மரபு: பழங் கருவிகள்; பாரம்பரிய நடனங்கள்!
இன்றைய நவீன காலத்தில் நாடு எல்லாத் துறைகளிலும் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று வருகிறது. புதிய புதிய கருவிகள், இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்காலத்துக்கேற்ற வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு


இன்றைய நவீன காலத்தில் நாடு எல்லாத் துறைகளிலும் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று வருகிறது. புதிய புதிய கருவிகள், இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்காலத்துக்கேற்ற வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு
கின்றன.
வெளிஉலகம் பக்கம் தலையைக் காட்டாமல் தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியே தங்களுக்கு சொர்க்கம் எனக் கருதி மலைப் பகுதிகளிலும், தற்போது சமவெளிப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த பழங்குடிகளும், ஆதிவாசிகளும் தற்போதைய காலத்திற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.
இதுவரை தாங்கள் வாழும் பகுதிகளில் மட்டும் நடத்தி வந்த தங்களது பாரம்பரிய கலைவிழாக்களைப் பிறரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளி உலகில் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்ட் 9 ஆம் தேதியை உலக ஆதிவாசிகள் தினமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த தேதியில் மிகப்பெரிய அளவில் ஆதிவாசிகளின் பாரம்பரியக் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டு தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களைச் சேர்ந்த ஆதிவாசிகள் பங்கேற்ற கலைவிழா கோவையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அந்தந்த மாநிலங்களிலேயே கலைவிழாக்கள் தனித்தனியே நடத்தப்பட்டன.
திருச்சியில் "உலக ஆதிவாசிகள் தின விழா' ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில், பாரம்பரியக் கலைவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
கன்னியம்மா இருளர், லம்பாடி, குருமன்ஸ், சமவெளி இருளர், சோளகர் ஊராளி, பாரம்பரிய இருளர், குரும்பர், பளியர்-புலையர், காட்டு நாயக்கன், காணிக்காரன் எனப் பல்வேறு ஆதிவாசிப் பிரிவினர் தங்களது பாரம்பரிய முறையிலான கலை நிகழ்ச்சிகளை மிகுந்த உற்சாகத்துடன் நடத்தினர்.
ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு வகையான கலைத் திறமையை வெளிப்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த லம்பாடி குழுவினர் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு அவர்களுக்குரிய மொழியில் பாடல்களைப் பாடி, ஆடியது பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
குருமன்ஸ் வகை ஆதிவாசிகளின் ஆட்டம் சற்றே வித்தியாசமாக இருந்தது. வீரபத்ரசுவாமியை வழிபட்டு தேங்காய் உடைத்துக் கொண்டே பாடல்களைப் பாடி ஆடியது கலைவிழாவின் மற்றொரு சிறப்பாகும். ஆதிவாசிகள் வீரம் செறிந்தவர்கள் என்பதை விளக்கும் வகையில் வாள்சண்டையும் கலைவிழாவில் நடத்தப்பட்டது.
கொடைக்கானல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அதிகம் வசிக்கும் பளியர்- புலையர் பிரிவைச் சேர்ந்தவர்களின் கலைவிழாவும் சிறப்பாக அரங்கேறியது. இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மிக குள்ளமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சோளகர் ஊராளி, பாரம்பரிய இருளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் குலம், கோத்திரம் ஒன்றாக இருந்தாலும் அவர்களது உடை அமைப்பு அவர்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது.
இவர்கள் தங்களுக்குரிய மொழிப்பாடல்களைக் கொண்டு ஆடினர்.
தாளவாடி சோளகர் ஊராளி பிரிவைச் சேர்ந்தவர்கள் இசைத்த இசைக்கருவிகளில் ஒன்று "பீனாச்சி'யாகும். சிறிய அளவில் நாகசுரம் போன்று உள்ள இந்தக் கருவியில் இசைத்த பாடல்கள்
பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பாடல் முடியும் வரை பீனாச்சி கருவியைக் கொண்டு தொடர்ந்து இசைத்தார் அந்தக் கலைஞர்.
அதே போல, கன்னியம்மா தெய்வ வழிபாட்டை பிரதானமாகக் கொண்டு சமவெளி இருளர் பிரிவினரும், கன்னியம்மா இருளர் பிரிவினரும் தங்களது பாரம்பரியக் கருவிகளை இசைத்தனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கலைவிழாவில் ஆதிவாசிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் பங்கேற்று ரசித்தனர். இந்தக் கலைவிழா நடைபெற்ற இடம் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி என்பதால், இங்கு படித்து வரும் உள்ளூர் மாணவிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவிகள் கலைவிழாவை ஆர்வத்துடன் ரசித்தது ஆதிவாசிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
வெளியுலகம் பக்கம் தலைகாட்டாத ஆதிவாசிகள், தற்போது கலைவிழாக்கள் மூலம் வெளியுலகத்துக்கும் தங்களது பாரம்பரிய கலைகளை எடுத்துரைக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த கலைவிழாவை நடத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்த தமிழ்நாடு ஆதிவாசிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் செந்தில்குமாரிடம் நாம்
பேசியதிலிருந்து:
""இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் 36 வகையான ஆதிவாசிகள் உள்ளனர். இன்னும் நரிக்குறவர்கள், லம்பாடி இனத்தவர், 27 வகையான குறவர்கள், ஈரோடு மாவட்ட மலையாளிகள் என்னும் பட்டியலில் அங்கீகரிக்கப்படவில்லை.
ஆதிவாசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை என ஒவ்வொரு நிகழ்விலும் அவர்களின் பாரம்பரியங்கள் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. சடங்கு, சம்பிரதாயங்கள் என அனைத்து பாரம்பரிய முறையில்தான் நடத்தப்பட்டு வருகின்றன. அழியாத, மாறாத கலைகள் ஆதிவாசிகளிடம்தான் உள்ளன.
கன்னியம்மா குலதெய்வ வழிபாட்டைக் கொண்டுள்ள இருளர் மக்கள் ஒவ்வொரு மாதமும் மாசி மகத்தன்று மகாபலிபுரத்தில் மிகப்பெரிய விழாவை நடத்துவர். இந்தவிழாவில் எல்லா நிகழ்வுகளும் நடைபெறும். இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஆதிவாசிகள் பங்கேற்பர்.
மாசி மாதம் இந்த விழா நடந்தாலும், உலக ஆதிவாசிகள் தினத்தன்று அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆதிவாசிகளின் கலைகள் அழிந்து போகாமல் பாதுகாக்கும் வகையிலும், அந்தக் கலைகள் வெளியுலகத்துக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த கலைவிழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
இதுபோன்ற கலைவிழாக்களை நாங்கள் நடத்தி வருவதன் மூலம் தங்களுக்கு மட்டும் தெரிந்த கலைகள் பிற ஆதிவாசி இனத்தவர் மட்டுமன்றி வெளியுலகத்தாரும் தெரிந்து கொள்வார்கள் என்பதால், ஆதிவாசிகளும் வழக்கத்தை காட்டிலும் மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார் செந்தில்குமார்.
படங்கள்: எஸ். அருண்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...