விளையாட்டு: ஹேண்ட்பால் எனக்குத் தோழி!
மேலைநாடுகளில் வெகு பிரபலமாகி இந்தியாவில் வெகுவேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் ஒன்று ஹேண்ட்பால். 1936-ம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிச்சில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் முதன்முதலாக சேர்க்கப்பட்டது ஹேண


மேலைநாடுகளில் வெகு பிரபலமாகி இந்தியாவில் வெகுவேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் ஒன்று ஹேண்ட்பால். 1936-ம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிச்சில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் முதன்முதலாக சேர்க்கப்பட்டது ஹேண்ட்பால் விளையாட்டு. 1976-ல் மான்டிரியல் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது மகளிர் ஹேண்ட்பால் விளையாட்டு சேர்க்கப்பட்டது.
தமிழகத்தில் வெகுவேகமாக வளர்ச்சி பெற்று வரும் ஹேண்ட் பால் விளையாட்டில் தேசிய அளவில் சாதனை படைத்து வருகிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த வீராங்கனை சந்தியா. ஜூனியர், சப்-ஜூனியர் அளவிலான போட்டிகளில் சந்தியாவின் திறமை பளிச்சிட்டது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் சந்தியாவின் அபாரமான விளையாட்டின் காரணமாக தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்தது. ஹேண்ட்பால் மீது ஆர்வம் வந்த விதத்தை இங்கே கூறுகிறார் சந்தியா.
""நான் 9 வயதாக இருக்கும்போது ஹேண்ட்பால் விளையாடத் துவங்கினேன். பள்ளியில் படிக்கும்போது ஆரம்ப காலத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட தட களப் போட்டிகளில்தான் ஆர்வம் காட்டினேன். பின்னர் எனது ஆர்வம் ஹேண்ட்பால் பக்கம் திரும்பியது.
வித்தியாசமான விளையாட்டு என்பதால் எனக்கு இதன்மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. கூடைப்பந்தும், ஹேண்ட்பாலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விளையாட்டுதான். கூடைப்பந்துப் போட்டியில் பந்தை கூடையில் போடவேண்டும். ஆனால் கூடைப்பந்து விளையாட்டில் உள்ள கூடைக்குப் பதிலாக இங்கு தரையில் வலை கட்டப்பட்டிருக்கும். அந்த வலைக்குள் பந்தைச் செலுத்தும்போது புள்ளிகள் கிடைக்கும். ஆனால் ஹேண்ட்பால் போட்டியின் விதிகள் பெரும்பாலும், கூடைப்பந்துப் போலவே இருக்கும். புள்ளிகளின் அடிப்படையில் அணிகளின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது திருவண்ணாமலையிலுள்ள ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளியில் படித்து வருகிறேன். 5-ம் வகுப்பில் தொடங்கிய ஹேண்ட்பால் விளையாட்டு இன்றுவரை எனது தோழியாகத் தொடர்கிறது.
ஏராளமான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ள போதும் 3 தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியதை மறக்க முடியாது.
சென்னையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுபோலவே அந்தப் போட்டியில் சிறந்த வீராங்கனை விருதும் எனக்குக் கிடைத்தது. மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சப்-ஜூனியர் போட்டியிலும் திறமையாக விளையாடினோம். கோவையில் நடந்த மாநில அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் முதன்முதலாக தங்கப் பதக்கம் வென்றோம்.
இதைப் போலவே திண்டுக்கல்லில் நடந்த ஆர்டிஎஸ் போட்டியில் 2-ம் இடம், 2009-ம் நடந்த மாநில போட்டியில் 3-ம் இடத்தைப் பிடித்தோம். ஹேண்ட்பால் விளையாட்டு போக மற்ற நேரங்களில் தட கள விளையாட்டுகள் பிடிக்கும். விளையாட்டு நேரம் தவிர படிப்பு, இசை மிகவும் மிகவும்.
இந்திய அணிக்குத் தேர்வு பெறவேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்காக நான் தினந்தோறும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன். ஒருமுறை தேசிய அணிக்காகவும் நான் இந்திய உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் துரதிருஷ்டம் காரணமாக அந்தப் போட்டியே நடைபெறவில்லை.
இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். விரைவில் அணியில் இடம்பிடிப்பேன். தேசிய வீராங்கனையாக வலம் வருவேன். தேசிய வீராங்கனையாக வலம்வரும்போது நிச்சயம் சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டுவேன்'' என்கிறார் சந்தியா.
ஹேண்ட்பாலில் வேகமாக வளர்ந்து வரும் சந்தியாவுக்கு ஐபிஎஸ் அதிகாரியாகவேண்டும் என்ற ஆசையும் உண்டு. தில்லியில் இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஹேண்ட்பால் இடம்பெறவில்லை என்பதில் சந்தியாவுக்கு ஏமாற்றம்தான். தற்போது திருவண்ணாமலையிலுள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். படிப்பு நேரம் போக ஹாஸ்டலில் விளையாட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
சந்தியா குறித்து அவரது பயிற்சியாளர் சாந்தி,""ஹேண்ட்பால் விளையாட்டுக்காக தமிழகத்தில் பெண்களுக்கென ஹாஸ்டல் இருப்பது திருவண்ணாமலையில்தான். ஹாஸ்டலில் தங்கியுள்ள ஹேண்ட்பால் வீராங்கனைகளில் சந்தியா சிறப்பாக வருவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவரது பயிற்சியையும், மைதானத்தில் அவரது ஆட்டத்தையும் பார்க்கும்போதே தெரிகிறது. ஹேண்ட்பால் விளையாட்டுக்காக எஸ்டிஏடி-யும், அதன் உறுப்பினர் செயலர் சத்யவிரத சாஹுவும் மேற்கொண்டு வரும் திட்டங்கள் பாராட்டுக்குரியவை. இதற்காக அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
அதைப் போலவே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனும் ஹேண்ட்பால் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக அதிக அளவில் உதவியும், ஊக்கமும் அளித்து வருகிறார். ஒவ்வொரு முறை ஹேண்ட்பால் போட்டியில் பங்கேற்கச் செல்லும்போதும், திரும்பும்போதும் அவரிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைக்கிறது. தமிழக ஹேண்ட்பால் சங்கத்தின் பொதுச் செயலர் சரவணன் அதிக அளவில் எங்களுக்கு ஊக்கத்தை வழங்கி வருகிறார். சந்தியா, திறமைமிகு வீராங்கனையாக வலம் வருவதற்கு சரவணன் உதவி வருகிறார்'' என்றார்.
ஹேண்ட்பால் சங்கத்தின் செயலர் சரவணன், ""சந்தியா நிச்சயம் சர்வதேச வீராங்கனையாக வருவார். அதற்கான திறமையும் உழைப்பும் அவரிடம் உள்ளது. அதை நாங்கள் சரியான நேரத்தில் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்துள்ளோம். இன்னும் சந்தியாவைப் போன்ற ஏராளமான வீராங்கனைகள் தமிழகம் முழுதும் உள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்து தேசிய அரங்குக்கு அழைத்து வருவதே எங்களது பணி'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...