எம்.ஜி.ஆரின் முதலாளி
கிராமியப்படம் பாதாள பைரவியை இயக்கிய கே.வி. ரெட்டிக்கு ஒரு சமூகப்படத்தை இயக்க ஆசை.


நாகிரெட்டி நினைவுகள்:மகன் விஸ்வம் எழுதுகிறார்
பேய் காத்த தோப்பு என் தந்தையாருக்கு அதிர்ஷ்டம் தந்த தோப்பு ஆக மாறியது எப்படி? என் தந்தையார் சொல்கிறார்...
""அந்தக் காலத்தில் பி.என்.கே. பிரஸ்ஸில் திருமணப் பத்திரிகை அச்சடிப்பது மிகப்பெரிய கெüரவமாகக் கருதப்பட்டது. பிரபல தெலுங்கு நடிகர் ஏ. நாகேஸ்வரராவ் அவர்கள் அப்போது தமது கல்யாணப் பத்திரிகையை பி.என்.கே. பிரஸ்ஸிலேயே அச்சடிக்க விரும்பினார். அவர் விரும்பியபடி மிகுந்த சிரத்தையுடன் வடிவம், வண்ணம் அமைத்து திருமணத்திற்கு ஏற்ற மங்களகரமான நிறத்தில் மனத்திற்கு பிடித்த வகையில் அச்சடித்துக் கொடுத்தோம். அதை இப்போதும் என் போட்டோ ஆல்பத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பார் ஏ. நாகேஸ்வரராவ்.
இதை எதற்காக இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு மனிதனுக்கு சிறந்த எண்ணங்கள், அவற்றை நிறைவேற்றத் துடிப்பு, நல்ல ரசனை, தன்னம்பிக்கை, நிதி ஆதாரம் ஆகியவை அமைந்துவிட்டால் முன்னேற தடை ஏது? மக்கள் மனதில் இடம் பிடிக்க இது போதுமே...
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. பாகப்பிரிவினையின்போது என்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அவரது வாக்கு விரைவாகவே பலித்தது. ஆந்திராவில் எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்து... படிப்பைத் தொடர முடியாமல்... அப்பாவின் தொழிலைப் பார்த்து வந்தபோது... அண்ணனின் தொழில் ஈடுபாடு... சக்கரபாணியின் நட்பில் ஏற்பட்ட திருப்புமுனை.. இவை என் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தர... எதிர்பாராமல் அச்சக உரிமையாளர் ஆனேன், ஸ்டூடியோ முதலாளி ஆகினேன், படத்தயாரிப்பாளர் ஆனேன்.
சென்னை, வடபழனி சந்தமாமா பில்டிங்ஸில் அபிவிருத்தி செய்யச் செய்ய, லெட்டர் பிரஸ்ஸில் பி.என்.கே. பிரஸýம் ஆப்செட்டில் பிரசாத் பிராஸஸýம் முன்னிலை வகித்தன. சென்னைக்கு வருபவர்கள் சந்தமாமா பில்டிங்கைப் பார்ப்பது கெüரவமாகக் கருதப்பட்டது.
சந்தமாமா ஆறு மொழிகளில் இருந்து ஆங்கிலம் உட்பட 12 மொழிகளில் அச்சிடப்பட்டு, உலகம் முழுவதும் வாசகர்களை ஈர்த்தது. இந்த வளர்ச்சியில் என் புதல்வர்களின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது. ஆலமரமாக வளர்ந்த என் தொழில்களில் விழுதாக இருந்து செயலாற்றியவர்கள் என் புதல்வர்கள். மூத்தவர் பி.எல்.என்.பிரசாத் வியாபார அபிவிருத்தியின் பொறுப்பை ஏற்று திறம்பட நிர்வகித்தவர். அடுத்தவர் பி. வேணுகோபால் ரெட்டி, அச்சக நிர்வாகத்தைக் கவனித்தார். இவரை தொழிலாளர்களின் தொழிலாளி என்றே அழைப்பார்கள். காரணம், இவர் எப்போதும் காக்கி யூனிபார்ம் அணிந்தே செயல்புரிவார். அடுத்தவர் விஸ்வம் என்கிற பி. விஸ்வநாத ரெட்டி. இவர் பப்ளிகேஷன்ûஸயும் என்னைத் தொடர்ந்து விஜயாவின் படங்களுக்கு விளம்பரப் பொறுப்பையும் ஏற்க, கடைக்குட்டி பாப்ஜி (எ) வெங்கட்ராம ரெட்டி நிதி நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டனர். என் அப்பா எனக்குக் கற்றுத் தந்ததை என் புதல்வர்களுக்குக் கற்றுத் தந்தேன். காலண்டர் சீசன் வரும்போது, அப்பணியில் மட்டும் சுமார் 1500 பேர் ஈடுபடுவார்கள். காலண்டர் ரிம்மிங் செய்ய 100 பேர் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து போவார்கள்.
சந்தமாமா கட்டடத்தில் நடைபெறும் ஆயுதபூஜை விழா பிரசித்தம். பணியாளர்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று மகிழ்வர். இன்னும் சொல்லப் போனால் இந்த பூஜையில் பங்கேற்ற பின்னரே, தங்கள் வீடுகளுக்குச் சென்று ஆயுதபூஜையைக் கொண்டாடுவார்கள்.
தொழில் ரீதியான வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. அதேசமயம் வீட்டிலும் சந்தமாமா பில்டிங்கில் முதன் முறையாக சுபகாரியங்கள் நடைபெறவேண்டும் என்று விரும்பினோம்.
சந்தமாமா கட்டட கிரகப் பிரவேசம் ஆன ஒரு வருடத்தில் எங்கள் குடும்பத்திற்கு மாப்பிள்ளை, மருமகள் வந்தனர்.
1955ஆம் வருடம் எனது மூத்த மகன் பி.எல்.என். பிரசாத்துக்கும் என் மைத்துனர் நெல்லூர் ஏ.வி. ரெட்டி அவர்களின் புதல்வி டாலி என்கிற ரஜினி சரஸ்வதிக்கும், என் மூத்த மகள் ஜெயலட்சுமிக்கும் என் மைத்துனர் ஏ.வி. ரெட்டி அவர்களின் புதல்வர் ஜான் என்கிற ஏ.பிரேம்குமார் ரெட்டிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகளைச் செய்தோம். இவர்களது திருமணத்துடன் சக்கரபாணியின் மூத்த மகன் திருப்பதி ராயுடுவின் திருமணமும் நடத்தப்பட வேண்டும் என்ற என் மனைவி சேஷம்மாவின் விருப்பப்படி திருப்பதி ராயுடுவுக்கும் சக்கரபாணியின் மைத்துனர் மகள் ராதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, சந்தமாமா கட்டடத்தில் முதல் சுப நிகழ்ச்சியாக இந்த மூன்று திருமணங்கள் ஒரே நாளில் வெகு விமரிசையாக நடந்தேறின.
திருமண சுப முகூர்த்தம் விடியற்காலை மூன்று மணிக்கு. வந்திருந்த சுமார் 3000 விருந்தினர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும் என்பதற்காக அன்றைய தெலுங்கு பிரபல கலைஞர்களின் நாட்டிய, நாடக நிகழ்ச்சிகள் விடியற்காலை இரண்டு மணி வரை நடைபெற்றன. அந்தக் கலைஞர்களும் வந்திருந்த விருந்தினர்களும் அவர்கள் வீட்டுக் கல்யாணம் மாதிரியே உணர்ந்தார்கள்...
என் அப்பாவின் ஆசி, இறையருள், இவற்றுடன் எனக்கு அமைந்த பணியாளர் குழு ஆகியவை என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது என உறுதியாகச் சொல்வேன். பேய் காத்த தோப்பில் எறும்பு மாதிரி சுறுசுறுப்பாகப் பணியாற்றி பணியாளர்கள் என் வாழ்வை வளப்படுத்தினார்கள். இல்லறத்திலும் சரி... தொழிலிலும் சரி... வாழ்வில் நாம் முன்னேற நமக்கு உறுதுணை தேவை. என் எண்ணத்தை மனம் கோணாமல், முகம் சுளிக்காமல் செயலாற்றிய அவர்களுக்கு, அந்தப் பணியாளர்களுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
அந்நாளில் எனக்கு ஒரு நாளேடு நடத்தவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதற்கு எனக்கு காலமும் நேரமும் சரியான ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால் சந்தமாமா டால்டன் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அந்த ஆசை நிறைவேற்றப்பட்டது. சந்தமாமா 12 மொழிகளில்... பொம்மை (திரை) இதழ் 3 மொழிகளில்... மங்கை (மகளிர்) இதழ் 3 மொழிகளில், ஹெரிடேஜ், சந்தமாமா வால்ட்டி டிஸ்னி காமிக்ஸ், பால்கன் இதழ் உட்பட மாதந்தோறும் 32 இதழ்கள் சந்தமாமா கட்டடத்திலிருந்து வெளிவந்தன.
பிரசாத் பிராசஸின் அச்சகத்துறையில் பல புதிய முறைகள் வடிவமைக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது இந்தியாவிலேயே முதன் முறையாக 24 ஷீட் கொண்ட விளம்பர போஸ்டர் அச்சடிக்கப்பட்டதுதான். மொகலே, ஆஜம், காகேஸ் கே பூல் இந்திப்படங்களின் போஸ்டர்கள் இம்முறையில் அச்சடிக்கப்பட்டன. தொடர்ந்து யுனிலீவர், எவரெடி, டாடா முதலிய நிறுவனங்களின் பெரிய போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு அச்சகத்துறையில் புதிய பாதையைத் தோற்றுவித்தன.
அன்று கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் போகும் நான்கு வாகனங்களில் ஒன்று விஜயா குழுமத்தைச் சேர்ந்த வாகனமாகத்தான் இருக்கும். வாகனங்களின் தேவை, எண்ணிக்கை உயர கம்பெனிக்காகவே ஒரு பெட்ரோல் பங்க், உடன் வாகனம் பழுது பார்க்கும் தொழிற்சாலை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. அன்று இருந்த வடபழனியின் நிலை அதுதான். அதை கோடிட்டுக் காட்டவே இதைச் சொன்னேன். இதனால் எங்கள் நிறுவனங்களில் காலமும் நேரமும் விரயமாவது தடுக்கப்பட்டது.
பின்னாளில் பி.என்.கே. பிரஸ், பிரசாத் பிராசஸ் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அச்சக வேலைக்குப் போக விரும்பியபோது அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தோம்.
காரணம், இதைவிட எதிர்காலம் சிறப்பாக, ஒளிமயமாக கிடைக்கிறது என்றால் அவரது வாழ்க்கை மேலும் வளப்படும் என்ற எண்ணம்தான். இன்டர்வியூவில் பி.என்.கே. பிரஸ், பிரசாத் பிராசஸ் என்ற பெயரை மட்டும் சொல்லியே பலர் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்று மகிழ்வுடன் வாழ்கிறார்கள்.
ஆல் இந்தியா மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
1955ல் இந்த அசோசியேஷனின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்றது. அன்றைய பம்பாய் மாகாண முதலமைச்சர் மொரார்ஜி தேசாய் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது நான் மொரார்ஜி அவர்களிடம் ""சார்... எங்களிடம் உள்ள பிரிண்டிங் மெஷின்களின் வயது இந்த அசோசியேஷனுக்கு ஆகும் வயதுக்கு ஈடானது'' என்று தமாஷாக கூறினேன்.
இதைக் கேட்டவுடன் மொரார்ஜி அவர்கள் தமக்கு உரிய பாணியில், ""இந்த அசோசியேஷனுக்கு புதிய தலைவர் தேவையில்லை. நாகி ரெட்டி அவர்களே மிகவும் சீரும் சிறப்புமாக இதனை நடத்துவார்'' என உரத்த குரலில் அறிவிக்க, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. அப்போதே அந்த அசோசியேஷனின் தலைவராக நான் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டேன்.
வடபழனிக்கு நாங்கள் வந்த பத்து ஆண்டுகளில் வடபழனி மளமளவென்று வளர்ந்தது. எங்களையும் வளர்த்தது... ஆன்மிகத் தலமாக இருந்த வடபழனியில் அன்று சென்னையில் இருந்த 18 சினிமா ஸ்டூடியோக்களில் 13 ஸ்டூடியோக்கள் இருந்தன. சினிமா ஸ்டூடியோக்களும் அதைச் சார்ந்த துறைகளும் உருவாகி உலக சினிமா அரங்கில் வடபழனி (கோடம்பாக்கம்) இடம்பெற நாங்களும் கோடு போட்டோம் என்பதில் எனக்கு நிரம்ப மகிழ்ச்சி...
12. மிஸ்ஸியம்மாவும் மாயாபஜாரும்
விஜயா, ஆரம்பநாள் முதலே இரண்டு பிரிவுகளை வலுப்படுத்தியது. ஒன்று சக்கரபாணியார் தயாரிப்பு பொறுப்பாளராக இருந்தது. அது சமூக கருத்திலான படங்களைத் தயாரித்தது. இதில் நகைச்சுவைதான் பிரதானம். இந்த நகைச்சுவை ஆபாசமின்மையும், மக்களை மன அழுத்தத்திலிருந்து போக்கும் விதத்திலும் இருந்தது. எல்.வி. பிரசாத் படங்களை இயக்கினாலும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சக்கரபாணியார் (சக்கண்ணா) வடிவமைத்து, அதனை இயக்குநரிடம் படமாக்க அளித்தார். இப்படி உருவான முதல் படம் செüகார் (தெலுங்கு).
அடுத்தது கே.வி. ரெட்டியின் யூனிட். இது முக்கியமாக நாட்டுப்புறக் கதைகளையும் புராணத்தை ஆதாரமாகக் கொண்ட படங்களையும் தயாரித்தது. இது விஜயாவிற்கு புது பொலிவைக் கொடுத்தது. சந்தமாமாவின் கலாச்சாரம் திரையில் இடம்பெற வைத்தது. இந்த யூனிட் தயாரித்த முதல் படம் பாதாள பைரவி பெரும் வெற்றி பெற்றது.
ஒரு யூனிட் படம் முடிவடையும் வரையில் அடுத்த யூனிட் அதன் கதைத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும். அதன்படி கல்யாணம் பண்ணிப்பார் படம் எல்.வி. பிரசாத் இயக்கத்தில் சக்கரபாணியார் யூனிட்டினால் தயாரிக்கப்பட்டு அதுவும் பெரும் வெற்றியைக் கண்டது...
இந்த இரு படங்களின் வெற்றி சக்கரபாணியார், கே.வி.ரெட்டி இருவருக்கும் பாதையை மாற்றும் போக்கை ஏற்படுத்தியது.
கிராமியப்படம் பாதாள பைரவியை இயக்கிய கே.வி. ரெட்டிக்கு ஒரு சமூகப்படத்தை இயக்க ஆசை. ஆனால் அப்போது அதற்கு விஜயாவில் உடனே வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அந்தக் கதையை வாகினி பிக்சர்ஸýக்காக இயக்கினார். பெத்த மனுஷிலு (தெலுங்கு) என்ற நையாண்டி கலந்த அரசியல் படத்தை இயக்கினார்.
நாட்டில் நடைபெறும் வரதட்சணைக் கொடுமையை மையமாக வைத்து "கல்யாணம் பண்ணிப்பார்' என்ற சமூக நகைச்சுவை வெற்றிப்படத்தை உருவாக்கிய சக்கரபாணியாருக்கு கிராமிய மணம் கொண்ட படம் தயாரிக்க விருப்பம்.
அப்போது அவரது எண்ணத்திற்கு ஈடுகொடுக்க வந்தது "சந்திரஹாரம்'. 1950 ஜூலையிலிருந்து தயாரிப்பில் இருந்தாலும் 1951 ஜூனில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு கதை மீண்டும் திருத்தப்பட்டது. கல்யாணம் பண்ணிப்பார் படத் தயாரிப்பு துவங்கியிருந்த நிலையில் சந்திரஹாரம் 1952 ஏப்ரல் வரை தள்ளிப்போடப்பட்டது.
கல்யாணம் பண்ணிப்பார் படத்தையடுத்து சந்திரஹாரம் படத்தில் ஈடுபட, தமது கிராமியப் பட விருப்பமும் பூர்த்தியாகிவிடும் என்று கருதினார் சக்கரபாணியார்.
ஆனால் சக்கரபாணியாரின் இந்த ஏற்பாட்டுக்கு ஆரம்பத்தில் இது சரிப்பட்டு வருமா என தயங்கிய என் தந்தையார், சக்கண்ணாவின் ஸ்திரத்தன்மையைக் கண்டு மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார். சந்திரஹாரம் படத்தை கே. காமேஸ்வரராவ் இயக்கத்தில் சக்கரபாணியார் யூனிட் தயாரித்தது. படம் வெளியாகி பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. வாகினி பிக்சர்ஸýக்காக கே.வி. ரெட்டி இயக்கிய பெத்த மனுஷிலு சமூகப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.
பாதை மாறும்போது பயணமும் மாறும்... பலனும் மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெத்தமனுஷிலு, சந்திரஹாரம் படங்கள் அமைந்தன.
எனவே சக்கரபாணியார், கே.வி.ரெட்டி இருவரும் தவறை உணர்ந்து, மக்களுக்காக படம்... நமக்காக அல்ல பாதை மாறினால் இலக்கை அடைய முடியாது என்பதையும் புரிந்துகொண்டனர்.
(தொடரும்)
தொகுப்பு: வைரஜாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...