வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராமாயணுமும் பாகவதமும்

திரு "எம்' என்று மட்டுமே அறியப்பட்ட இந்த அறிஞர், நாரத கான சபா சிற்றரங்கில் ஹிந்து மதத்தின் பெருமைகளை எடுத்துக்கூறும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்திருக்கிறார். 

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 10:02 am

சாருகேசி

சொல்லும் முஸ்லிம் அறிஞர்

திரு "எம்' என்று மட்டுமே அறியப்பட்ட இந்த அறிஞர், நாரத கான சபா சிற்றரங்கில் ஹிந்து மதத்தின் பெருமைகளை எடுத்துக்கூறும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்திருக்கிறார்.  அப்போதே, "இது என்ன ஆச்சரியமாக இருக்கிறது?  எப்படி இந்த மனிதர் இத்தனை தெளிவாக இந்து மதச் சொற்பொழிவாற்றுகிறார்?' என்று வியந்தவர்கள் ஏராளம்.  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த "எம்' என்கிற மும்தாஜ் அலி கான், மதனபள்ளியில் வசித்து வருகிறார்.  சத்சங் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனத் தலைவர்.    உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தம் சத்சங்

பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் சென்று விளம்பர வெளிச்சம் இல்லாமல் இயன்ற உதவிகளைச் செய்துவிட்டு வந்தார்.  ""பெருக்கெடுத்து ஓடும் கங்கையை அணைகட்டித் தடுத்து நிறுத்தலாமா? எத்தகைய கொடுமை?  நான் 1971 இல் பார்த்த போது கங்கை கம்பீரமாக ஓடிக்கொண்டிருந்தது'' என்று அங்கலாய்க்கிறார்.  ""கேதார்நாத் கோயிலைச் சுற்றி லாட்ஜுகளையும் கட்டடங்களையும் கட்டுவதை நிறுத்த வேண்டும்'' என்கிறார். பெங்களூருவிலும், மைசூரிலும் வால்மீகி ராமாயணம் பற்றித் தொடர் சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு, சென்னையில் அக்டோபர் முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை ராமாயண சப்தாஹம் (ஏழு நாள் சொற்பொழிவு) எழும்பூர் மியூசியம் தியேட்டரில் செய்யவிருக்கிறார் "எம்'. சென்னைக்கு ஒரு நாள் வருகை தந்திருந்த "எம்' அவர்களை அவர் தங்கியிருந்த வீட்டில் சந்தித்தோம்:

ஏன் வால்மீகி ராமாயணத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் ராமாயணமும், பாகவதமும்தான் சொல்லி வருகிறேன்.  ராமாயணம் சொல்வதற்கு லகுவானது. மிகவும் ஏற்றது.  பாகவதம் சின்னச் சின்னக் கதைகளாக இருக்கும்.  நான் இரண்டிலுமே ஏழு நாள் (சப்தாஹம்) சொல்லி வந்திருக்கிறேன்.  நல்ல வரவேற்பு இருக்கிறது.  எல்லோரும் அவரவர் மாநில மொழிகளில் சொல்லும்போது, நான் ஆங்கிலத்தில் சொல்வதால் அதற்கென்று தனிக் கூட்டம் வருகிறது.  என் குருவும் எளிமையான ஆங்கிலத்தில் இதைச் சொல்லி வா என்றுதான் கூறியிருக்கிறார்.  கதை சொல்லுவது நம் கலாசாரத்தில் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.  ஏழு நாட்களுக்குள், ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் வீதம் சொற்பொழிவை முடித்தாக வேண்டும்.  இது கதா காலட்சேபமோ, சங்கீத உபன்யாசமோ அல்ல.  அதனால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் விளக்கங்கள் சொல்லி முடித்துவிடலாம்.  நேயர்கள் கேள்வி கேட்டுப் பதில் அளிக்க வேண்டிய நிகழ்ச்சி அல்லவே;  அதனால் கதை சொல்வதைக் கேட்டு ஆனந்தமடையலாம். கொண்டாடலாம்.  உபநிஷத்துகளைப் பற்றிப் பேசும்போதுதான் கலந்துரையாடல் மாதிரி அமைத்துக் கொள்ள வேண்டும்.  நான் கடோபநிஷத் பற்றிப் பேசும் போது அப்படித்தான் செய்திருக்கிறேன்.

ஏன் ராமாயணத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ராமாயணம்தான் நம்முடைய ஆரம்ப கால புராண நூல்.  சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.  நான் கம்பராமாயணம் படித்ததில்லை.  ஆனால் அத்யாத்ம ராமாயணமும், துளசிதாஸின் ராமசரித மானஸமும் படித்திருக்கிறேன்.   நான் பெரும்பாலும் வால்மீகியைச் சார்ந்து நிற்பவன். அதில்தான் நாம் நம் ஆதிகால நாகரிகம் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.  எல்லாப் பாத்திரங்களையும் மனத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள முடிகிறது.  இதில்தான் கதாநாயகன் கடவுளாகவும், அதே சமயம் கடவுளல்லாதவனாகவும் நமக்குத் தெரிகிறார்.  ஸ்ரீராமர் தாமாகவே நான்தான் ஸ்ரீமன் நாராயணன் என்று எங்கும் அறிவிக்கவே இல்லை.  ரிஷிகளும் முனிவர்களும்தாம் அப்படி அவரைக் குறிப்பிடுகிறார்கள். ஸ்ரீராமர் என்னவோ, நான் தசரதனின்  பிள்ளை ராமன் என்றே சொல்லிக் கொள்கிறார்.

ராமாயணத்தில் இன்னோர் அம்சமாக எனக்குப் பட்டது பிரிவு.  அதன் துயரம். அதன் தாக்கம்.  ஒரு வேடன் இணையாக இருக்கும் இரு பறவைகளில் ஒன்றை அம்புவிட்டுக் கொன்றுவிடுவதைப் பார்க்கும் வால்மீகி, அதன் பாதிப்பை உணர்ந்திருக்கிறார்.  அந்தப் பட்சியின் பிரிவு ஏக்கத்தையும், சோகத்தையும் நேரில் கண்டு உருகியிருக்கிறார்.  எனக்கென்னவோ, அந்தத் தேடல் ஜீவாத்மா பரமாத்மாவைத் தேடுவது போல்தான் தோன்றுகிறது

ராமாயணம், பாகவதம் இவை இரண்டில் எது உங்களுக்குச் சொல்வதில் சவாலாக இருக்கிறது?

பாகவதம் சின்னச் சின்னக் கதைகளாக இருக்கும். பாத்திரங்கள் அதிகம்.  ராமாயணம் அப்படி அல்ல.  சொல்வதற்கும் கேட்பதற்கும்  சுவாரசியமாக அமைந்த கதை. அதனால் பாகவதம் சவாலாக இருக்கும் என்று சொல்ல மாட்டேன்.  ராமாயணத்தில் சோகம் இருந்தாலும், அந்தச் சோகம் அல்லது வலி ஒருவித ஆனந்தத்தைத் தருகிறது அல்லவா? 

நாட்டில் ஆங்காங்கே நடக்கும் மதக் கலவரங்கள் உங்களுக்குக் கவலை அளிக்கவில்லையா ?

நிச்சயமாக.  ஒரு பகுதியினரைமட்டும் நான் குற்றம் சொல்ல வரவில்லை. குற்றம் யார் மீது இருந்தாலும் எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியும்.  ஆனால் ஆதாயம் தேடுபவர்கள் அதற்கு உதவ முன்வரமாட்டார்கள்.  என்னுடைய வாழ்க்கை, இரு பிரிவினருக்கு இடையேயும் ஒரு பாலம் அமைப்பதுதான்.  ஜனவரி 12,  2015 விவேகானந்தர் பிறந்த நாளன்று நம்பிக்கை நடைபயணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்.  கன்யாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை என் பயணம் அமையும்.  சுமார் 6000 கிலோமீட்டர் தூரம்.   இரவு தங்கிவிட்டு, காலை நடப்பது.  புணேவுக்கு அருகிலுள்ள ஆலந்தியில் மகான் ஞானேசுவர் சமாதி இருக்கிறது இல்லையா?  அது போன்ற புண்ணியத் தலங்களில் ஒரு நாள் தங்குவது.  கிராமங்களில் இரவு தங்கும்போது, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் அவர்களுடன் உரையாடுவது.  மதங்களைக் கடந்து நிற்பவர்கள் கூடவே வரலாம்.  வெவ்வேறு சிந்தனைகள் உள்ளவர்களும் அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு வந்து சேர்ந்துகொள்ளலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.