/

வளர்முகம்: தங்​கம் தந்த தன்னம்பிக்கை!

வாய்ப்புக் கிடைத்தால் வானமும் வசப்படும் என்பார்கள். அதுபோன்ற வாய்ப்பு தேசிய மாணவர் படையில் (என்சிசி) சேர்ந்ததன் மூலம் தங்கப் பதக்கமாகக் கிடைத்துள்ளது மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு. ஆம்,

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:38 am

வே.சுந்தரேஸ்வரன்

வாய்ப்புக் கிடைத்தால் வானமும் வசப்படும் என்பார்கள். அதுபோன்ற வாய்ப்பு தேசிய மாணவர் படையில் (என்சிசி) சேர்ந்ததன் மூலம் தங்கப் பதக்கமாகக் கிடைத்துள்ளது மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு.

ஆம், அகில இந்திய அளவில் நடைபெற்ற என்.சி.சி. சீனியர் பிரிவு போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவரான எட்வர்டு இமானுவேல் எல்தம்.

அண்மையில் தில்லியில் நடைபெற்ற, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த என்.சி.சி. அணிகளுக்கான திறன்காண் போட்டியில் மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த இம்மாணவர் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங்கின் கையால் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பெற்று தமிழகம் திரும்பியுள்ளார். ஆனந்த மழையில் நனைந்திருந்த அவர் இச்சாதனை குறித்து நம்மிடம் கூறியதாவது:

""மதுரை சர்வேயர் காலனியில் குடியிருந்து வருகிறோம். தியாகராஜர் கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறேன். எனது தந்தை ஸ்போக்கன் இங்கிலீஸ் அகாதெமி நடத்தி வருகிறார். தாயார் தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

பள்ளிக் காலங்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்றவற்றில் ஏதும் நான் சேர்ந்ததில்லை. என்.சி.சி-யில் சேர்ந்ததே ஓர் எதிர்பாராத அனுபவம்தான். எனது கல்லூரியின் சீனியர் மாணவர் சாருஹாசன், என்.சி.சி.யில் சேருவது தொடர்பாக வகுப்பில் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரைக் கிண்டல் பண்ணுவதற்காக அவர் பின்னால் சென்றோம். அந்தநேரம், என்.சி.சி. பிரிவுக்கு மாணவர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கல்லூரியின் என்.சி.சி. லெப்டினென்ட் கமாண்டர் நாகராஜன் சார் எனது பெயரை நான் எதிர்பாராத வகையில் சேர்த்துவிட்டார். ஆரம்பத்தில் அதன் பயிற்சி வகுப்புக்குக்கூட நான் செல்லவில்லை.

ஆனால், பிற மாணவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தியதாலும், வகுப்பு ஆசிரியர் கோபித்துக்கொள்வார் என்பதாலும் வேறுவழியில்லாமல் போனேன். ஆனால், பயிற்சிக்குப் பிறகுதான் அதன் மகத்துவம் எனக்கு தெரிய ஆரம்பித்தது.

அதிகாலையிலேயே எழுந்திருத்தல், எனது பணிகளை நானே செய்வது, படிப்பில் கவனம் செலுத்துவது என்று பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

கோவில்பட்டியில் நடைபெற்ற இண்டர் யூனிட் போட்டிகளில் (ஐயுசி) 4 கல்லூரிகளைச் சேர்ந்த 250 என்.சி.சி. மாணவர்கள் கலந்துகொண்டனர். எழுத்துத் தேர்வு, என்.சி.சி. பாடத்தேர்வு, பொது அறிவு, பேச்சாற்றல், குழு கலந்துரையாடல், துப்பாக்கி சுடுதல், நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் நான் உள்பட இருவர் மட்டுமே சிறந்த மாணவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதையடுத்து, மாநில அளவில் திருச்சியில் நடைபெற்ற இண்டர் குரூப் போட்டிகளில் 800 பேர் கலந்துகொண்டனர். இதில், எனக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற்ற போட்டியில்  நானும், சென்னை லயோலா கல்லூரியைச் சேர்ந்த ஜான் ரிச்சர்ட் என்பவரும் கலந்துகொண்டோம். இந்திய அளவில் 17 என்.சி.சி. இயக்குநரகங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள் இடையே குடியரசு தின முகாம் போட்டிகள் நடைபெற்றன. இதில், சீனியர் பிரிவில் எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இது எனது தன்னம்பிக்கை, உழைப்புக்கும் மற்றும் ஆசிரியர்கள், நண்பர்களின் ஊக்குவிப்புக்கும் கிடைத்த வெற்றி.

ஜன.28-ம் தேதி நடைபெற்ற என்.சி.சி. பேரணி நிகழ்ச்சியின்போது பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு தங்கப் பதக்கம் அணிவித்து "வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகள்" என்று கூறினார். இது வாழ்வில் மறக்க முடியாத தருணமாகும். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்றவர்களுடன் விருந்து சாப்பிட்டதும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்று எனது மதுரைக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்ததை நினைக்கும்போது ஆனந்தமாகவும் இருக்கிறது.  

இப்போட்டிகளில் கலந்துகொள்ள நான் ஆரம்பத்தில் தயங்கியபோது என்னை மூத்த வகுப்பு மாணவர்கள் சாருஹாசன், துர்கா, வித்யா, சிங்கராஜ், சின்னராஜ் ஆகியோரும், உதவிப் பேராசிரியர் தில்லைராஜன், பெற்றோர் மிகவும் உற்சாகப்படுத்தினர். அதனால்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்ததாக நினைக்கிறேன்.

என்.சி.சி.யில் சேருவதற்கு முன்பு இருந்த லட்சியத்திற்கும், தற்போதுள்ள லட்சியத்திற்கும் நிறைய வேறுபாட்டை நான் உணர்கிறேன். பல்வேறு மாற்றங்கள் என்னுள் ஏற்பட்டுள்ளன. இப்படையில் சேர்ந்தது எனக்கு ஒழுக்கத்தை கற்றுத் தந்துள்ளது. சமூகத்தில் நிலவும் அவலங்களைத் தைரியமுடன் எடுத்துரைக்கும் மனப்பக்குவம் கிடைத்துள்ளது.

பிறரிடம் பேசுவதற்குக்கூட தயங்கிய நான் தற்போது யாரிடமும் கூச்சமின்றி பேசமுடிகிறது. தேசப்பற்று அதிகரித்திருக்கிறது. வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

ராணுவப் படையில் கர்னலாகவோ, கப்பற்படையில் கேப்டனாகவே வர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்கான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் எட்வர்டு இமானுவேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.