விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சேவை: சுமங்கலி அல்ல... திருமகள் அல்ல... கொத்தடிமை!

மதுரை போன்ற நகரங்களில் பேருந்து நிலையங்களில், திரைப்பட அரங்குகள் உள்ள பகுதிகளில் தனியாக நின்று கொண்டிருக்கும் சிறுவர்களை உன்னிப்பாகக் கவனித்து அவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஒருவர் வருவார். அனேகமாக அவர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:57 am

ந. ஜீவா

மதுரை போன்ற நகரங்களில் பேருந்து நிலையங்களில், திரைப்பட அரங்குகள் உள்ள பகுதிகளில் தனியாக நின்று கொண்டிருக்கும் சிறுவர்களை உன்னிப்பாகக் கவனித்து அவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஒருவர் வருவார். அனேகமாக அவர் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் ஒரு புரோக்கராக இருப்பார். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா போன்ற மாநிலங்களுக்கு சிறுவர்களைக் கடத்திச் சென்று அவர்களை முறுக்குக் கம்பெனிகளுக்குக் கொத்தடிமைகளாக விற்றுவிடுவார்.

 இப்படிக் கடத்திச் செல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட சிறுவர்களைக் கடந்த 4 ஆண்டுகளில் விடுவித்து வந்திருக்கிறார் செல்வ கோமதி. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரான அவர் சோக்கோ அறக்கட்டளை என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பின் துணை இயக்குநரும் கூட.

 ""இப்படிச் சிறுவர்களை ஏமாற்றி கொத்தடிமைகளாக அழைத்துச் செல்வார்கள். பெற்றோரின் சம்மதத்துடனும் சிறுவர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்து கொத்தடிமைகளாக ஆக்குவதும் உண்டு. சில நேரங்களில் புரோக்கர்களின் பேச்சில் மயங்கி சிறுவர்களே விரும்பிச் செல்வதுமுண்டு'' என்கிறார் செல்வகோமதி. மேலும் தொடர்ந்தார்.

 ""நான் எனது 22 வயதில் சமூக சேவை செய்யும் நோக்கத்துடன் இந்த நிறுவனத்தில் உதவி செயலாளராகச் சேர்ந்தேன். இது சட்டரீதியாகச் செயல்படும் நிறுவனம். சிவகங்கை அருகே உள்ள இளையான்குடியில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகப் பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து அவர்களை மீட்கப் போன குழுவில் நானும் இருந்தேன். 12 வயது முதல் வயதானவர்கள் வரை அங்கே கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முகத்தின் உதவியுடன் அவர்களை விடுவித்து மதுரைக்கு அழைத்து வந்தோம். அழைத்து வந்தவர்களை எங்கள் அலுவலகத்தில் 2 நாட்கள் வைத்துப் பராமரித்தோம். அவர்கள் எங்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் போது மனம் நெகிழ வாழ்த்திச் சென்றார்கள். அது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நான் உற்சாகமாக இந்தப் பணிகளில் ஈடுபட பிறருக்கு உதவி செய்வதில் உள்ள இந்த மனதிருப்தியே ஒரு காரணமாக அமைந்துவிட்டது'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

 வெளிமாநிலங்களிலிருந்து சிறுவர்களை மீட்டெடுத்துக் கொண்டு வந்த அனுபவங்களைச் சொல்லுங்களேன்? என்று கேட்டோம்.

 ""வெளிமாநிலங்களில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக இருக்கும் இடத்தைப் பற்றித் தகவல் கிடைத்ததும் எங்களுடைய குழு அங்கே சென்று பல்வேறு எதிர்ப்புகளைச் சமாளித்து இதுவரை 200 க்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. அந்தச் சிறுவர்களுடைய கதையைக் கேட்டால் கண்ணீர் வந்துவிடும். வீட்டில் அப்பாவோ, அம்மாவோ சரியில்லாத குழந்தைகளை நல்லபடியாக யாரும் கவனித்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டை விட்டு ஓட வேண்டும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். சில சிறுவர்கள் அப்பா, அம்மா இருவரும் இல்லாமல் பாட்டி வீட்டில் வளர்ந்து கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட சிறுவர்களையே புரோக்கர்கள் அணுகுகிறார்கள். தங்களுடன் வந்தால் நல்ல சாப்பாடு, புதிய ஆடைகள் வாங்கித் தருவதாக ஆசை காட்டுகிறார்கள். சிறுவர்கள் அவர்களை நம்பிச் செல்கிறார்கள்.

 நாங்கள் வெளிமாநிலத்தில் உள்ள முறுக்குக் கம்பெனிகளில் கொத்தடிமைகளாக வேலை செய்யும் சிறுவர்களை நேரில் பார்த்துப் பேசினோம். அதிகாலை 4.00 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை அவர்களை முறுக்குக் கம்பெனி முதலாளிகள் கசக்கிப் பிழிவதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அங்கு படும் துன்பங்களைத் தாங்க முடியாமல், சிறுவர்கள் அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்ல முடியாது. அப்படியே தப்பிக்க முயற்சி செய்தாலும் முறுக்குக் கம்பெனியின் ஆட்கள் அங்கங்கே இருப்பார்கள். உடனே பிடித்து பழையபடி முறுக்குக் கம்பெனியில் விட்டுவிடுவார்கள். அவர்களுக்குக் கடும் தண்டனை காத்திருக்கும். வெளி உலகத் தொடர்பு அந்தச் சிறுவர்களுக்கு விடுபட்டுப் போய்விடுகிறது. இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

 நாங்கள் மீட்டுக் கொண்டு வந்த சிறுவர்களில் ஒருவன் தங்கப்பாண்டி. மதுரைக்கருகில் உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்தவன். அவனுடைய அம்மாதான் அவனை வெளிமாநில முறுக்குக் கம்பெனிக்கு அனுப்பியிருக்கிறார். பையன் நன்றாகப் படிக்கக் கூடியவன். அவனை மீட்டுக் கொண்டு வந்த பின்பு தொடர்ந்து படித்து பி.காம் முடித்துவிட்டான். இப்போது எம்.ஏ. படிக்க முயற்சி செய்து வருகிறான்'' என்கிறார் பெருமையாக செல்வகோமதி.

 திருநெல்வேலியைச் சொந்த ஊராகக் கொண்ட செல்வகோமதி எம்.எல். படித்திருக்கிறார். ஆனால் அவர் வழக்கறிஞராகப் பயிற்சி மேற்கொள்ளாமல் தான் படித்த சட்டப் படிப்பை வைத்து மக்களுக்குச் சேவை செய்ய வந்துவிட்டார்.

 "" அடுத்து நாங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி தமிழ்நாட்டில் உள்ள பல மில்களில் கொத்தடிமைகளாக வேலை செய்யும் இளம் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துவதுதான்'' என்கிறார் அவர்.

 ""தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் பல குடும்பங்கள் இருக்கின்றன. அந்தக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள் 7 - 8 வது படிக்கும்போது, சில புரோக்கர்கள் அவர்களுடைய பெற்றோரை அணுகி சுமங்கலித் திட்டம் அல்லது திருமகள் திட்டம் என்ற ஒன்றை அவிழ்த்துவிடுகிறார்கள். அவர்களுடைய பெண் குழந்தைகளை மில் வேலைக்கு அனுப்பி வைத்தால் 3- 4 வருடங்கள் கழித்து 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் தருகிறோம். அதை வைத்து உங்களுடைய பெண் குழந்தையின் திருமணத்தை நடத்திவிடலாம் என்று ஆசை காட்டுகிறார்கள். வறுமையில் வாடும் பெற்றோர் அவர்களுடைய பேச்சில் மயங்கி பெண் குழந்தைகளை மில் வேலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். மதுரைக்கு அருகே உள்ள பெண் குழந்தையை கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள மில்களுக்கும், கோவை, திருப்பூர்,

 நாகப்பட்டினம், திண்டுக்கல் போன்ற பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தைகளை மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள மில்களுக்கும் அனுப்பி விடுகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் வீட்டை விட்டுப் பிரிந்து போய்விடுகிறார்கள். ஆனால் காட்டன் மில்களில் உள்ள சூழ்நிலை, ஒருநாளைக்கு இரண்டு ஷிப்ட்கள் செய்ய வேண்டிய கொடூரம் ஆகியவற்றால் மூன்று வருடங்களுக்குள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. வளர வேண்டிய வயதில் கடுமையாக உழைப்பதால் வளர்ச்சி குன்றிவிடுகிறது. அவர்களின் இந்த நிலையை மாற்ற நாங்கள் மட்டுமின்றி பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் முயற்சி செய்து வருகிறார்கள்.

 திண்டுக்கல் மாவட்ட அண்ணா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் மற்றும் மாநில அண்ணா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் விளைவாக காட்டன் மில்களில் வேலை செய்யும் பெண் குழந்தைகளின் நிலையை அறிய, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அப்படி அமைக்கப்பட்ட மதுரை மாவட்டக் குழுவில் நான் ஓர் உறுப்பினர். அந்த வகையில் பல காட்டன் மில்களுக்குச் சென்று ஆய்வு செய்தேன்.

 அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு மாதச் சம்பளம் எவ்வளவு என்றே தெரியவில்லை. கையில் பணம் கொடுப்பதில்லை. வங்கிக் கணக்கில் போட்டுவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பணம் வங்கிக் கணக்கில் போடப்படுகிறது என்று யாருக்குமே தெரியவில்லை. இரண்டு ஷிப்ட் செய்வதற்கு அதிகக் கூலி என்பதெல்லாம் கிடையாது. வளர வேண்டிய அந்த இளம் வயதில் அந்தப் பெண்கள் பலவிதமான நோய்களுக்குள்ளாகிவிடுகிறார்கள். தொழிலாளர்களுக்கான சட்டப்படியான உரிமைகள் எதுவும் அவர்களுக்கில்லை. மூன்றாண்டுகள் கழித்து அவர்கள் குறிப்பிட்ட 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை.

 நான் ஆய்வு செய்த விஷயங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறேன். எங்களுடைய சோக்கோ அறக்கட்டளை மூலமாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் இது ஒரு நவீன கொத்தடிமை முறை என்று தெரிவித்திருக்கிறோம்.

 உலகத் தொழிலாளர் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி பெண் பிள்ளைகளை இப்படி ஏமாற்றி வேலைக்காக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்வது கூட கடத்தல்தான். சுமங்கலித் திட்டத்தை ஒழித்துக் கட்டவும், இவை போன்ற திட்டங்களால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை மீட்கவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். தொடர்ந்த முயற்சிகளின் மூலமாகவும்,சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினரின் துணையுடனும் அவர்களை மீட்க முடியும் என்று நம்புகிறேன்''

 என்கிறார் செல்வகோமதி உறுதியுடன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.