ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாக்கின் சபலத்தைக் கட்டுப்படுத்துங்கள்!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு, எப்போதும் அதைப் பற்றிய கவலையாகவே இருக்கிறது. சிறுவயதில் எல்லாவற்றையும் சாப்பிட்டு மகிழ்ந்த எனக்கு, இப்போது வாயைக் கட்ட வேண்டும் என்றால் முடியாமல் போகிறது. இதன
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாக்கின் சபலத்தைக் கட்டுப்படுத்துங்கள்!
Updated on
2 min read

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு, எப்போதும் அதைப் பற்றிய கவலையாகவே இருக்கிறது. சிறுவயதில் எல்லாவற்றையும் சாப்பிட்டு மகிழ்ந்த எனக்கு, இப்போது வாயைக் கட்ட வேண்டும் என்றால் முடியாமல் போகிறது. இதனால் பலமுறை ஜீரண சக்தியும் கெட்டுவிடுகிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் போக்குவது?

 கோபால், தஞ்சாவூர்.

 "போர்த்தப் போர்த்தக் குளிரும், பாராட்டப் பாராட்ட நோயும் அதிகமாகும்' என்று ஒரு பழமொழி. மார்கழி மாதக் குளிரில் விடியற்காலையில் ஒருவன் தலை - கால் தெரியாதபடி கம்பளிக்குள் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருக்கையில், காவிரியில் ஒருவன் ஆனந்தமாகக் குளித்துவிட்டு நாம ஸங்கீர்த்தனத்துடன் வீதிவலம் வருவான். இருவருடைய தேக வலிவும் மன வலிவும் ஒரேவிதமாயிருக்கலாம். போர்வை அகற்றியவனுக்குக் குளிரும் அகலுகின்றது. போர்வை கனத்தை அதிகமாக்கிக் கொள்ள குளிரும் அதிகமாகிறது.

 தீராத நோய்கள் சில. அவற்றில் சில போலி சமூக அந்தஸ்து தருபவை. அதைப் பாராட்டிப் பாராட்டிக் கவுரவிக்க அது தன் அதிகாரத்தை அதிகம் காட்டும். உங்களுடைய நிலையும் அதேதான். அதற்குரிய நடைமுறைகளைக் கைக்கொண்டு, அதே சமயத்தில் அதனிடம் மட்டுமே கவனமாக இராமல், மனத்தை லேசாக்கி அமைதி தரக்கூடிய குடும்ப - சமூகப் பணிகளில் ஈடுபட நோயின் கடுமை அத்தனை உணரப்படமாட்டாது. மனம் லேசாக லேசாக உடலின் பிராண சக்தி தடைபெறாமல் இயங்கி நோயின் வலிமையைக் குறைத்துவிடும். நோயைப் பாராட்டிப் பாராட்டி வளர்ப்பானேன்? நோயுள்ளவனைவிட நோயற்றவனைத்தான் சமூகம் மதிக்கும். நோய் வரக் காரணமானவற்றை, தவறான உடல் மனப் பழக்கங்களைக் கைக் கொள்வது தனக்கே குற்றமிழைப்பது போலாகும்.

 நோய் வரக் காரணமாகிறவற்றில் முறையற்று உண்பது முன் நிற்கும். உடலில் இயற்கை தந்துள்ள ஜீரண சக்தி எப்போதாவது ஏற்படும் உணவு முறைக் கேடுகளைத் தாங்கி அதனால் உடல் வருந்தாதவாறு பாதுகாக்கும். ஆனால் முறை தவறுவதையே பழக்கமாகக் கொண்டால் தீராத நோய்கள் ஏற்படும். "ஸர்வேபி ரோகா மந்தேக்நெü ஸýதராழுதராணிது' என்று ஆயுர்வேத சூத்திரம் எல்லா நோய்களும் ஜீரண சக்தி கேட்டால்தான் பெரும்பாலும் ஏற்படுபவை. ஆனால் குடல் வேக்காளம், குடலில் அடைப்பு, கல்லீரல், மண்ணீரல் பருத்துவிடுதல், வயிற்றில் நீர் வைத்தல், சிறுநீரகங்கள் கெடுதல் முதலியவை பசித்தீயின் மந்தத்தால் ஏற்படுபவையே என்பதே அந்த சூத்திரத்தின் பொருள். நோயற்ற ஆரோக்கியநிலையிலேயே ஜீரண சக்தி பற்றிய கவனம் தேவையென்றால், நீரிழிவுநோயுள்ள உங்களுக்கு, ஜீரண சக்தி பற்றி அதிகம் கவனிக்க வேண்டும் என்பது கூறமாலேயே விளங்குமல்லவா?

 வருவாயைப் பற்றிய சிந்தனை இல்லாமல் செலவு செய்பவன், தக்க பாதுகாப்பும் துணையுமின்றி போரில் ஈடுபடுபவன், நோய் தடுப்பில் முக்கியமான சகிப்புத்தன்மை - உடல் திட்பம், முறை தவறி உண்பதால் குலைந்துவிட்ட நிலையில், நோய் தொடர்ந்து பாதித்தும் விவேகமின்றி எதையும் சாப்பிட வேண்டுமென்று கட்டுப்பாடின்றி நாக்கின் சபலத்திற்காட்பட்டவன் ஆகிய முவரும் விரைவில் ஆபத்துக்குள்ளாவார்கள்.

 நீரும் மூன்று பிழை பொறுக்கும் என்பர். இயற்கை தாய் போல. பிழை பொறுப்பதற்கும் அளவு உண்டு. மீறித் தவறிழைக்கும்போது இயற்கைத் தாய் வெகுண்டு ருத்ர தாண்டவமாடிவிடுவாள். இட்லியும் பாலும் சேர்த்துச் சாப்பிட்டால் என்ன செய்யும்? காய்ச்சலில் இட்லி சாப்பிட்டால் என்ன? உப்புத்தானே சேர்க்கக் கூடாது? சிறுவயதில் நல்ல ரத்தம் ஓடியபோதுதான் தான் செய்த உணவுமுறைத் தவறுதலையும் அதனால் தனக்குக் கேடு ஏற்படாததையும் நினைத்து, சக்தி குன்றியபோதும் அசட்டு வீம்பால் உடல்நிலையைக் கவனியாது, "எதையும் தின்பேன், ஒன்றும் செய்யாது' என்றெல்லாம் நினைப்பவருண்டு. நோயாளியின் மனப்போக்கை ஒட்டியே பத்தியம் சொல்லும் வைத்தியனும் உண்டு. அந்த வைத்தியம் கீழே விழுபவனைத் தாங்க அரிவாள் மனையை முட்டுக் கொடுத்ததுபோல் ஆகக்கூடும்.

 அதனால் நீங்கள் உபாதைக்குத் தக்கவாறு பத்திய உணவுகளைத் தேர்ந்தெடுத்து, மனதிடத்துடன் அவற்றை மட்டுமே உண்டு நல்லதொரு பாதுகாப்பை அமைத்துக் கொள்வதே நலமாகும்.

 (தொடரும்)

 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

 நசரத்பேட்டை- 600 123 (பூந்தமல்லி அருகே)

 செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com