நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி- 15.
அண்மையில், பிரபல படத் தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளருமான நண்பரைச் சந்தித்து


படவுலகம்: இன்று இப்படி... அன்று எப்படி?
அண்மையில், பிரபல படத் தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளருமான நண்பரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். எங்களது பேச்சு இன்றைய படவுலகின் நிலையைப் பற்றி திரும்பியது. அப்போது அவர் சொன்ன கருத்துக்கள், நம்மைச் சிந்திக்கத் தூண்டுபவை:
""இன்றைய திரையுலகம், குறிப்பாக தமிழ், தெலுங்கு படவுலகம் முற்றிலும் மாறிவிட்டது. படப்பிடிப்புக்காக படச்சுருளை பயன்படுத்துவது குறைந்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருகி வருகிறது. இதை பட உலகின் வளர்ச்சி என்பதைவிட தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்று கூறலாம்.
அன்று பட உலகில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதன் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்கள்.
இன்று தனிப்பட்ட சிலரின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்காக பட உலகில் சம்பந்தப்பட்டவர்கள் பாடுபட்டுக் கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
பண முதலீடு, விநியோக வெளியீட்டுத்துறை, நட்சத்திர ஊதியம் இன்னும் பலவும் சேர்ந்து படவுலகைத் திக்குமுக்காட வைக்கின்றன. இந்தத் தொழிலில் சிலர், கார்ப்பரேட் நிறுவனத்தினர் ஏறக்குறைய இதை ஒரு விளையாட்டு அரங்கமாகவே மாற்றிவிட்டார்கள். இதனால் இன்றைய படவுலகம் நிரந்தரமற்ற தன்மையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சமீப காலத்தில் திரையிடப்பட்ட பல படங்களில் பெரும்பாலானவை வெற்றிபெறவே இல்லை. சில படங்கள் அந்த படத்திற்கான பிரதிகள் (பிரிண்ட்) எடுக்கப்பட்ட தொகையைக் கூட மீட்டுத் தரவில்லை.
படத்தின் வருமானத்திற்கும் அதில் நடிக்கும் நட்சத்திரம் வாங்கும் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய நிலையே இல்லை. அந்த அளவுக்கு... வான் முட்டும் அளவுக்கு... நட்சத்திர ஊதியம் உயர்ந்துவிட்டது.
இன்றைய படங்களின் வெற்றி, தோல்வி சாணக்கிய வியாபார யுக்தியினால்தான் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர தரத்திலோ, திறமையிலோ அல்ல. பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக படத்தயாரிப்பில் ஈடுபட முடியாத சூழ்நிலை. தற்போது நிலவி வரும் நட்சத்திர கெடுபிடியில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நட்சத்திரங்களின் தயவில்தான் வாழ வேண்டியிருக்கிறது.
அன்று தயாரிப்பாளர்கள் தங்களுக்கென சில கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு, அதற்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு மற்ற துறையினருடன் இணைந்து செயலாற்ற முடிந்தது.
உலகம் முழுவதும் படங்கள் திரையிடப்பட்டு 100 நாட்கள், 25 வாரம் ஓடி விழா எடுப்பதெல்லாம் மிக...மிக...மிக அரிது. ஆனால் இசை வெளியீட்டு விழா என்று ஆடியோ வெளியீட்டு விழா சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பாரீஸ், டொரான்டோ, அண்டார்டிகா, அலாஸ்கா என்று உலக முழுவதும் நடைபெறுவதுதான் படத்தின் வெற்றிவிழாவாகக் கருதப்படுகிறது'' என்று ஒரு பெரிய விமர்சனத்தைச் சொல்லி நிறுத்தினார் அந்த நண்பர்...
அப்போது என் நினைவில் சென்னையில் நடைபெற்ற அன்றைய திரைப்பட விழா ஒன்று நிழலாடியது...
அன்று
ஜெமினி, ஏவி.எம். நிறுவனங்களைத் தொடர்ந்து பம்பாயில் தமது முதல் படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் கோவை பட்சிராஜா ஸ்டூடியோவின் அதிபர் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு.
எம்.ஜி.ஆர். நடித்து, அவர் தயாரித்து இயக்கிய "மலைக்கள்ளன்' படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்திற்காக போடப்பட்டிருந்த செட்களையே பயன்படுத்தி இந்திப் படமும் எடுக்கலாமே... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, படத்தை இந்தியில் தயாரிக்க பம்பாய்க்கு பயணமானார் நாயுடு.
பம்பாயில் சில நண்பர்களுக்கு "மலைக்கள்ளன்' படத்தைப் போட்டுக்காட்டி, அவர்களது கருத்தினைக் கேட்டார்.
""இந்தக் கதையையா இந்தியில் எடுக்கப் போகிறீர்கள்? தற்கொலை முயற்சிதான்'' என்றார்கள் நண்பர்கள்.
""திலீப்குமாரை நடிக்க வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்?'' என்று அவர்களிடமே கேட்டார்.
""திலீப் குமார் இந்த மாதிரி வேடங்களில் நடித்ததே கிடையாது... நடிக்கவும் வரமாட்டார்'' என்றார்கள் நண்பர்கள்.
""ஓ... சரி... அப்படியா'' என்ற நாயுடு, பிரபல இந்தி நட்சத்திரம் திலீப்குமாரை அணுகினார்.
ஆனால் அப்படத்தில் நடிக்க திலீப்குமார் ஒப்புக் கொள்ளவில்லை. "மலைக்கள்ளன்' படத்தை திலீப்குமாருக்கு போட்டுக் காண்பித்தார். அப்போதும் இது "ஆன்' படத்தில் இருந்த என் கதாபாத்திரம் போலவே இருக்கிறது எனத் தயங்கினார் திலீப்.
""திலீப்... இந்த தமிழ்ப் படத்தை எடுக்க 25 லட்ச ரூபாய் செலவு செய்தேன். நீங்கள் இந்தியில் நடித்தால் கட்டாயம் 40 லட்ச ரூபாய் செலவு செய்து தயாரிப்பேன்'' என்றார் எம்.எஸ். ஸ்ரீராமுலு நாயுடு.
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டபடி படம் எடுப்பதிலும், ஒப்பந்தப்படி ஊதியத் தொகையை தருவதிலும் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதைப் புரிந்து கொண்ட திலீப்குமார், "ஆசாத்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
தென்னிந்தியாவுக்கு (கோவை) பிரபல இந்தி நடிகரை முதன்முறையாக அழைத்து வந்து நடிக்க வைத்த பெரிமைக்குரியவர் நாயுடு அவர்கள். அது மட்டுமல்ல, திலீப்குமாரை ஒரே இடத்தில் சேர்ந்தாற்போல் தங்கவைத்து மிகமிக குறுகிய காலத்தில் மூன்று மாதங்களுக்குள் ஆசாத் படத்தைத் தயாரித்து, வெளியிட்டு பம்பாய் படவுலகத்தையே அதிசயிக்க வைத்தார் நாயுடு அவர்கள்.
ஆசாத் படத்திற்குப் பிறகுதான் திலீப்குமாருக்கு தென்னிந்திய படவுலகின்மீது நம்பிக்கையும், ஆர்வமும் ஏற்பட்டு, தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடித்தார்.
இந்த சாதனையைப் படைத்ததற்காக பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு அவர்களுக்கு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடத்தலாம் என்று என் தந்தையார் சொன்ன யோசனையை எஸ்.எஸ். வாசன் அவர்களும், ஏவி.எம். அவர்களும் ஏகோபித்து ஏற்று, சென்னையில் தென்னிந்திய படவுலகினர் அனைவரும் பங்கேற்க, ஒரு பெரும் விழாவை நடத்தி நாயுடு அவர்களை கெüரவித்தார்கள். அதனினும் சிறப்பு விழா நடந்த மறுநாளே நாயுடு அவர்கள் ஏவி.எம்., எஸ்.எஸ். வாசன், என் தந்தையார் ஆகியோரை வீட்டில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டதுதான்...
அந்த அளவுக்கு தமிழ்ப்பட உலகில் ஒற்றுமையும் செயல்பாடும் ஓங்கி இருந்த காலம் அது.
இப்படிப்பட்ட நிலையிலும் பிரச்னைகள் வரும்போது தயாரிப்பாளர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லவும் விவாதிக்கவும் முடிந்தது. உதாரணத்திற்கு என் தந்தையாரையே சொல்லலாம். அன்று படவுலகம் பல பிரச்னைகளைச் சந்தித்து, அதை தீர்க்க முற்பட்டபோது புதிய தயாரிப்பாளர்களின் வருகையை ஏற்கெனவே இருந்த தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் என் தந்தையாரோ புதியவர்களை வரவேற்கும் நிலையில் இருந்து மாறவில்லை. புதியவர்களின் வருகையால் படவுலகில் புதுமைகள் பூத்துக் குலுங்க வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி எதிர்த்தவர்கள் புதியவர்களை ஏற்று வரவேற்கச் செய்தார் என் தந்தையார்.
இப்படி தொழிலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவான விஷயங்களில் படஉலக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்த இரு நிகழ்ச்சிகளைப் பற்றி என் தந்தையார் சொல்லக் கேட்போம்...
""நான் எப்போதுமே இந்த படத்துறையில் எனக்கு மூத்தவர்களாக விளங்கிய எஸ்.எஸ். வாசன், ஏவி.எம்., டி.ஆர். சுந்தரம், எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறேன்.
தொழில்துறையில் எனக்கு பிரச்னைகள் வரும்போதெல்லாம் நான் அவர்களது ஆலோசனைகளைக் கேட்பதுண்டு, அவர்களும் அறிவுரை தருவார்கள்.
எங்களுக்குள் சிலவற்றில் கருத்துவேறுபாடுகள் எழுவதுண்டு. இருந்தாலும் நாங்கள் ஒரே குடும்பமாக பழகி செயலாற்றி வந்தோம்.
முன்னாள் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இந்திய அரசின் வர்த்தகம், தொழில் துறை அமைச்சராக இருந்த சமயத்தில், நான் அகில இந்திய சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தேன்.
அப்போது குடும்பத்திற்குள் பிரச்னை மாதிரி படவுலகுக்கு ஒரு பிரச்னை கச்சா பிலிம் உருவில் வந்தது. திரைப்படம் இவ்வளவு அடி நீளம்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை பம்பாய் படவுலகினர் ஆதரித்தார்கள்.
ஆனால் தென்னிந்திய படங்கள், குறிப்பாக தமிழ், தெலுங்கு படங்களை வசனம், நடிப்பு, பாடல், இசை, ஸ்டண்ட் என பல அம்சங்களையும் கலந்து பதினோராயிரம் அடிக்குள்தான் எடுக்க வேண்டும் என்பது இயலாத நிலையில் பெரிய பாதிப்பு ஏற்படும். இதை மத்திய அரசிடம் வலியுறுத்தி பிலிம் சுருளுக்கு விதிவிலக்கு அளிக்கும்படி பேச திரைப்பட குடும்பத்தினர் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பட உலகின் சார்பில் நான் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி சாஸ்திரி அவர்களைச் சந்தித்தேன்.
"சந்தமாமா' நிறுவனத்தின் வெளியீட்டாளர் என்கிற முறையில் ஏற்கெனவே எனக்கு பரிச்சயமானவர் திரு. சாஸ்திரி அவர்கள். நான் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் "சந்தமாமா ரெட்டி' என்றே அழைப்பார்.
""இந்தியாவின் கலாச்சாரம் எல்லா மாகாணங்களிலும் ஒரே மாதிரிதான் உள்ளது. நீங்கள் ஏன் பதினோராயிரம் அடிக்குள் படம் எடுக்கக் கூடாது?'' என்று கேட்டார் மந்திரி சாஸ்திரி.
அப்போது அவரிடம், நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உடுத்தும் வேட்டி மிகவும் நன்றாக உள்ளது. இது எத்தனை முழம் என்று கேட்டேன்.
அதற்கு மந்திரி சாஸ்திரி,""ஆறு முழம், இப்படி உடுத்துவதுதான் எங்கள் வீட்டு வழக்கம் '' என்று கூறினார்.
அதற்கு நான், ""நாங்கள் நான்கு முழம் வேஷ்டியை உடுத்திக் கொள்வோம், அது எங்களின் வழக்கம். இதற்காக ஆறு முழம் உடுத்துபவர்களை நாலு முழம் கட்டச் சொல்லலாமா?'' என்று நகைச்சுவையுடன் கூறினேன்.
லால்பகதூர் சாஸ்திரி, "" ஒவ்வொருவர் பழக்கவழக்கம், கலாச்சாரம், பண்பாடு ஒவ்வொரு விதமாக இருக்கும்'' என்றார்.
நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ""எங்கள் தென்னிந்திய சினிமா படங்களில் சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். படத்தின் நீளம் அதிகரிக்கிறது. அதனால் எங்களுக்கு கொஞ்சம் அதிக ஃபிலிம் ரீல்கள் கிடைத்தால் நல்லது'' என்று கேட்டுக் கொண்டேன். சாஸ்திரி நான் வேஷ்டியின் நீளத்துடன் படச்சுருளின் நீளத்தை ஒப்பிட்டுப் பேசியதை ரசித்து என் வேண்டுகோளை ஏற்று, உடனேயே தென்னிந்திய சினிமாக்களுக்கு அதிக அளவு ஃபிலிம் ரீல்கள் கொடுப்பதற்கான உத்தரவு பிறப்பித்தார். பட நீளக் கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது.
அடுத்து சென்னையில் 3.1.1968ல் நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு ஊர்வலத்தில், அலங்கார வண்டிகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக அணிவகுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அலங்கார வண்டிகளுக்காக குழுவின் தலைவராக எஸ்.எஸ். வாசன் பணியாற்றினார். அவருடன் ஏவி.எம்., ஆர்.எம். வீரப்பன், ஏ.எல். ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் நானும் சேர்ந்து அலங்கார ஊர்திகளை உருவாக்கும் பணியினை மேற்கொண்டோம்...
அணிவகுப்புக்கு முந்தினநாள் இரவு 12 மணிக்கு ஏவி.எம்., எஸ்.எஸ். வாசன், ஏ.எல். ஸ்ரீனிவாசன், நான் ஆகிய நால்வரும் அண்ணாசாலை ராஜிபில்டிங் அருகில் நின்று, அலங்கார வண்டிகள், ஐலண்ட் கிரவுண்டுக்கு ஒழுங்காகப் போய்ச் சேருகிறதா என்று பார்வையிட்டோம்.
அப்போது நான் அங்கிருந்த பிளாட்பாரத்தில் துண்டை உதறிப்போட்டு உட்கார்ந்தேன். உடனே ஏவி.எம்., ஏ.எல்.எஸ். இருவரும் என் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். சற்று நேரத்தில் நான் சிரித்தேன்.
வாசன், ""என்ன நடந்தது ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
""ஒண்ணுமில்லை. பழைய ஞாபகம் வந்தது. நாம நாலு பேரும் இங்கிருந்துதானே (பிளாட்பாரம்) வந்தோம் என்பது ஞாபகம் வந்தது. அதனால்தான் சிரித்தேன்'' என்றேன்.
மூவரும் நான் சொன்ன ஜோக்கை ரசித்து சிரித்தனர். வாசனும், ""இந்த பிளாட்பாரத்தில்தான் நானும் புத்தகம் விற்றேன்'' என்றார்.
மாநாட்டு ஊர்வலத்தில் பண்டைக்காலத் தமிழகத்தின் சிறப்பை விளக்கும் வகையில் இருபத்தேழு அலங்கரிக்கப்பட்ட வண்டிகள் சென்றன.
இந்த ஊர்வலத்தில் வந்த ஊர்திகளை ஜெமினி, ஏவி.எம்., வாஹினி, சாரதா, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் உருவாக்கி அளித்திருந்தோம்.
சென்னை கடற்கரையில் நிறுவப்பட்ட திருவள்ளுவரின் திருஉருவச் சிலையை, நடிகர் திலகம் சிவாஜி வழங்கி இருந்தார்.
இதேபோல, சென்னை அண்ணா சாலையில் திறக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் திருஉருவச் சிலையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கி இருந்தார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரின் பொறுப்பாசிரியராக இருந்து பெரும்பணி ஆற்றியிருந்தார்...
தமிழகத்தின் தலைநகரில் நடைபெற்ற இந்த தமிழ்விழாவில் பங்கேற்று திரை உலகம் ஒரே குடும்பம் என சிறப்பித்தது திரை உலகினர் வாழ்நாளில் மறக்க இயலாதது...
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...