பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வேலைவாய்ப்பு: கம்ப்யூட்டர் இல்லை என்றால் எதுவுமேயில்லை!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. அமெரிக்காவில் மையங் கொண்ட அந்தப் பொருளாதார மந்தம், உலகமெங்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கொட்டிக் க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:03 am

ந. ஜீவா

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. அமெரிக்காவில் மையங் கொண்ட அந்தப் பொருளாதார மந்தம், உலகமெங்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது என்பதற்காக, பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ படித்த பல மாணவர்கள் பலர் அவசர அவசரமாக எம்பிஏ படிக்கப் போனார்கள். இப்போது என்ன நிலை? தகவல் தொழில்நுட்பத்துறை பொருளாதார பெருமந்தத்திலிருந்து மீண்டு வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்ள சென்னையில் உள்ள டாட்டா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் நிறுவனத்தில் குளோபல் அல்லயன்ஸ் பிரிவில் துணைத் தலைவராக உள்ள கே.ஜெயராமகிருஷ்ணனை அணுகினோம்.

""இப்போது தகவல் தொழில்நுட்பத்துறை மிகவும் பிரகாசமாக இருக்கிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல் நமது நாட்டிலும் கம்ப்யூட்டர் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன'' என்கிறார் ஜெயராமகிருஷ்ணன் நம்பிக்கையுடன்.

இந்தியாவில் கம்ப்யூட்டர் துறையில் வேலைவாய்ப்புகளா? என்று வியப்புடன் கேட்டோம்.

""ஆமாம். இந்தியாவில் இப்போது எல்லா அரசுத்துறை நிறுவனங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறார்கள். இ பாஸ்போர்ட் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். காவல்துறையிலும் இந்தியா முழுக்க கம்ப்யூட்டர்மயமாக்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இந்தப் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இந்தப் பணிகளுக்குத் தேவையான மென்பொருள்களை உருவாக்குவதில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல,கம்ப்யூட்டர் மயமாக்கிய பின்பு, அவற்றைப் பராமரிக்க வேண்டிய தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எனவே பராமரிப்பு பணிகளுக்கும் ஏகப்பட்ட தேவை இருக்கிறது'' என்கிறார் அவர்.

""முன்பெல்லாம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்றால் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் என்றுதான் நினைத்திருந்தோம். இப்போது சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தும் நிறைய வேலைவாய்ப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. உலகம் முழுக்க பிபிஓ, கால் சென்டர் பணிகள் பெருகியுள்ளன. உலகின் கவனம் முழுக்க சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளில் மீது குவிந்திருக்கின்றன. சீனாவை உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு என்று ஒதுக்கிவிட்டார்கள். அதனால் சேவைத்துறைப் பணிகளுக்கான வாய்ப்புகள் எல்லாம் நம்மைத் தேடி வருகின்றன. எனவே கம்ப்யூட்டரில் அதிலும் மென்பொருள் துறையில் நிறைய வாய்ப்புகள் நமது நாட்டின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றன'' என்ற அவரிடம், ஒபாமா அதிபராக வந்தவுடன்,அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கப் போவதாக அறிவித்தார். இதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வரும் வேலைவாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் ஏற்பட்டது. அமெரிக்காவில் வரவிருக்கிற தேர்தலில் போட்டியிடும் மிட் ரோமனேயும் தற்போதுஅமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பாதிப்பு ஏற்படாதா? என்று கேட்டோம்.

""இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்கனவே தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்புகளைக் கொடுத்து, அவற்றால் பயன் அடைந்திருக்கிற நாடுகள் எளிதில் அந்தப் பயன்களை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஒபாமா சொன்னதுபோல வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காக நடவடிக்கை எடுத்தாலும் அமெரிக்க அரசுத்துறை வேலைகளை வேண்டுமானால் அவுட்சோர்சிங் செய்வதில் இருந்து தடுத்துவிடுவார்கள். அதுவே சிரமம். ஆனால் அமெரிக்காவின் தனியார் நிறுவன வேலைகளை அவுட்சோர்சிங் செய்வதை அவர்களால் தடுக்கவே முடியாது. எனவே தகவல் தொழில்நுட்பத் துறையில் நமக்குப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. இப்போது உலக அளவில் நமக்குக் கிடைக்கிற புராஜெக்ட்களில் பாதி அளவுக்கு நாம் அமெரிக்காவிலிருந்துதான் பெறுகின்றோம். தேர்தலுக்காக அங்கேயுள்ள அரசியல்வாதிகள் கொடுக்கிற வாக்குறுதிகளை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை'' என்கிறார் உறுதியாக.

கம்ப்யூட்டர் படிப்பு என்று பொதுவாகச் சொன்னாலும் அதில் எந்தக் குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் வேலைவாய்ப்புகள் அதிகம்? என்று கேட்டோம்.

""கம்ப்யூட்டர்துறை வளர்கிறது என்றால் அது எல்லாப் பிரிவுகளிலும், துறைகளிலும் வளர்கிறது என்றுதான் அர்த்தம். மின்துறையில் கணினியின் பயன்பாடு பவர் கன்ட்ரோல் சிஸ்டம் போன்றவற்றில் இருக்கிறது. மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் சிஎன்சி போன்ற இயந்திரங்கள் வந்துவிட்டன. மருத்துவத்துறையில் கணினியின் பயன்பாடு மிக அதிகம் என்று எல்லாருக்கும் தெரியும். நமது செல்போனே கம்ப்யூட்டர் தொடர்பானதுதான். வருங்காலத்தில் கம்ப்யூட்டர் இல்லை என்றால் எதுவுமேயில்லை என்றாகிவிடும். எனவே கம்ப்யூட்டர் படிப்பில் எந்தப் படிப்பாக இருந்தாலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, எம்சிஏ, எம்எஸ்ஸி ஐ.டி., பி.டெக் ஐ.டி., என்று எந்தப் படிப்பு படித்தாலும் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, கம்ப்யூட்டர்துறை வளர்ச்சியினால் எம்பிஏ படிக்கிறவர்களுக்கும் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. மார்க்கெட்டிங் கன்ஸல்டன்ஸியில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. மேனேஜ்மென்ட் வித் சிஸ்டம் ஸ்பெஷலைசேஷனுக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. எம்பிஏ-வில் மனிதவள மேலாண்மை படித்தவர்களுக்கு நிறைய தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன'' என்கிறார் ஜெயராமகிருஷ்ணன் உற்சாகமாக.

நமது நாட்டிலேயே கம்ப்யூட்டர்துறையில் வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்று சொல்கிறீர்கள். பிறநாட்டு நிறுவனங்களுக்காக வேலைகளைச் செய்துதரும் நம்நாட்டு நிறுவனங்களே அதிகச் சம்பளம் தருகிறார்கள். நமது நாட்டு தகவல்தொழில்நுட்பத் துறை வேலைகளை எடுத்துச் செய்யும்போது அந்த அளவுக்குச் சம்பளம் தருவார்களா? என்று கேட்டோம்.

""தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் பிறதுறை நிறுவனங்களைவிட அதிக சம்பளம் தரப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சம்பளத்தை நிர்ணயிப்பது வெளிநாட்டு நிறுவனங்கள் அல்ல. அவை தருகின்ற புராஜெக்ட்களும் அல்ல. நம்நாட்டில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் தர வேண்டும் என்று தாங்களாகவே நிர்ணயிக்கிறார்கள். எனவே வெளிநாட்டு வேலையா? உள்நாட்டு வேலையா? என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்கிறவர்கள் கவலைப்படத் தேவையில்லை. தகவல்தொழில்நுட்பத் துறையில் சம்பளம் குறைந்துவிடுமே என்றும் பயப்பட வேண்டாம்'' என்கிறார் நம்பிக்கையுடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.