ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளமை...இதோ!​ இதோ!

திருமணமான என் அண்ணனுடன் எனக்குப் பெண் பார்க்கச் சென்றேன். அண்ணனை மாப்பிள்ளை என நினைத்து உபசரிக்கத் தொடங்கிவிட்டார்கள். காரணம், எனக்கு 30 வயதுதான் ஆகிறது என்றாலும், தலைமுடி, மீசையில் நரை எட்டிப் பார்க்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளமை...இதோ!​ இதோ!
Updated on
2 min read

திருமணமான என் அண்ணனுடன் எனக்குப் பெண் பார்க்கச் சென்றேன். அண்ணனை மாப்பிள்ளை என நினைத்து உபசரிக்கத் தொடங்கிவிட்டார்கள். காரணம், எனக்கு 30 வயதுதான் ஆகிறது என்றாலும், தலைமுடி, மீசையில் நரை எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. இளமையிலேயே முதுமை வரத் தொடங்கிவிட்ட எனக்கு, மறுபடியும் இளமையுடன் அழகாக மாற வழி என்ன?

கனகவேல், தூத்துக்குடி.

இன்றைய வாழ்க்கைமுறையில் இளைஞர்களுக்கு ஓர் ஆண்டில் இரு வயது கூடுகிறது. தான் படித்த கல்விக்கு ஏற்றவாறு வேலை அமையாமற் போனாலோ, தன் கூடப் படித்தவர்கள் தன்னைவிட வாழ்க்கையில் நல்லமுறையில் வேலை கிடைத்துப் பணியில் அமர்ந்துவிட்டாலோ ஏற்படும் மனப் புழுக்கம், முதுமைக்கு விரைவில் வித்திடுகிறது. மனதில் ஏற்படும் இந்த தாபம், உடற்சூட்டை அதிகரித்து தோலைச் சார்ந்த ப்ராஜகம் என்னும் பித்தத்தைச் சூடாக்குகிறது. நெல் விளையும் செடியின் வேர் பதிந்துள்ள நிலத்தில், நீர் குறைந்து உரம் கூடி, வெயிலின் தாக்கமும் அதிகரித்தால், செடி பழுத்து விடுவதைப் போல, மயிர்க்கால்கள் பதிந்துள்ள தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, ப்ராஜக பித்தத்தின் சூடும் கூடும்போது, மயிர்க்கால்களின் வழியாக, நுனிவரை முடி நரைத்து விடுகிறது. ஆக, தேக ஆரோக்கியத்தின் பாதுகாப்பானது மனதிலிருந்து தொடங்குகிறது.

என்றும் இளமையுடன் அழகாக இருக்க விரும்பும் நீங்கள் ஆயுர்வேதம் உபதேசிக்கும் அனுதைலம் எனும் மூக்கில் விட்டுக் கொள்ளும் மருந்தை இரண்டு சொட்டு காலை, இரவு பல் தேய்த்த பிறகு விட்டுக் கொள்ளவும். மூக்கில் விட்டவுடன் தலைப் பகுதியில் சேர்ந்துள்ள தேவையற்ற கபதோஷத்தையும், மேலும் பல அழுக்குகளையும் கரைத்து, வாய்ப் பகுதிக்கு வந்தவுடன் காரி உமிழ்ந்துவிடவும்.

கண்களுக்கு இளநீர் குழம்பு இரண்டு சொட்டு இரவில் படுக்கும் முன் விட்டுக் கொள்வதால், நாள் முழுவதும் கண்ணில் சேர்ந்துள்ள தூசும் மாசும் கண்ணிலிருந்து நீராக வடிவதன் மூலம் வெளியேறிவிடும். இந்த அனுதைலமும், இளநீர்க் குழம்பும் விட்டவுடன் எரிச்சலைத் தந்தாலும், சிறிது நேரத்திற்குப் பிறகு குளிர்ச்சியைத் தருகின்றன. அரிமேதஸ் தைலம், சிறிது வாயிலிட்டு உமிழ்நீர் சுரந்தவுடன் வாயினுள் குலுக்கித் துப்பிவிட, வாயிலுள்ள பகுதி முழுவதும் சுத்தமடைவதன் விளைவாக, உணவைச் செரிமானம் செய்வதற்கான சுரப்பிகளின் வழியாக வரும் திரவங்கள் சுத்தமாகச் சுரக்கின்றன. நீங்கள் உண்ணும் உணவின் சத்தை, உடல் பெறுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் எளிதில் பெறலாம்.

தலைக்கு நீலிபிருங்காதிகேர (தேங்காய் எண்ணெய்) தைலத்தையோ, கய்யுண்யாதி கேர தைலத்தையோ, பஞ்சில் முக்கி தலையில் சுமார் 1 மணி நேரம் ஊறிய பின்பு குளிக்கவும். இதனால், தலைபாரம் சளி ஜலதோஷம் ஏற்படாமலிருக்க, ராஸ்னாதி சூரணத்தைக் குளித்தபிறகு உச்சந்தலையில் தேய்த்துவிடவும்.

நீங்கள் ஆணாக இருப்பதால் திங்கள் - புதன் - சனிக்கிழமைகளில் உடலுக்குப் பலாஅஸ்வகந்தாதி குழம்பு, பிரபஞ்சன விமர்தனம் குழம்பு போன்ற தைலங்களில் ஒன்றை உடலெங்கும் தேய்த்து சுமார் 1 மணி நேரம் வரை ஊறிக் குளிக்கவும்.

இருமாதங்களுக்கு ஒரு முறை அவிபத்தி சூரணத்தை 7 முதல் 10 கிராம் வரை எடுத்து, 12 முதல் 15 மி.லி.வரை தேன் குழைத்து, காலையில் குடித்த கஞ்சி செரித்து பசி எடுத்தவுடன் நக்கிச் சாப்பிட, 4 - 6 முறை நீர்ப் பேதியாகி குடலில் தேங்கியிருந்த தேவையற்ற பித்தம் வெளியேறிவிடும். இதன்மூலம் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதி சுத்தமடைவதால், உடல் யந்திரங்களின் மிக முக்கிய யந்திரமான கல்லீரல் பகுதியை நீங்கள் சுத்தமாக்கிக் கொள்ளலாம்.

மனதில் அமைதியுடன் வாழத் தீர்மானித்துவிட்ட நீங்கள், உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக் கூடிய உணவு வகைகளைத் தேர்ந்து எடுத்துச் சாப்பிட்டு வரவும். காலையில் ஓட்ஸ் கஞ்சி அல்லது புழுங்கலரிசிக் கஞ்சி, பசு நெய்யும் சிட்டிகை உப்பும் கலந்து வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். குடித்த கஞ்சி செரித்தவுடன் சூடான புழுங்கலரிச் சாதம், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துவிட்ட சாம்பார், பசுநெய் கலந்து சாப்பிட்ட பிறகு, மிளகு, சீரகம் சேர்த்த தக்காளி ரசம், அதிலுள்ள கொத்தமல்லியுடன் சாதம் பிசைந்து சாப்பிடவும். ஏடு படிந்த கெட்டித் தயிர்ச்சாதம் அதன் பிறகு சாப்பிடவும். கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லி சட்னியை அதிகம் தொட்டுச் சாப்பிடப் பயன்படுத்தவும். வேக வைத்த புடலங்காய், வெள்ளரிக்காய், மிளகு, சீரகம் , தேங்காய், மிளகாய் சேர்த்த கூட்டு சாப்பிட மிகவும் நல்லது.

மாலை வேளைகளில் ஏதேனும் பழ வகைகள் சாப்பிடவும். கொய்யாப் பழம், ஆப்பிள், திராட்சை, மாதுளம்பழம், அன்னாசி, பப்பாளி, பூவன் வாழைப் பழம், நேந்திரம் பழம், மலை வாழைப் பழம், நெல்லிக்கனி, பேரீச்சம்பழம், சீதாப் பழம் மற்றும் இதர பழ வகைகளை மெனு ஒன்று தயாரித்து மாற்றி மாற்றி சாப்பிட்டு வரவும்.

இரவில் கோதுமை ரவை உப்புமா, கோதுமை சப்பாத்தி, பச்சைப் பயறு வேக வைத்து, சின்ன வெங்காயத்துடன் தயாரிக்கப்பட்ட கூட்டு போன்றவை சாப்பிட உகந்தது. பசி நன்றாக இருந்தால் ஆயுர்வேதத்தின் மிகச் சிறந்த லேகியமாகிய சியவனபிராசத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு வரை நக்கிச் சாப்பிட்டு வரவும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com