சமுதாய ஆன்மிகப் புரட்சி செய்தவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியதோடு இன்னும் ஒரு படி மேலே போய் தாவரங்களின் மேலும் இரக்கம் காட்டினார். எனவேதான் "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்றேன்' என்றார்.
கம்யூனிஸ சித்தாந்தம் போன்ற பல்வேறு சித்தாந்தங்கள், இங்கர்சால்- பெட்ராண்டு ரஸல்- தந்தை பெரியார் போன்றவர்களால் உபதேசிக்கப்பட்ட பகுத்தறிவு வாதங்கள் வருவதற்கு முன்பாக வாழ்ந்தவர்தான் வள்ளலார். சைவம், வைணவம் என்ற பெரும் பிரிவுகளும், ஆயிரக்கணக்கான ஜாதிகளும், ஏழை, பணக்காரன் என்ற பிரிவுகளும், ஆண் பெண் என்ற பேதங்களும் கொடிகட்டிப் பறந்த காலத்தில் சமூகப் புரட்சியும், மதப்புரட்சியும் செய்தவர்.
இவர் சைவ சமயத்தில் வேளாளர் மரபினைச் சார்ந்தவர். வள்ளலாரின் தந்தையார் பெயர் இராமையா பிள்ளை. இவர் ஐந்து முறை திருமணம் முடித்தார். திருமணம் முடித்த 5 மனைவிகளும் பிள்ளைப் பேரில்லாமலேயே இறந்தார்கள். ஆறாவதாக சின்னம்மை என்பவரை மணந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். ஒரு நாள் ஒரு சிவனடியாருக்கு சின்னம்மை உணவளித்தார். உணவருந்திய சிவனடியார் சின்னம்மையாரைப் பார்த்து, ""நீ என்னுடைய பசியைத் தீர்த்தாய் அதுபோல இவ்வுலகினரின் பசியைத் தீர்க்க வல்ல ஒரு சற்புத்திரன் உமக்குப் பிறப்பான்'' என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.
சிவனடியாரின் அருள் வாக்கிற்கிணங்க 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் பிறந்தார். வள்ளலார் வடலூரில் ஏற்றிவைத்த அணையா அடுப்பு இன்றும் எரிந்து கொண்டு வந்தவர்களுக்கெல்லாம் உணவளித்து வருகிறது.
வள்ளலார் பிறந்த சில நாட்களில் தந்தையார் காலமானார். அந்தக் குடும்பம் மீளாத்துயரில் ஆழ்ந்தது. வள்ளலாருக்கு எட்டு மாதம் முடிந்தபோது, சின்னம்மையார் தம்முடைய 5 குழந்தைகளுடன் பிறந்த ஊரான பொன்னேரிக்குக் குடி பெயர்ந்தார். இரண்டு ஆண்டுகள் சென்றபின், அவர்கள் சென்னைக்குக் குடி பெயர்ந்தார்கள்.
வள்ளலாருக்கு 5-வது வயதில் அவருடைய அண்ணன் சபாபதிப் பிள்ளை பாடம் சொல்லிக் கொடுத்தார். இவ்வுலகப் படிப்பைக் கற்க அவர் விரும்பவில்லை. அவருடைய விருப்பமெல்லாம் இறைவனின் அருளைப் பற்றியதேயாகும். எனவே தம்பியை காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பிவைத்தார்.
சபாபதி முதலியாரிடம் வள்ளலார் "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா, ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டா' என்று ஏன் சொல்லிக் கொடுக்கின்றீர்கள். வேண்டா என்பது எதிர்மறைச் சொல். எனவே அதை நான் சொல்ல மாட்டேன். அதையே வேண்டும், வேண்டும் என்ற நேர்மறை வாக்கியமாகத்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடித்தார்.
சிறு வயதிலேயே ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். மடை திறந்த வெள்ளம் போல சொற்கள் வந்து விழுந்தன. அச்சமயங்களில் இரவு 12 மணியாகியும் மக்கள் கூட்டம் அசையவில்லை.
சொற்பொழிவுகளுக்குக் கிடைத்த பணத்தைக் கிணற்றிலும், குளத்திலும், மேட்டிலும் வீசி எறிந்தார். சில சமயங்களில் பணம் கொடுத்தவர் மீதும் எறிந்ததுண்டு.
வள்ளலார் எப்போதும் வடலூரிலிருந்து திருவொற்றியூருக்கு நடந்து செல்வதுதான் வழக்கம். சென்னையில் வள்ளலார் இருந்த காலத்தில் சங்கராச்சாரியாரிடம் உரையாட நேர்ந்தது. அப்போது சங்கராச்சாரியார் ""சமஸ்கிருத மொழியே உலகிலுள்ள மற்ற எல்லா மொழிகளையும்விட சிறந்தது. அதுவே தாய்மொழி'' என்றும் கூறினார். வள்ளலார் அதை மறுத்து சமஸ்கிருதம் தாய்மொழியானால் தமிழ் தந்தை மொழி என்று கூறி, அதற்கான விளக்கங்களையும் எடுத்து வைத்து நிரூபித்தார்.
சைவத்தில் திளைத்திருந்த வள்ளலார் வைணவக் கடவுளான திருமாலைப் பற்றி பாடியுள்ளது அவரது சமரச நோக்கைக் குறிக்கிறது. ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் தோன்றினார் என்று சொல்லுவார்கள். மேட்டுக் குப்பத்தில் இருந்தபோது இவ்வாறு அடிக்கடி தன்னுருவத்தை யார் கண்ணிலும் படாமல் மறைத்துக் கொள்வதும், திரும்பி வருவதுமாக இருந்தார் என்பார்கள். இதுபோல தாம் இறைவனுடன் இரண்டற கலக்கப் போவதுப் பற்றி வள்ளலார் உணர்ந்திருந்தார்.
அதன்படி 1874-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை சீடர்களைப் பார்த்து நான் அறையின் உள்ளே போய் பத்துப் பதினைந்து நாட்கள் இருக்கப்போகிறேன். பார்த்து அவநம்பிக்கையடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றமாட்டேன். வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடுக்கமாட்டார் என்றார்.
சொன்னபடி அறையின் உள்ளே போய் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தன்னுடைய உடலையும் உயிரையும் ஒளிமயமாக்கி இறைவனோடு இரண்டறக் கலந்து சித்திபெற்றார். சமுதாயத்தைத் திருத்த முடியாத வேதனையால் "கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்று வேதனையோடு கூறியதாக ஒருதரப்பினரும், அவர் அத்தகைய அவநம்பிக்கைவாதி அல்ல என்று இன்னொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
அவர்தான் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா' என்ற எதிர் மறை வாக்கியத்தையே சொல்ல மறுத்தவராயிற்றே?
(தொடரும்)