கோவில்பட்டி மாநாட்டில் கருணாநிதி ஒரு கருத்தைச் சொல்ல, அதற்கு சம்பத் கடுமையாக மறுமொழி கூற தொடர்ந்து பேசிய அண்ணா, ""தவழுகின்ற பருவத்திலுள்ள இந்தக் கட்சியை எத்தனை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி வருகிறோம்'' என்றும் ""இதை ஆரோக்கியமாக வளர்த்திட புதியவர்கள் கழகத் தலைமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொதுக் குழுவில் சொல்லவேண்டியதை பொதுக்கூட்டத்தில் சொல்லக் கூடாது'' என்றும் கருணாநிதிக்கு அறிவுரை கூறும் வகையில் பேசினார். மாநாடு முடிந்த பின்னர் அரங்கண்ணலை அழைத்து கருணாநிதி பேசியதையும், சம்பத் பதில் சொல்லியதையும் இரண்டையுமே திராவிட நாடு இதழில் வெளியிட வேண்டும் என்றும் சொன்னார்.
"நம் நாடு' கழக ஏடு:
தி.மு. கழகத்திற்காக அதிகாரபூர்வமாக ஒரு நாளிதழ் வேண்டுமென்பதை ஒவ்வொரு பொதுக் குழுவிலும் தோழர்கள் வற்புறுத்தினர். 1952 கோவைப் பொதுக்குழு இதற்கு அனுமதியளித்தது. எனினும் ஓராண்டு காலம்வரை அதன் ஏற்பாடுகள் நத்தை வேகத்தில் இருந்தன. 1953இல் அரக்கோணம் பொதுக்குழுவில் சம்பத் வற்புறுத்தியதின் பேரில், ஈரோட்டில் "குடியரசு' மேலாளராக இருந்த அ. பொன்னம்பலனார் பொறுப்பில் "நம் நாடு' வெளிவர ஆவன செய்யப்பட்டது. அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு "நம் நாடு' நாளிதழ் 1953ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் நாள்முதல் அறிவகத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது.
புதிய பொதுச் செயலாளர்
தி.மு. கழகத்துக்கு புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க பொதுக்குழு 24.4.55இல் தியாகராயர் கல்லூரியில் கூடியது.
நெடுஞ்செழியனைப் பொதுச் செயலாளராக்க வேண்டுமென்று அண்ணா விரும்பினார். ஒரு பக்கம் மதியழகனுக்கும் இன்னொரு பக்கம் கருணாநிதிக்கும் அந்த ஆசைகள் இருந்தன. ஆனால் சம்பத் போட்டியிடுவாரா அல்லது யாரையும் ஆதரிப்பாரா என்று எதிர்பார்ப்புக்கள் பலமாக இருந்தன. தற்போதைக்கு இதில் ஒரு சர்ச்சை வேண்டியதில்லையென்று சம்பத் நினைத்தார். அண்ணா விருப்பப்படி, அவர் சொல்வதற்காக நெடுஞ்செழியனுக்கு ஒரு வாய்ப்பு போகட்டும். பிறகு நிலைமைகளைப் பார்த்துப் பரிசீலித்துக் கொள்ளலாமென்ற எண்ணத்தில் இருந்தார். அண்ணாவும் நெடுஞ்செழியனை பொதுச் செயலாளராக்கும் வரை சம்பத்தை எந்த பக்கமும் அசையாது தம் பிடியிலேயே வைத்துக் கொண்டார்.
""சம்பத், நீதான் நெடுஞ்செழியனை முன்மொழிய வேண்டும். இதில் சரியென்ற பதிலைத்தவிர வேறு கூடாது'' இவ்வாறு அண்ணா கேட்டார்.
""போராட்டச் சூழ்நிலையில் பெரும் சோதனைக் கட்டத்தில் கழகம் உள்ளது. அதற்கேற்ற சுறுசுறுப்பு இருக்குமா? என்பதுதான் அண்ணா என் கேள்வி'' என்று சம்பத் பதில் சொன்னார்.
""எல்லாம் நாம் தானே இருந்து கவனிக்கப்போகிறோம். நாம் சொல்வதை நெடுஞ்செழியன் நிறைவேற்றப் போகிறார். அவ்வளவுதானே. அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் சம்பத்'' என்றார் அண்ணா. ""மதியழகனுக்கு ஒரு நல்ல பொறுப்பு தரப்படுவது அவசியம், பொதுக்குழுவிலும் கூட சில திறமையாளர்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்....'' இவ்வாறு சம்பத் சொன்னார். ""மதிக்கு வேண்டியதைச் செய்வோம். இந்தப் பொதுக்குழு முடிந்த பிறகு சில பேர்களை சேர்ப்பதைப் பற்றி ஆலோசிப்போம்...'' இது அண்ணா.
பொதுக்குழு கூட்டம் அண்ணா தலைமையில் ஆரம்பமாகியது. ஈ.வெ.கி. சம்பத், இரா. நெடுஞ்செழியனை கழகத்தின் பொதுச் செயலாளராக முன்மொழிந்தார்.
நான் அல்ல, நாம் :அண்ணாவுக்கு சம்பத் தந்த இலக்கணம்
ஜனநாயகக் கடமையில் ஈடுபடுவது, பொதுத் தேர்தலில் நின்று சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளுக்குச் செல்வது, கழகத்தின் லட்சியங்களுக்குச் சட்டச் சம்மதம் பெறுவது இத்தகைய மிக முக்கிய திருப்பத்தை திருச்சி மாநாட்டில் காணவேண்டும். விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்பது தான் சம்பத்தின் நோக்கம்.
கழகத்தின் மூத்த தலைவர்கள் கே.கே. நீலமேகம் போன்றவர்கள், இதற்குள் தேர்தலில் நின்றால் கட்சி அழிந்துவிடும். தவறு செய்யாத சீமான்களையுடைய நீதிக்கட்சியே தேர்தலில் ஈடுபட்டு ஒழிந்துவிட்டது. தி.மு.க.வுக்கும் அற்பாயுசு முடிவு ஏற்பட்டுவிடக்
கூடாது என்றனர். கழகத்தில் அண்ணா உட்படப் பலர் இப்படித்தான் சிந்தித்தனர். ஆனால், சம்பத் ஒருவர் மட்டுமே இதில் திட்டவட்டமாக மாறுபட்டார்.
""தி.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு? அவர்கள் சமுதாயப் பிரச்சினைகளைப் பார்க்கிறார்கள். நாம் அரசியல் களத்தில் இருக்கிறோம். தேர்தலில் பங்கேற்றால்தான் இது முழு அரசியல் இயக்கமாகக் கருதப்படும். இல்லையேல் அங்கே பெரியார் ஒரு மடாதிபதி; மடம் நடத்துகிறார். இங்கே காஞ்சியில் ஒரு மடம் நடக்கிறது என்றாகிவிடும்'' இப்படியெல்லாம் தேர்தலில் ஈடுபடுவது குறித்துக் கடுமையாகவே விவாதித்தார் சம்பத்.
""பொறுப்பேற்றுக் கொள்வது கடினமல்ல. ஆனால் பக்குவப்படாத நிலையில் ஆட்சிப் பொறுப்பு நம்மிடம் வந்துவிடுமானால் நம்மில் பலர் தவறு செய்யக்கூடும். அதனால் குறுகிய காலத்திலேயே கட்சியின் பெயர் கெட்டுவிடும். எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டால் தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலை எனக்கில்லை என்பது உனக்குத் தெரியாதா?'' என்றார் அண்ணா.
""சுயநலமிகளையும் பலவீனர்களையும் ஒதுக்கிவிட்டு, செயல்திறன், லட்சியப் பிடிப்பு, தியாக உள்ளம் படைத்தவர்களைப் பொறுப்பில் அமர்த்தினால் ஒன்றும் தவறு ஏற்படாது''. இது சம்பத்தின் பதில்.
எப்போதும் ஒரு தீவிரமான வாக்குவாதம் ஏற்படுகிறபோது முடிந்தவரை காரியத்தைத் தவிர்த்து விடப் பார்ப்பார் அண்ணா அல்லது திசைதிருப்பி விடுவார்: ""சம்பத் முக்கியமானதை மறந்துவிட்டேன். எல்பின்ஸ்டன் தியேட்டரில் "டிஸ்ரேலி' என்ற நல்லதொரு ஆங்கிலப் படம் நடக்கிறது. பார்த்துவிட்டு வருவோம் வா'' என்று தன் தம்பி சம்பத்தை நயந்து அழைத்துக் கொண்டு போனார் அண்ணா. இருவரும் அந்தப் படத்தை ரசித்துப் பார்த்தனர்.
திருச்சி மாநில மாநாடு
மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் நாள் மாநாட்டிலும் பலர் பேசினர். மூன்றாம் நாள் மே.19 சிறப்புச் சொற்பொழிவுகள் ஆரம்பமாயின. மதியழகன், அன்பழகன், கருணாநிதி, கண்ணதாசன், சத்தியவாணிமுத்து, அரங்கண்ணல், ஆசைத்தம்பி ஆகியோர் பேசியபின் பெரும் கரவொலிக்கிடையே சம்பத் பேச அழைக்கப்பட்டார்.
"இந்திய அரசியலில் கொள்கைக் குழப்பங்கள்' என்ற தலைப்பில் அவர் ஒரு வரலாற்றுச் சொற்பொழிவினை நிகழ்த்தினார். அதுவே மாநாட்டிற்கு மணிமகுடமாய்த் திகழ்ந்தது. இடைவேளை வந்தும் கூட, உணவையும் மறந்து லட்சோபலட்சம் மக்கள் அவருடைய வீர உரையில் மெய்மறந்தனர்.
திருச்சி மாநில மாநாட்டில் சேலம் க. ராசாராம்,
சம்பத் முயற்சியால் தி.மு.க.வில் இணைந்தார்.
சம்பத் உரை அண்ணா பாராட்டு
திருச்சி மாநில மாநாட்டில் சம்பத் முழக்கம் கேட்டு அனைவரும் பாராட்டினர். இறுதியாக அண்ணா பேசியபோது அவரது உரை நெடுகிலும் ஆங்காங்கே சம்பத்தையும் அவரது கருத்துரை பற்றியும் பாராட்டினார். மேற்கோள் காட்டினார்.
""கழகம் தேர்தலில் ஈடுபடுவதற்கு மக்கள் இங்கே ஆணை பிறப்பித்துள்ளனர். இது பற்றி சம்பத் ஒரு நல்ல கருத்தைத் தெரிவித்தார். பெருவாரியானவர்கள் நாம் தேர்தலில் ஈடுபடவேண்டி விரும்பி வாக்களித்திருக்கிறார்கள். நமக்கு அதற்குரிய வளர்ச்சி இருக்கிறதா அந்தப் பக்குவத்தை நாம் பெற்றுவிட்டோமா என்றால் போதுமானதல்ல என்பதுதான் உண்மை. சம்பத் சொன்னதுபோல் அந்தக் கருத்தை எடுத்துக் காட்டும் வகையிலேதான் 4000 பேர் நாம் தேர்தலில் நிற்கவேண்டாமென்று வாக்களித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் நம்மவர்கள் அல்ல என்று தள்ளிவிடமுடியாது. நமக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலே அவர்கள் அக்கறை உள்ளவர்கள் என்று தம்பி சொன்ன கருத்தை நானும் குறிப்பிடுவது அவசியம்.
பருவம் அடைந்து விட்ட பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பது போல் தி.மு.கழகத்தை மக்கள் தேர்தலிலே நிறுத்திப் பார்க்க விரும்புகிறார்கள். (இதை வைத்துத்தான் தினத்தந்தி ஏடு தி.மு.க.வை பருவப் பெண் என்று கேலிச்சித்திரம் தீட்டிக் காட்டியது.)
தேர்தலில் பங்கேற்க நான் தயங்கியதுண்டு. அதைத் தம்பி சம்பத்திடம் சொன்னபோது, ""நான் என்று ஏன் அண்ணா சொல்கிறீர்கள், நாம் என்று சொல்லுங்கள்'' என்று சொன்னான். இந்த நம்மில் பல்லாயிரவர் அடக்கம். அனைவரது ஆற்றலும் சேர்ந்தால் வெற்றி தவிர வேறென்ன என்று "நாம்' தத்துவத்தைத் தம்பி சம்பத் நமக்களித்திருக்கிறான். தத்துவத்தைக் கூறுவதிலே மட்டும்தானா சம்பத் வாதம் புரிகிறான் என்றால், சம்மட்டி அடி என்கின்றனர் எதிரிகள். கண்ணதாசன் பேச்சில் காரம் கவிதை வடிவில் கிடைக்கிறது. மதியழகன் பேச்சில் மாணவர் உள்ளமெலாம் நிறைகிறது. ஆசைத்தம்பி பேச்சில் அழுத்தத்திருத்தம் அழகு பெறுகிறது''.
சம்பத்தும் அண்ணாவும் பேசிய உரைகள் நூல் வடிவில் "கொள்கைக் குழப்பமும் லட்சிய விளக்கமும்' என்னும் பெயரில் வெளிவந்துள்ளன.
சம்பத் வெற்றி
1957 ஆம் ஆண்டு மார்ச் பொதுத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளி வரத் தொடங்கின. காஞ்சியில் அண்ணா வென்றார். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் சம்பத் மகத்தான வெற்றி பெற்றார். அந்த நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறவில்லை, ஆனால் விந்தை' நாடாளுமன்றத் தொகுதியில் சம்பத் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வெற்றியை நாடு கொண்டாடியது.
நாடாளுமன்றத்தில் முதல் முழக்கம்
சம்பத் இயல்பாகவே சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர். அதற்கு முன் பேச வாய்ப்புக் கேட்டு அவைத்தலைவர் அனந்தசயனத்தோடு மோதியிருக்கிறார்.
எடுத்த எடுப்பிலேயே ஒரு பெரிய சாதனைக்கு அவர் வழிகாண முற்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளி போன்ற மொழிகளுக்கு ஒரே நேரத்தில் மொழியாக்கம் செய்யும் வசதி இருந்தது. ஆனால் தமிழுக்கு அத்தகுதி தரப்படவில்லை.
இந்தி மட்டுமே தெரிந்த உறுப்பினர் ஆங்கில உரையைக் கேட்கிறபோது தமது இருக்கை முன் அமைக்கப்பட்டுள்ள "இந்தி பொத்தானை' அழுத்தினால் போதும். அவர் காதுக்கு அந்த ஆங்கில உரையின் இந்தி மொழியாக்கம் ஒலிக்கும். இத்தகைய வசதி தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பதை நிலைநாட்ட எடுத்த எடுப்பில் சம்பத் அவருக்கேயுரிய ஆவேசத்தோடு திடீரென்று முன்னறிவிப்பில்லாமல் தொடங்கினார்.
இந்தி வெறியர்கள் அதிர்ந்தெழுந்து எதிர்ப்புக் கூச்சலிட்டனர். பெரும் கூச்சலுக்கிடையே சம்பத் தொடர்ந்தார். லோகியா, கோவிந்ததாஸ் சேட், மணிராம் பக்கிரி போன்ற அழுத்தமான இந்தி ஆதரவாளர்கள் சம்பத் ஆற்றிய தமிழுரைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
சம்பத் சமர்புரிபவராயிற்றே. விவாத மண்டபங்களில் பகை மிரள முழக்கிடும் பீரங்கிப் பேச்சாளராயிற்றே கூச்சல் குழப்பத்திற்கிடையே அந்த ஆவேசக்குரல் அழுத்தம் திருத்தமாகக் கணீரென' ஒலித்தது.
""அச்சுறுத்தியோ, இச்சகம் பேசியோ எங்கள் மீது இந்தியைத் திணிக்க முடியாது. இன்பத் தமிழுக்கு ஆபத்து என்றால் பெரும் பூகம்பத்தையே நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மொழி காக்க உயிர் காத்த எங்கள் வீரத்தியாகிகள் தாளமுத்து நடராசன் கல்லறைகளை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்....''
என்றெல்லாம் வெடித்தார் சம்பத், அவையே இரு கூறாகியது. கட்சிக் கோடுகளைக் கடந்து இந்தி பேசும் உறுப்பினர்கள் இந்தி பேசாத உறுப்பினர்கள் என்று அவை இரு பிரிவாகக் காட்சியளித்தது. இந்தி வெறியர்கள் "பேசாதே' என்று கூச்சலிட்டனர். அமளி விளைவித்தனர்.
பிரதமர் நேரு தமிழறியாதவர். சம்பத் என்ன சொல்லுகிறார் என்பதை உன்னிப்பாகக் கேட்கிறார். சம்பத்தை நோக்கி, ""உங்களுக்குத்தான் ஆங்கிலம் தெரியுமே, ஆங்கிலத்தில் பேசுங்கள்'' என்கிறார். அப்போது சம்பத் ஆங்கிலத்தில் மறுமொழி உரைக்கிறார். அவையில் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆங்கிலத்தில் முழக்கத்தைத் தொடர்கிறார்.
சம்பத் முயற்சியால்தான் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பேச்சை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கவும், அதே நேரத்தில் மற்ற மொழிப் பேச்சுகளை தமிழில் தரவும் வசதி செய்து தரப்பட்டது. இதனால்தான் பிற வடமொழிகளே அறியாத லட்சுமணன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் துணை அவைத்தலைவராகப் பணியாற்ற முடிந்தது.
இன்று நாடாளுமன்றத்தில் தமிழ் மட்டுமே தெரிந்த உறுப்பினர்கள் துணிச்சலாக எழுந்து தமிழில் பேச முடிகிறதென்றால் அந்த வாய்ப்பை, வசதியை ஏற்படுத்தித் தந்த பெருமை சம்பத்துக்கே உண்டு. இமயமலையில் சேரன் செங்குட்டுவன் தமிழ்க் கொடி நாட்டினான் என்பார்கள். அது உண்மையோ பொய்யோ டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தியவர் சம்பத் என்பது உண்மை.
முதல் முழக்கத்தை முடித்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தி சென்னை திரும்பிய சம்பத், அண்ணாவின் பெரும் பாராட்டினைப் பெற்றார். தமிழகத்து மேடைகளில் இந்தி எதிர்ப்புக் குரல் இன்னும் உரத்து ஒலிப்பதாயிற்று.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!

10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்! 4 மணி நேரத்தில் விநியோகம்!

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



