அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கலாம் வீட்டில் ஒரு மியூசியம்!

பள்ளிக் காலத்திலேயே பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று வியந்து போய் அதுவே லட்சியமாகி, அதைப் போல தானும் ஒரு நாள் பறக்க வேண்டும் என்பதே கனவாக மாறி, அந்தக் கனவையும் நனவாக்கிக் காட்டிய ஒரு விஞ்ஞானி டாக்டர்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:53 am

சி.வ.சு.ஜெக​ஜோதி​

பள்ளிக் காலத்திலேயே பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று வியந்து போய் அதுவே லட்சியமாகி, அதைப் போல தானும் ஒரு நாள் பறக்க வேண்டும் என்பதே கனவாக மாறி, அந்தக் கனவையும் நனவாக்கிக் காட்டிய ஒரு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.     

இந்தியாவின் கடைக்கோடியான ராமேசுவரம் தீவில் பிறந்து, வறுமையின் பிடியில் சிக்கி, தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தவிடு பொடியாக்கி, இந்தியாவிலேயே மிக, மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து அப் பதவிக்குப் பெருமையும் சேர்த்தவர் அவர்.

ராமேசுவரம் ரயில் நிலையம் அருகில் அவர் வாழ்ந்த வீட்டின் மாடியிலேயே அவரது வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள், அரிய கண்டுபிடிப்புகள், பெற்ற விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் வைக்கப்பட்டிருக்கிற ஓர் அருங்காட்சியகம் 27.6.2011-ல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தை ஒரு வலம்வந்தோம்:

நுழைந்தவுடன் முதலில் எங்கள் கண்ணில் பட்டு வரவேற்றது "தினமணி'யின் கார்ட்டூனிஸ்ட் மதி, அப்துல் கலாமுக்கு வரைந்து தந்த ஓவியம். பித்தளைத் தகட்டில் வரையப்பட்டிருக்கும்  ஓவியம் அது. ஒரு பாதியில் குடியரசுத் தலைவர் மாளிகையும் அதன் நடுவே Kalam Lived here என்ற வாசகமும், மற்றொரு பாதியில் இந்தியாவின் படத்தை வரைந்து அதன் நடுவே Kalam lives here என்ற வாசகமும் எழுதப்பட்டிருக்கிறது.

நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்த போதே அப்துல் கலாமின் அண்ணன் முகம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயரின் பேரன் முகம்மது ஆவுல் மீரா நம்மை வரவேற்கிறார்.

அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டிருந்த அத்தனைக்கும் ஒவ்வொன்றாய் விளக்கம் சொல்லிக் கொண்டே வந்தார் அவர்.

கலாம் வசித்த சின்னஞ்சிறு ஓட்டு வீடு, சிறுவனாக இருந்தது முதல் கல்லூரிக் காலங்கள் வரை அவரது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், பொறியியல் படிக்கும் போது அவர் பயன்படுத்திய

T Square ஸ்கேல் ஆகியன இருந்தன. அடுத்து அவரது கண்டுபிடிப்புகளில் ஒன்றான நீரிலும், நிலத்திலும் அதிக வேகத்தில் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் கப்பல் உருவான விதம், குடியரசுத் தலைவராகப் பதவியேற்பது, யூரோப்பியன் யூனியன் பார்லிமெண்டில் உரையாற்றுவது உள்ளிட்ட புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 6.6.2000-ல் ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய சுகோய்-30 ரக போர் விமானத்தினை 25 ஆயிரம் அடி உயரத்தில் 36 நிமிடங்கள் ஓட்டி விண்ணில் அட்டகாசம் செய்து, பறந்து விட்டுத் திரும்பியது.

இவ்விமானத்தில் கலாம் கொஞ்சம் கூட பயமில்லாமல் வானில் மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பறக்கும் காட்சியும் இருந்தது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS சுந்தராக்ஷ் எனப்படும் நீர் மூழ்கிக் கப்பலில் கடலுக்கு அடியில் 30 மீட்டர் ஆழத்தில் 3 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்தவர். போர்க் கப்பலில் கடந்த 13.2.2006-ல் நிகழ்த்திய இந்த அரிய சாகசப் பயணம் குறித்தும் ஆவுல் மீரா விளக்கினார். சியாச்சின் பனிமலைச் சிகரத்திற்கு கடந்த 2.4.2004-ல் நேரில் சென்று ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் காட்சி உள்ளிட்ட புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

இலகுரக எடை குறைவான தேஜாஸ் என்று பெயரிடப்பட்ட போர் விமானத்தை வடிவமைத்த பணியில் முக்கியப் பங்காற்றிய படமும் இருந்தது. செயற்கைக் கோள்களான SLV, PSLV, GSLV உள்ளிட்ட செயற்கைக்கோள்கள், அக்னி 1,2,3, பிருத்வி, பிரம்மோஸ், ஆகாஸ், திரிசூல், விசாக் உள்ளிட்ட ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் அர்ஜூன், பீமா, விஜயா உள்ளிட்ட பீரங்கி வாகனங்களின் மாதிரி வடிவங்கள் அனைத்தும் கண்காட்சியகத்தில் இடம் பிடித்திருந்தன. இவற்றில் கலாம் இஸ்ரோவில் பணியாற்றிய காலங்களில் அவரது தலைமையில் நடந்த செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் விண்ணில் ஏவப்பட்ட விவரங்களையும், அவை எவ்வாறு வானில் ஏவப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்கிறது, எவ்வாறு நிலை நிறுத்தப்பட்டு படங்களை எடுத்து அனுப்புகிறது, அந்நியர்கள் நடமாட்டத்தை அங்கிருந்தே எவ்வாறு கண்காணிக்கிறது, எதிரிகளை எவ்வாறு தாக்கி அழிக்கிறது, வானிலையை எவ்வாறு கணித்துச் சொல்கிறது என்பன போன்ற விவரங்கள் அடங்கிய ஒரு குறும்படத்தையும் ஆவுல் மீரா போட்டுக் காண்பித்தார்.

அப்துல்கலாமுக்கு வழங்கப்பட்ட விருதுகளான பத்மபூஷண் (1981) பத்மவிபூஷன் (1990) இந்தியாவிலேயே மிக உயரிய விருதான பாரதரத்னா விருது (1997) ஆகிய 3 விருதுகளின் மாடல்களும் ஒரு நீண்ட கண்ணாடிப் பெட்டிக்குள் கம்பீரமாய் காட்சியளித்தன. பிலிப் டோபியாஸ் விருது (2006), கிங்ஸ் சார்லஸ் விருது (2007), கிரவுன் மெடாலியன் விருது (2007), ஹீவர் விருது (2008) இவ் விருதுகள் உள்பட உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவருக்கு வழங்கப்பட்ட 55-க்கும் மேற்பட்ட கௌரவ விருதுகள், சான்றிதழ்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

வெளிநாட்டவர்கள் கூட வியந்து போகும் வகையிலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் கலாம் நடத்திய அனுகுண்டு சோதனையும், அதை அவர் நிகழ்த்திக் காட்டிய இடங்களையும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் (1998) பார்வையிட்ட புகைப்படங்களும் அருங்காட்சியகத்துக்கு மேலும் அழகு சேர்த்திருந்தன.

கடந்த 2002 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பது, முக்கியத் தலைவர்கள் மற்றும் சர்வ மதத் தலைவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இருந்தன.

விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த ஆவுல் மீரா எடை இல்லாத செயற்கைக்கால் செய்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

விழா ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவர் மேடையேறி வந்து கலாமிடம் பரிசு பெற முடியாமல் செயற்கைக்காலுடன் நடக்கக் கூட முடியாத நிலையில் மேடையருகே வந்தார். அவர் வருவதைப் பார்த்து விட்டு மனம் வருந்திய கலாம் அந்த நிமிடமே எடையே இல்லாத இலகுவான செயற்கைக் காலைத் தயாரிப்பது என்று முடிவு எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதன் விளைவாக ராக்கெட் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் ஒன்றின் மூலமாக மிகக்குறைந்த எடையுடன் கூடிய 300 கிராம் எடை மட்டுமேயுள்ள செயற்கைக் காலை கண்டுபிடித்தார். 3 கிலோ எடையுடன் கூடிய செயற்கைக்காலை மாட்டிக்கொண்டு அவதிப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விமோசனம் பிறந்தது.

துபை நாட்டில் பரிசாக வழங்கப்பட்ட தங்க வாள், ஹரியானாவில் மார்பிள் கற்களால் செய்யப்பட்ட அரசர் உட்கார்ந்து செல்லும் அழகிய யானை, கலாமின் வேண்டுகோளுக்கிணங்க தைவான் நாட்டு நண்பர் யூசியால் அந்நாட்டு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் உள்ளிட்ட அவர் பெற்ற பரிசுப் பொருட்களும் இருக்கின்றன.

படங்கள் : எஸ்.அருண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.