டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முரண்சுவை- 13: இந்தியாவின் சொத்து!

ஜீவா என்ற இரண்டெழுத்துப் பெயர் 1950-களில் தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது. நாஞ்சில் நாடாம் குமரி மாவட்டத்தில்தான் பொதுவுடைமைத் தலைவர் ஜீவானந்தம் பிறந்தார். மகாத்மா காந்திஜியின் தலைமையில்,

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:27 am

ராஜேஷ்

ஜீவா என்ற இரண்டெழுத்துப் பெயர் 1950-களில் தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது. நாஞ்சில் நாடாம் குமரி மாவட்டத்தில்தான் பொதுவுடைமைத் தலைவர் ஜீவானந்தம் பிறந்தார்.

மகாத்மா காந்திஜியின் தலைமையில், 1922-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. அந்த நேரம்தான் ஜீவா அரசியலில் நுழைந்தார். தொடக்கக் காலத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். காரைக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் என்ற ஊரில் இருந்த மகாத்மா காந்தி ஆசிரமத்தில் செயலாளராகப் பணிபுரிந்தார்.

1927-ம் ஆண்டு இந்த ஆசிரமத்திற்கு காந்திஜி வருகை புரிந்தார். அந்தச் சமயம் அங்கிருந்த பெரியவர்கள் ஜீவாவை காந்திஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். காந்திஜி ஜீவாவைப் பார்த்து "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது' என்று கேட்டார். அதற்கு ஜீவா, "இந்தியாதான் என்னுடைய சொத்து' என்று பதிலளித்தார்.  காந்திஜி எப்படிப்பட்டவரையும் தன்னுடைய புத்தி கூர்மையாலும், மனித நேயத்தாலும் மடக்கி விடக்கூடியவர். அப்படிப்பட்ட காந்திஜி இந்தப் பதிலால் அசந்துபோனதுடன் ஜீவாவைப் பார்த்து "ஜீவா நீங்கள்தான் இந்தியாவின் சொத்து' என்று புன்னகையுடன் சொல்லி ஆசிரமத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார்.

பின்பு ஜீவா மதக் கொடுமைகளை எதிர்த்து பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் காலத்தில் ஆங்கிலேய அரசாங்கம் ஜீவாவைச் சிறையிலிட்டது.

"நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற பகத்சிங்கின் புத்தகத்தை தமிழில் மொழிப் பெயர்த்த குற்றத்திற்காக ஜீவாவையும், அதை வெளியிட்ட குற்றத்திற்காக தந்தை பெரியாரையும் ஆங்கிலேயே அரசு கைது செய்தது. அதன் பிறகு  சுயமரியாதை இயக்கத்தைவிட்டு வெளியே வந்த ஜீவா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.  தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்களிலேயே ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார்.

ஜீவா மிகச் சிறந்த பேச்சாளர். மகாகவி பாரதி, கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் மக்களிடம் கொண்டு சென்றவர் ஜீவா. தானும் ஒரு சிறந்த கவிஞராக விளங்கினார்.

ஜீவா அவர்களுக்கு யோகா, குஸ்தி, தலைகீழாக நடப்பது போன்றவற்றில் நல்ல பயிற்சி உண்டு. தாம்பரத்தில் ஜீவா குடியிருந்த காலத்தில் உடற்பயிற்சிக்காக காலையில் கைகளாலேயே நடந்து செல்வாராம்.  அவரைப் பார்க்கிறவர்கள் "வணக்கம் தோழரே' என்றால் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து அடித்து ஒரு சத்தத்துடன் "வணக்கம் தோழரே' என்று பதிலுக்குச் சொல்லுவாராம். உடன் நடந்து வருபவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே கைகளால் நடந்து செல்வாராம்.

ஜீவா என்றாலே அவர் இனிமையானவர். எனவே அவரை சர்க்கரை நோய் தொற்றிக் கொண்டது. அவர் நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் தான் கவலைப்பட்டாரே ஒழிய, தன்னுடைய உடம்பைப் பற்றிக் கவலைப்படவேயில்லை.

"உழைக்கும் மக்கள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால், பணக்காரர்கள் சோற்றில் கை வைக்க முடியாது' போன்ற அவருடைய உருக்கமான வீர வரிகள் என்றும் மறக்க முடியாதவை.

"தேர்தலில் தோல்வியுற்றதால் கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் வீழ்ந்துவிட்டோம். ஆனால் தாழ்ந்து விடவில்லை' என்று மேடைகளில் முழங்குவார்.

ஜீவா பிறந்த இல்லத்தைப் பார்க்க வேண்டுமென்ற என்னுடைய நீண்ட நாள் விருப்பம், எனக்குச் சமீபத்தில்தான் நிறைவேறியது. நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் பூதபாண்டி என்கிற ஊரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன். அந்த வீடு ஒரு மாட மாளிகையல்ல. அது ஒரு குடிசை வீடு. ஐந்து பேர் கூட ஒன்றாகப் படுத்து உறங்க முடியாது.

 அந்த ஜீவா அவர்கள் 18-1-1964-ம் நாளில் நம்மைவிட்டுப் பிரிந்தார். "ஏழைப் பங்களான்' ஒருவன் தமிழக மண்ணில் இருந்து மறைந்து விட்டார்.

பெருந்தலைவர் காமராஜர் ஜீவாவை அதிகம் மதித்தார். ஜீவாவும் காமராஜரை அதிகம் நேசித்தார். ஜீவா எழுதி பிரசுரமான முதல் கவிதையும் அவர் மறைவதற்கு முன்பு கடைசியாக எழுதிய கட்டுரையையும் சுவாமி விவேகானந்தரைப் பற்றியதாகும்.

காங்கிரஸ் கட்சியை மேடைக்கு மேடை தாக்கிப் பேசிய ஜீவா, கடைசியாக சொன்ன வார்த்தை  "காமராஜருக்குப் போன் பண்ணுங்கள்' என்பதுதான்.

தி.மு.க. கட்சியையும், எந்த எம்.ஜி.ஆரையும்  மேடைக்கு மேடை பாலதண்டாயுதம் போன்ற கம்யூனிஸ்ட்கள் தாக்கிப் பேசினார்களோ, அவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர் தான் ஜீவாவிற்குச் சிலை வைப்பதற்கான முழு பணத்தையும் கொடுத்து உதவியவர்.

இறந்த பிறகும் ஏழைகளின் கல்லறைகளுக்கு நடுவே ஜீவா சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.