. வரலாறாய் வாழ்பவர்களும் உண்டு. ரத்ததானம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம், மருத்துவமுகாம், மரம்நடவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இளம்தலைமுறை சாதனையாளர்களுக்குப் பராட்டுவிழ


வரலாறு படிப்பவர்களும் உண்டு. வரலாறாய் வாழ்பவர்களும் உண்டு.
ரத்ததானம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம், மருத்துவமுகாம், மரம்நடவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இளம்தலைமுறை சாதனையாளர்களுக்குப் பராட்டுவிழா நடத்துதல் என, ஒருவர் புதிய வரலாறு ஒன்றைப் படைத்து கொண்டிருக்கிறார்.
அவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் பூ.திருமாறன்.
அவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
எப்போதில் இருந்து சமூக சேவையில் ஆர்வம் கொண்டீர்கள்?
எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராம மக்கள், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவ சிகிச்சைகளுக்காக, ரத்தம் தேவைப்படும்போது, அவை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். ரத்ததானம் வழங்குவதற்கும் இளைஞர்கள் தயார் நிலையில் இல்லை. அதனால் இளைஞர்கள் மத்தியில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் 1983 ல், முதன் முறையாக ரத்ததானம் வழங்கினேன்.
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ,பெரிய அளவில் விரிவடைய வேண்டும் என கருதி, 1987 ல் பெயரில் தமிழகத்தில் முதல் ரத்ததான கழகம் உருவாக்கினேன். இதுவரை 32 முறை ரத்ததானம் வழங்கியுள்ளேன். தமிழகம் முழுவதும் சுமார் 88 ஆயிரம் உறுப்பினர்கள் எனது வழிகாட்டுதலின் பேரில் ரத்ததானம் வழங்கி வருகின்றனர்.
தொண்டு நிறுவனம் எப்போது தொடங்கினிர்கள். அதன் நோக்கம் குறித்து...
1998 ல் டிரஸ்ட் (TRUST-THIRUMARAN RURAL UPLIFTMENT STABLE TRUST) தொண்டு நிறுவனம் என்பதை தொடங்கினேன். இதன் பிரதான பணியாக ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பதை கொண்டுள்ளேன். இதன் முதன்மை வேலைக்காரனாக என்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறேன்.
எதிர்காலத்தில் குழந்தைகள் தம் சொந்தக்கால்களில் நிற்கும் வண்ணம் உறுதியான அஸ்திவாரமிடுதல், பறக்கும் வரை பாதுகாப்புடன் கூடிய பராமரிóப்பு, குழந்தைகளின் முகங்களில் எப்போதும் புன்சிரிப்பு. இதுவே எங்கள் நோக்கம்.
இங்கு சிறுவயது முதலே பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் 43 பேரை பராமரித்து வருகிறேன. இவர்களை பாரமரிக்க 8 முழு நேர பணியாளர்களும், 7 பகுதி நேர பணியாளர்களும் உள்ளனர். இங்குள்ள குழந்தைகளில் 5 முதல் 18 வயது வரை உள்ள இருபாலரும் உள்ளனர். 6 பள்ளிகளில் படிக்கின்றனர். ஒரு மாணவர் திருக்குவளையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். 2 மாணவர்கள் ஐடிஐ படிக்கிறார்கள். இவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகள் இல்லத்திற்கு அடிக்கடி வெளிநாட்டவர் வருவது பற்றி...?
எங்கள் தொண்டு நிறுவனத்தின் இணையதளமான www.trustchildren.in பார்க்கும் வெளிநாட்டவர் பலர் எங்கள் குழந்தைகள் இல்லத்துக்கு வருகின்றனர். ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து, இங்குள்ள குழந்தைகளைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். சுமார் 1 முதல் 3 மாதம் வரை தங்குவர். குழந்தைகளைக் குளிப்பாட்டுவதில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்வர். ஆங்கிலம், இசை, நடனம் ஆகியவற்றைக் கற்று கொடுப்பர். தற்போதுகூட 7 வெளிநாட்டவர் தங்கியுள்ளனர்.
உங்கள் இல்ல குழந்தைகளுக்கு வேறு ஏதெனும் கற்று கொடுக்கப்படுகிறதா?
கல்வி தவிர, யோகா, சிலம்பம், பரதம்,இசை, கைவினைப்பயிற்சி, தேக்வாண்டோ எனப்படும் கொரியன் தற்காப்புக்கலை, தையல், தியானம், ஓவியம், தமிழ் இலக்கணம், ஆங்கில இலக்கணம் ஆகியவை முறையாக கற்று தருகிறோம். தற்போது கூட இங்கு வந்திருக்கும் வெளிநாட்டவர், இங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போட்டோ கேமரா வாங்கி கொடுத்து, போட்டோ எடுக்க கற்று தருகிறார். அதோடு அவர்கள் எடுக்கும் படங்களை போட்டோ கண்காட்சி நடத்துவதற்கும் தயாராகி வருகின்றார்.
அடுத்தகட்ட பணி...?
நான் ரத்ததானம் குறிóத்த விழிப்புணர்வு இல்லாத போது, ரத்ததானம் வழங்குவதை உற்சாகப்படுத்தினேன். தற்போது அது நல்ல விழிப்புணர்வை பெற்றுள்ளது. இன்று பரவலாக எல்லாருமே ரத்ததானம் செய்கின்றனர்.
தற்போது ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் பணி செய்கிறேன். வருடம் முழுவதும் இந்த குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு அளிப்பதற்கு, இந்த இல்லம் நோக்கி மனிதாபிமானிகள் வர ஆரம்பித்து விட்டால், இவர்கள் அன்றாட பிரச்னை தீர்ந்துவிடும். நான் அடுத்த சேவை பணிக்குத் திரும்பிவிடுவேன்.
தொண்டு நிறுவனத்தின் வேறு தலையாய பணிகள்...?
நாங்கள் ஆண்டுதோறும், வளரும் திறமைசாலிகளை இனம் கண்டறிந்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு வகையான விருதுகள் வழங்கி பெருமைபடுத்துகிறோம். விருது வழங்கும் விழாவில் வால்டர் தேவாரம், புதுவை முன்னாள் முதல்வர் ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்னர்.
உங்கள் இல்லத்தை நடத்த உதவிகள் எவ்வாறு கிடைக்கிறது?
யாரால் என்ன முடியுமோ அதை கொடுக்கலாம். ஆனால் பணம் எவரிடமும் நன்கொடையாகவோ, வெகுமதியாகவோ பெறுவது கிடையாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளதால், எங்கள் இல்லத்திற்கு உதவுபவர்கள், எங்களுக்கு
உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் கடைகளில் பணத்தை செலுத்தி, எங்கள் குழந்தைகளுக்கு உணவு பொருட்களாக மட்டுமே வழங்க அனுமதிக்கிறோம்.
இந்த சமூகத்தில் நீங்கள் எதிóர்பார்ப்பது?
எங்கள் குழந்தைகளுக்கு, நாட்டுப்புற கலை வித்தகர்கள், கைவினை நிபுணர்கள், தாம் கற்ற வித்தையை,தாம் பெற்ற ஞானத்தை கற்று தரலாம். எதுவும் தர இயலாதோர் எங்கள் குழந்தைகளுக்கு ஆசிகளை தரலாம்.
சந்தோஷத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்பதே எங்கள் தாரக மந்திரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...