இதுபுதுசு: பேச்சுநடையில் 'ராமகாவியம்'!
கருணாகரன்... கருணாகரன்னு... ஒரு காட்டுவாசிங்க. அந்த காட்டுவாசி என்ன வேலை பாக்கறான்னு கேக்கறீங்களா? கொள்ளை அடிச்சி பொழைக்கறதுதான் அவன் வேலைங்க. கொள்ளைன்னா ஊருக்குள்ள வந்து ஆடு மாடுங்கள பிடிப்பான்னு நென


கருணாகரன்... கருணாகரன்னு... ஒரு காட்டுவாசிங்க. அந்த காட்டுவாசி என்ன வேலை பாக்கறான்னு கேக்கறீங்களா? கொள்ளை அடிச்சி பொழைக்கறதுதான் அவன் வேலைங்க. கொள்ளைன்னா ஊருக்குள்ள வந்து ஆடு மாடுங்கள பிடிப்பான்னு நெனைக்கறீங்களா? அது இல்லீங்க. பணக்கார வீடாப் பாத்து எல்லாரும் கண் அசந்த நேரத்துல காசு, பணம், நகை,நட்டு எடுத்திட்டுப் போவான்னு நெனக்கறீங்களா? அதுவும் இல்லீங்க. இவன் ஒரு வித்தியாசமான திருடன். காட்டு வழியாப் போறவங்ககிட்டேயிருந்து சோத்தை அடிச்சுத் தின்னுவான்...''
- இப்படித் தொடங்குகிறது ஒரு ராமாயணக் கதை. கருணாகரன் என்ற பாத்திரம் ராமாயணத்தில் எங்கு வருகிறதென்றால், ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் இயற்பெயர்தான் கருணாகரன்! பேச்சு நடையில் ராமாயணத்தை சொற்பொழிவாக ஆற்றிவந்த மதுரையைச் சேர்ந்த 73 வயது முதியவரான புரோகிதர் எம்.எஸ்.ராமசாமி, தற்போது அதே பேச்சு நடையில் ராமாயணத்தை "ராமகாவியம்' என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக புரோகிதராகப் பணியாற்றி வரும் ராமசாமியிடம் பேசினோம்.
""எனக்கு சிறுவயதிலிருந்தே நூல்களை வாசிப்பது என்றால் சுவாசிப்பது போன்று மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூடம் செல்வதில் ஆர்வம் இல்லாவிட்டாலும், நூலகங்களுக்கு மட்டும் விரும்பிச் செல்வேன். இதையறிந்த எனது தந்தை சீனிவாசன் படிப்பதற்கு என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார். மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 40 ஆண்டுகாலம் அவர் புரோகிதராக வேலை செய்தார். அவருக்குப் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக நான் இப்பணியைத் தொடர்கிறேன்.
வயிற்றுக்கு உணவு அளித்திட புரோகிதர் தொழில் இருக்கிறது. ஆனால், ஆத்ம திருப்திக்கும், ஆன்மிக பணிக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு எனக்குப் பல ஆண்டு காலமாகவே இருந்து வந்தது. அதனால்தான் எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் கம்ப ராமாயணம் தொடர்பான பல்வேறு நூல்களைப் படித்து அதன் இனிமையில் திளைத்தேன். அதில் உள்ள நல்ல பல கருத்துகள் குழந்தைகளிடம் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பேச்சுநடையிலான இந்த "ராமகாவியம்' நூலை எழுதியுள்ளேன்.
எனக்கு இலக்கிய நயம் பற்றியெல்லாம் பெரிய அளவில் தெரியாது. பேச்சுநடையில் குழந்தைகளுக்கு ராமகாதை மூலம் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி, இந்த நூலை தயாரித்துள்ளேன். இதை ஒலி வடிவில் சி.டி.யாக தயாரித்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன். அதற்கு அன்னை மீனாட்சிதான் துணைபுரிய வேண்டும்.
தற்போது "தேவி மீனாட்சி' எனும் மீனாட்சி அம்மன் வரலாறு குறித்த பேச்சுநடை நூலை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். மீனாட்சி அம்மன் வரலாறை 6 நாள்கள் சொற்பொழிவு செய்வது போல் இந்த பேச்சுநடை நூலை எழுதத் தொடங்கியுள்ளேன். அடுத்த ஆண்டுக்குள் அந்த நூலை வெளியிட திட்டமிட்டுள்ளேன்.
கம்பர் எழுதிய ராமாயணப் பாடல்களைச் சுவைத்து அற்புதமாய் உரைநடை எழுதியவர்கள் பலர் உண்டு. அதில் இதிகாசங்களை எடுத்துரைப்பதில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், என் மானசீக குரு கவியரசு கண்ணதாசன், கவிமாமணி வேங்கடகிருஷ்ண அய்யங்கார், முனைவர் அறிவொளி ஆகியோர் என் மனம் கவர்ந்தவர்கள்.
இவர்கள் எல்லாம் கம்பரின் அற்புதமான பாடல்களின் இனிமையை உணர்ந்து, சுவைத்து உரைநடையாக விளக்கியுள்ளனர். மீனாட்சி அம்மன் பாதம் பணிந்து சேவை செய்யும் புரோகிதனான எனக்கு, ஐந்தாவது படிக்கும் மாணவர் கூட ராமகாவியத்தைப் படித்து தன்னுடைய தாத்தா பாட்டிமார்களுக்கு அதைப் படித்துக் காட்டி, மனிதனுக்கு மதிப்பூட்டும் "ராம காவியம்' என்று சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் பேச்சுநடையில் இந்த நூலை எழுதியுள்ளேன்.
குழந்தைகளிடம் இலக்கிய இதிகாசங்களைக் கொண்டு சென்று அறநெறிகளையும், ஆன்மிகக் கருத்துகளையும் விதைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இதற்காகத்தான் இதுபோன்ற பேச்சுநடை நூலை எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன். ராமகாவியம் குறித்து பேச்சுநடையில் வெளிவந்தது முதன்முறையாக நான் எழுதிய நூலாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். இதுபோன்ற நூல்கள் நூலகங்களில் இடம்பெற்று எதிர்கால தலைமுறையினரான குழந்தைகளுக்குப் பயனுற வேண்டும் என்பதே என் ஆசை'' என்றார் நம்பிக்கையுடன் ராமசாமி.
படங்கள்: ஆர்.சிவக்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...