டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முரண்சுவை - 33: வாஞ்சிநாதன் அய்யர்.. செங்கோட்டா

400 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சியில் கடைசி 100 ஆண்டுகளில்தான் விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்தது. அப்படி உச்சநிலையில் இருந்த ஒருநாள்,1911-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 pm

ராஜேஷ்

400 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சியில் கடைசி 100 ஆண்டுகளில்தான் விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்தது.

அப்படி உச்சநிலையில் இருந்த ஒருநாள்,1911-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி.எஸ்கார்ட் ஆஷ் என்ற ஆங்கிலேயன் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தான். திருமதி ஆஷ் கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டவள். மிகப் பெரிய டாக்டர்களை எல்லாம் கலந்து ஆலோசித்து விட்டு, 4 நாட்களுக்கு முன்புதான் இங்கிலாந்திலிருந்து வந்திருந்தாள்.

9.30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. பச்சைக் கோட்டு அணிந்த ஒருவனும், மலையாளிகள் அணிவதைப் போல் வேட்டி கட்டிய இளைஞன் ஒருவனும் இரண்டாவது பிளாட்பாரத்தின் தென்கோடியிலிருந்து ஓடி வந்தனர். திருநெல்வேலியில் ரயில் புறப்பட்டவுடன் வேகமாக வந்து இருவரும் ஏறினர். பச்சைக்கோட்டு அணிந்த இளைஞன் ஆஷ் இருந்த பெட்டிக்குள் ஏறினான். மற்றவன் சற்று தூரத்தில் முதல் வகுப்புப் பயணிகளின் வேலையாட்களுக்கான பெட்டியின் அருகில் நின்று கொண்டான்.

பச்சைக்கோட்டு அணிந்தவன் முதல் வகுப்புப் பெட்டிக்குள் ஏறி, அங்கு உட்கார்ந்திருந்த ஆஷை நோக்கி தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டினான். ஆஷுற்கு எதிர் இருக்கையில் உட்கார்ந்திருந்த திருமதி ஆஷ் இதைக் கவனிக்கவில்லை. தன்னைச்சுட வந்தவனை நோக்கி சினிமாவில் வில்லன்கள் செய்வதுபோல, தன்னுடைய தலையில் இருந்த தொப்பியைக் கழற்றி வீசினான் ஆஷ். ஒருவித பதட்டத்தில் வீசியதால், அந்தத் தொப்பி அவன் மீதுபடாமல், ஜன்னல் வழியாக பிளாட்பாரத்தில் விழுந்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பச்சைகோட்டு அணிந்தவன் ஆஷைத் தன் கைத்துப்பாக்கியால் மார்பை நோக்கி சுட்டான். தோட்டா அவன் மார்பின் வலது பக்கத்தில் உள்ள மார்புக் குறிக்கு  கீழே 4 அங்குலம் அளவிற்கு காயத்தை ஏற்படுத்திவிட்டு, விலா எலும்பு வழியாகக் கல்லீரலில் நுழைந்திருந்தது.  உடனே ஆஷை சுட்டவன் ரயில் பெட்டியிலிருந்து இரண்டாவது பிளாட்பாரத்தில் குதித்தான். அதற்குள் ஆஷ் எழுந்து சுட்டவனைத் துரத்த முயன்றான். சற்றும் எதிர்பாராத இந்தக் காட்சியைப் பார்த்த திருமதி ஆஷ் கணவனைத் தடுத்து நிறுத்தினாள். அடுத்த சில வினாடிகளில் ஆஷ் தள்ளாடிக் கீழே சாய்ந்தான்.

ஆஷ் பயணம் செய்த ரயில் மீண்டும் திருநெல்வேலிக்குத் திரும்பியது. எவ்வளவோ மருத்துவ உதவிகள் செய்தும் ஆஷை காப்பாற்ற முடியவில்லை. காலை 11.30 மணியளவில் அதிகமான ரத்தப்போக்கின் காரணமாக தன் மனைவியின் தோள் மீது சாய்ந்தவாறே ஆஷ் உயிர் விட்டான்.ஆஷை சுட்டவன் இரண்டாவது பிளாட்பாரத்தில் குதித்து வடக்கு நோக்கி ஓடினான். அவனுடன் வந்தவன் வடக்கு நோக்கி வயல் வெளிகளில் ஓடி மறைந்தான். துப்பாக்கி ஒலியைக் கேட்ட பியூன் காதர்பாட்சா பயணிகள் அறையிலிருந்து வெளியே வந்து சுட்டவனைத் துரத்திப் பிடித்தான். இருவரும் கட்டிப் புரண்டனர். பச்சைக்கோட்டு அணிந்தவன் காதர் பாட்சாவை உதைத்துத் தள்ளிவிட்டு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு தொடர்ந்து ஓடினான். அங்கு இருந்த பலரும் அவனைத் துரத்தினார். பாதையிலுள்ள கற்களை எடுத்து அவன் மீது எறிந்தனர். ஓடியவன் தெரியாமல் பெண்கள் கழிப்பறையில் முதலில் நுழைந்தான். பின்னர் துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியவாறே வெளியே வந்து பக்கத்தில் இருந்த ஆண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து கொண்டான். அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் கழிப்பறையைச் சுற்றி நின்று கொண்டார்கள்.

சிறிதுநேரம் கழித்து போலீஸ் துப்பாக்கியுடன் வந்ததும் கழிப்பறைக்குள் சென்று பார்த்தனர். ஆஷை சுட்டவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தது தெரியவந்தது. அந்த நேரம் பலமான காற்று பேரிரைச்சலுடன் வீசியதாலும் அவன் தொண்டைக்குள் வைத்து சுட்டுக் கொண்டதாலும் வெடித்த துப்பாக்கியின் ஒலி அங்கிருந்தவர்களுக்குக் கேட்காமற் போய்விட்டது.

கொலை செய்தவனுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. வயது 25லிருந்து 30-க்குள் இருக்கும். சுடப்பட்ட துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்டது. அதில் குண்டுகள் எதுவும் இல்லை. எனவே அதில் இரண்டு குண்டுகள் தான் போடப்பட்டிருக்க வேண்டும். ஒன்று ஆஷ்  உடலிலும் மற்றொன்று சுடப்பட்டவனின் உடலிலும் பாய்ந்திருந்தன.

அவன் முகம் முழுவதும் இரத்தமாக இருந்ததால், அவனை யாரும் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. இச்செய்தி லண்டனிலுள்ள ஆங்கில ஆட்சியில் உள்ளவர்களை ஒருகுலுக்குக் குலுக்கிவிட்டது. இறந்த இளைஞன் ஸ்மார்த்த பிராமணர்களைப்போல், பின் பக்கம் குடுமி வைத்திருந்தான். கிட்டத்தட்ட ஒருமாத காலமாக வளர்ந்த தாடி முகத்திலிருந்தது. மார்பில் தரித்திருந்த பூணூலில் ஆறு பிரிவுகள் இருந்ததால், இறந்தவன் திருமணம் ஆனவன் என்பது தெரிந்தது. ஆஷைக் கொன்ற இளைஞனின் சட்டைப் பையில் காணப்பட்ட கடிதம், ஆஷின் கொலை அரசியல் தொடர்புடையது என்பதை உணர்த்தியது. கடிதத்தின் முடிவில் "த. வாஞ்சிநாதன் அய்யர் செங்கோட்டா' என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. விறுவிறுப்பான சினிமா காட்சிபோல நடைபெற்ற இந்த சம்பவம் வாஞ்சிநாதனைப் பிரமிப்பூட்டும் நாயகனாக்கியது. பிற்காலங்களில் வாஞ்சிநாதனின் மனைவியைச் சந்தித்து வணங்குவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் முத்துராமலிங்கத் தேவர்.

பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் சொர்க்கத்தைவிட மேலானது என்று வேதங்கள் கூறுகின்றன. இதில் ஊறித் திளைத்தவன்தான் வாஞ்சிநாதன்.

நாடே அவரை சுதந்திர வேட்கையால் கொண்டாடியது. ஆனால் வாஞ்சியின் தந்தை கோர்ட்டில் சாட்சியம் அளிக்கும்போது ""என் மகன் வீட்டுக்கு அடங்காதவன். அதனால்தான் இப்பொழுது அவனது ஈமச்சடங்கை நாங்கள் நடத்தவில்லை. அது மட்டுமல்ல அவன் மீது எனக்கு பாசமில்லை'' என்றார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.