/

கலை: ராஜாவுக்கு வயலின்... தோனிக்குக் கோப்பை!

சுமார் அரை கிராம் தங்கத்தில் அசத்தலான உலகக் கோப்பையைச் செய்திருக்கிறார் மதுரை பச்சரிக்காரத் தெருவைச் சேர்ந்த இளைஞர் நாகராஜன். அண்மையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள், தங்கக் கோப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:57 am

வே.சுந்தரேஸ்வரன்

சுமார் அரை கிராம் தங்கத்தில் அசத்தலான உலகக் கோப்பையைச் செய்திருக்கிறார் மதுரை பச்சரிக்காரத் தெருவைச் சேர்ந்த இளைஞர் நாகராஜன். அண்மையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள், தங்கக் கோப்பையை வென்ற உவகையில் மிகச் சிறிய தங்கக் கோப்பையை இவர் உருவாக்கியுள்ளார்.

""நகைத் தொழில் செய்வதில் நாங்கள் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகிறோம். நகைத் தயாரிப்பில் மற்றவர்கள் செய்வது போன்று செய்யாமல் வித்தியாசமான டிûஸன்களில் வடித்தெடுக்க வேண்டும் என்பது சிறுவயதில் இருந்தே என்னுள் கிளர்ந்த ஆர்வம். நகைத் தயாரிப்பு வேலைக்கு ஊடே கிடைக்கிற ஓய்வு நேரத்தில் கலை நுணுக்கத்துடன்கூடிய சிறிய தங்க தயாரிப்புகளைச் செய்வதில் ஆர்வம்

காட்டுவேன்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன் இரண்டரை அங்குலம் நீளத்தில் வெள்ளியில் தங்க இழை பதித்த வயலின் செய்தேன். இசையமைப்பாளர் இளையராஜாவின் ரசிகன் நான். இதனால், அவருக்கு அந்த தங்க வயலினைப் பரிசாக அளிக்க எண்ணினேன். 5 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள இளையராஜவின் வீட்டுக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அவரிடம் அந்தக் குட்டி வயலினைப் பரிசாக அளித்தேன். அவர் அதை பெறுவதற்கு மறுத்தபோது, அவர் வீட்டில் உள்ள பல பொருள்களில் இதையும் ஒன்றாக வைத்துக்கொள்ளுமாறு அன்புக் கோரிக்கை வைத்தோம். அவரும் அன்புடன் அதை ஏற்றுக்கொண்டார். இது என் வாழ்வில் மிக நெகிழ்ச்சியான விஷயம்.

அண்மையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தங்கக் கோப்பையை வென்றது இந்தியா. இதை டிவியில் பார்த்த நான், அதேபோன்று சிறிய அளவில் தங்கக் கோப்பையை வடித்தெடுக்க வேண்டும் என்று எண்ணினேன். ஒருவார காலம் வேலை செய்து 600 மில்லி கிராம் தங்கத்துக்குள் அரை அங்குலம் உயரம் கொண்ட சிறிய தங்கக் கோப்பையைச் செய்துள்ளேன். உலகக் கோப்பையின் மேல் பகுதியில் கிரிக்கெட் பந்து சுழல்வதுபோல், நான் உருவாக்கியுள்ள இக்கோப்பையிலும் பந்து சுழலும் வகையில் அமைத்துள்ளேன். இதுமட்டுமின்றி 4 கிராமில் ஒன்றே கால் அங்குலம் உயரத்தில் மற்றொரு தங்கக் கோப்பையையும் இதேபோன்று உருவாக்கியுள்ளேன்.

மதுரைக்குக் கிரிக்கெட் வீரர் தோனி வந்தால் இந்தக் கோப்பையை அவருக்கு அன்புப் பரிசாக அளிக்கவும் திட்டமிட்டுள்ளேன். இதுதவிர, வர்த்தக ரீதியில் இப்போது யாழி, யானை, சிவலிங்கம் போன்ற பல உருவங்களில் மோதிரங்களைச் செய்து வருகிறேன்.

இயந்திரம் மூலம் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் முறை வேகமாக வளர்ந்து வருவதால் கைவேலைப்பாடு மூலம் நகை தயாரிப்போருக்கு நகை "ஆர்டர்' குறைந்து வருகிறது. இக் கைத்தொழிலை நம்பியுள்ள தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கைவேலைப்பாட்டில் உள்ள நுணுக்கங்கள் இயந்திரம் மூலம் தயாரிக்கும் வடிவங்களில் கிடைக்காது என்பதால், பாரம்பரிய முறையில் நகை தயாரிக்க விரும்புவோர் இன்றைக்கும் எங்களைப் போன்ற நகைத் தயாரிப்பாளர்களையே நாடுகின்றனர். அரசும் நகைத் தயாரிப்புத் தொழிலை மேம்படுத்தும் வகையில் உரிய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றார் நாகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.