சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

விக்கிரமனைப் பற்றி விக்கிரமன்!

1940-ஆம் ஆண்டில்- என் பன்னிரண்டாவது அகவையில் இலக்கிய தாகம் ஏற்பட்டது. இலக்கிய வழிப் பயணத்தில் நான் இளைப்பாறி முன்னேற வழிகாட்டியாக- பசுஞ்சோலையாக

Updated On :6 டிசம்பர் 2015, 8:17 pm IST

1940-ஆம் ஆண்டில்- என் பன்னிரண்டாவது அகவையில் இலக்கிய தாகம் ஏற்பட்டது. இலக்கிய வழிப் பயணத்தில் நான் இளைப்பாறி முன்னேற வழிகாட்டியாக- பசுஞ்சோலையாக இருந்தவர்கள் பலர்.

 நாள்தோறும் இலக்கிய விழிப்பு மகாகவி பாரதியாரின் திருமுகத்தில்தான். "வந்தே மாதரம் என்போம்...  எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்' என்ற தேசிய- தமிழுணர்வை என் பிஞ்சு நெஞ்சில் விதைத்த மகாகவி பாரதியார் போன்ற மேதைகள் அனைவரும் என் நெஞ்சில் நிறைந்தவர்களாகி விட்டனர்.

 எழுத்து, பேச்சு எனும் இரு தண்டவாளங்கள்மீது என் இலக்கியத் தேர் ஊர்ந்து செல்லத் தொடங்கியது. இதய ஒலிக்குச் சுருதி சேர்க்க அமைந்ததுபோல் கையெழுத்துப் பத்திரிகையில் என் இலக்கிய விதையை விதைக்க முற்பட்டேன்.

 "கலாவல்லி' என்றும்  "பரமஹம்சர்'  என்றும் கையெழுத்து ஏடுகளை இலக்கியக் கனவின் முதல் படியாக அமைத்துத் தவழ்ந்து ஏறத் தொடங்கினேன்.

மகாத்மா காந்தியின் "ஹரிஜன்' ஆங்கிலப் பத்திரிகையை என் பள்ளித்தோழர் நா.சுப்பிரமணியம் எனக்கு அறிமுகப்படுத்தினர்.

 நண்பர் சுப்பிரமணியமும் நானும் நாள்தோறும் சந்தித்தோம். அதன் பலன் இருவரும் சேர்ந்து ஒரு கையெழுத்து ஏட்டை நடத்துவதென்று தீர்மானித்தோம். அதற்கு "தமிழ்ச் சுடர்' என்று பெயர் சூட்டினோம். இதுவே எனது எழுத்துலகப் பிரவேசம் எனலாம்.

 ஏ.கே. செட்டியார் ஒருமுறை எங்களைப் பார்த்தார். முழுப் பத்திரிகையை ஏ.கே. செட்டியாரிடம் காட்டினோம். ஒவ்வொரு பக்கமாகப் பார்த்து, குறைகள் இருந்தால் எடுத்துக் கூறி, நிறைவு இருப்பின் பாராட்டி ஊக்குவிப்பார்.

 ஏ.கே. செட்டியாரைச் சந்தித்ததால்தான் பத்திரிகை உலகில் பணியாற்றும் ஆர்வம், தூண்டுதல் எனக்கு ஏற்பட்டது. அது என் வாழ்வின் பெருந்திருப்பம் என்றே கூறலாம்.

அமுதசுரபி எடிட்டர், பதிப்பாளர்  வேம்புவாக இருந்தேன். அமரர் கல்கியின் "பார்த்திபன் கனவு' நாவலின் ஒரு கற்பனை பாத்திரத்தின் பெயர் விக்கிரமன். அது என்னைப் பாதித்தது. விக்கிரமன் ஆனேன்.

 1942-ஆம் ஆண்டு நண்பர் நவீனன் அவர்களின் ஆதரவால், நான் எழுதிய "நண்பா மறந்துவிட்டாயா?' என்ற சிறுகதையை மாலதி இதழ் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து "வள்ளிக் கணவன்', "விளையாட்டுக் கல்யாணம்' என்ற சிறுகதைகளும் அதில் வெளிவந்தன. அப்போது எனது இயற்பெயரான வேம்பு என்ற பெயரிலேயே அவை வெளியாகின.

 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் சூட்டிய பெயரில் வெளிவந்த இதழ்தான் அமுதசுரபி. முதன்முதலில் வித்வான் வே. லட்சுமணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு அமுதசுரபி தொடங்கப் பட்டது. பிரபல ஓவியர் ஆர்யா அமுதசுரபிக்கு முதல் அட்டைக்கு படம் போட்டு பெருமை சேர்த்தார்.

பத்திரிகை நடத்துவது என்றால் பொருளாதார பலமும், திறமையான நிர்வாகமும் இருக்க வேண்டும். ஓர் ஆசிரியருக்கு எவ்வளவு பொறுப்போ அவ்வளவு பொறுப்பு நிர்வாகிக்கும் உண்டு என்ற கருத்துடைய நான் ஆசிரியர் - நிர்வாகி என்ற இரண்டு பொறுப்புகளையும் ஒருசேர ஏற்றுக் கொண்டேன்.

  அமுதசுரபி தொடக்கக் காலம் முதல் நான் ஆசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில்- அந்தக் காலத்தில் எழுதிய படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிட்டு சிறப்பு செய்தது.

அவர்களுள் பாரதிதாசன், பெ.நா. அப்புசாமி, சுத்தானந்த பாரதி, நாடோடி, கி.ஆ.பெ. விசுவநாதம், லா.ச. ராமாமிர்தம், தி. ஜானகி ராமன், வல்லிக் கண்ணன், துமிலன், த.நா. குமாரசுவாமி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, விந்தன், ஜெயகாந்தன்,  மீ.ப. சோமு, சாண்டில்யன், மாயாவி, அகிலன், ரா.பி. சேதுப் பிள்ளை, மு.வ., க.நா. சுப்ரமணியம்  என பட்டியல் நீளும்.

நான் அக்காலத்திலேயே பிரபலமானவர் என்று எவரையும் கருதியதில்லை. எழுத வருபவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களுடைய படைப்புகள் நல்லதாய், சமூகத்தைப் பிரதிபலிப்பதாய் இருந்தால் எழுத வைப்பேன். இன்றும் அவ்வாறே நல்ல படைப்புக்கு தக்க பரிசு தருகிறேன். அது அமுதசுரபியிலிருந்து இலக்கியப்பீடம் வரை தொடர்கிறது.

 1944-ஆம் ஆண்டில் எனது ஊர் சுற்றும் பயணம் தொடங்கியது. நானும் நண்பர் ஸூபாவும் முதலில் மாமல்லபுரம் சென்றோம். சிற்பங்களை ரசிக்க உதவக் கூடியதாகவும், ஓரளவுக்கு வழிகாட்டியாகவும்- அதே சமயம் சிற்பம் அமைக்கப்பட்ட காலம், விவரம் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பு விளங்கக் கூடிய நூல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை உதயமாயிற்று.

  நாங்கள் பட்டம் பெற்ற சரித்திர ஆசிரியர்களோ அல்லது ஓவிய- சிற்பக் கலைத் துறையில் பெரும் அறிவாளிகளோ அல்லர். ஆசையால் மாமல்லபுரம், ஒரு வழிக் குறிப்புப் புத்தகம் காண்போம் எனும் கட்டுரை வடித்தேன்.

1943-இல் காஞ்சி கோவில்களைப் பற்றி "கலைக்காஞ்சி' என்ற தொடர் "ஜ்வாலா' என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து அமுதசுரபியில் திருப்பரங்குன்றம், சோழர்களின் பெருமை கூறும், கங்காபுரி காவலன், திருக்குற்றாலத்தைப் பிரதிபலிக்கும் சித்திரசபை என தமிழகத்தின், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று இந்தியாவின் கலை, இலக்கியம், பண்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டும் பல பயணக் கட்டுரைகளைப் படைத்தேன்.

இதனைத் தொடர்ந்து மூன்று முறை மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும், பாரீஸ், ரோம், துபாய், இலங்கை என இலக்கிய நட்பு பயணத்தை உருவாக்கினேன். என் பயணம் வெறும் உல்லாசப் பயணம் அல்ல  இலக்கிய நட்பு பரிவர்த்தனைப் பயணங்கள் என்றே சொல்வேன்.

 எழுத்தாளன் என்பவன் ஓரிடத்தில் முடங்கி விட விரும்பாதவன். எழுத்தாளர்களுக்குப் புதுவித அனுபவமும், சிந்தனையும், கலந்துரையாடல் மூலம் கருத்துப் பரிமாற்றமும், பழகும் வாய்ப்பும் ஏற்படுத்த விரும்பினேன்.

 கல்கத்தா தமிழ் மன்ற விழாவிற்கு இங்கிருந்து எழுத்தாளர்களை அழைத்துச் சென்று, அங்குள்ள தமிழர்களுடன் கலந்துறவாடி, கருத்தரங்கம், கவியரங்கம் போன்றவற்றில் பங்கேற்கச் செய்து தமிழ்ப் படைப்பாளர்களைக் கெளரவிக்க முயன்றேன்.

 1984-85-இல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் திரட்டி டெல்லியில் மாநாடு நடத்தி எழுத்தாளர்களை எழுத்தாளர் சங்கம் மூலம் சிறப்பித்தோம்.

 தொடர்ந்து பாரதி பிறந்த நாளில் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு அழைத்துச் சென்று விழாக்கள் எடுத்தோம்.

 நான் எழுத்தாளர் சங்கத்திற்கு முன்பே 1946-48-இல் சைதாப்பேட்டையில் நண்பர்களுடன் இணைந்து "பாரதி ராட்டைக் கழகம்' என்று தோற்றுவித்தோம். 1951-இல் தொடங்கி இன்றைய நாள் வரை பாரதி கலைக் கழகம் மூலம் கவிஅரங்கங்கள், இலக்கிய விழாக்கள் நடத்தி வருகிறோம். பாரதி ராட்டைக் கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாடு கையெழுத்துப் பத்திரிகை எழுத்தாளர் சங்கம் தொடங்கி, 1945-இல் எழுத்தாளர் நாடோடி தலைமையில் ஒரு மாநாடு நடத்தினோம்.

 1945-இல் சைதாப்பேட்டையில் இருந்த சேரிப் பகுதிகளுக்குச் சென்று துப்புரவுப் பணி செய்ததோடு தெரு பெருக்கும் தொழிலாளர்களுக்காக தோட்டிகள் சங்கம் ஒன்றை அமைத்தேன்.

 இந்தியாவில் பல்வேறு மொழி எழுத்தாளர்களிடம் உள்ள வலிமையான அமைப்புகள் நம் தமிழ் எழுத்தாளர்களிடம் இல்லையே என்ற ஆதங்கமும், எழுத்தாளர்களுக்கென்று பல வசதிகளைச் செய்து தரவும், இலக்கிய விழாக்கள், போட்டிப் பரிசுகள், புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தல் போன்ற பல திட்டங்களை உருவாக்கவும், எழுத்தாளர்களை எல்லாம் ஒன்று கூட்டி சங்கம் அமைக்க வேண்டும் என்ற ஆசையும் என்னுள் எழுந்தது. என்னைப் போலவே கல்கி, அகிலன், சாண்டில்யன், ம.பொ.சி. போன்றவர்கட்கும் இருந்தது. அதன் பயனாக கல்கி தலைமையில் எழுத் தாளர் சங்கம் முதன் முதலில் அமைந்தது. அதில் நான், நா. இராமச்சந்திரன் போன்றவர்கள் செயற்குழுவிலும்  ப. கோதண்டராமன், க.நா.சு., ஆர். ரகுநாதன், ஆர்.வி. போன்றவர்கள் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தார்கள். ஏறக்குறைய நான்காண்டுகள் மிகச் சிறப்பாக அச்சங்கம் செயல்பட்டது. 1968-இல் முதலில் சங்கத்தின் தலைவரானேன்.

எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வரவும், எழுத்தாளர்களுக்குக் கடனுதவி போன்ற பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் த.நா. குமாரசாமி, சாண்டில்யன் ஆகியோருடன் இணைந்து எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் உருவானது. நூல்களும் வெளியிடப் பட்டன. பிற்காலத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்கள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக இச்சங்கம் செயலிழந்து விட்டது.

 1968-க்குப்பின் எனது தலைமையில் இயங்கிய எழுத்தாளர் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் எழுத்தாளர் மாநாடு நடத்தியது.

அம்மாநாட்டில் வி.வி.கிரியும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பலர் தலைமை ஏற்றாலும் எழுத்தாளர் சங்கம் சரிவர இயங்கவில்லை. நானும் அமுதசுரபி பத்திரிகையில் உழன்று தொடர்ந்து செயல்பட முடியவில்லை.

 1977-ஆம் ஆண்டு மீண்டும் சங்கப் பணிகளைத் தொடர முயற்சித்தேன். ம.பொ.சி. இல்லத்தில் பெ.சு.மணி, சுப்ரபாலன், கல்யாணசுந்தரம், குமாரவாடி இராமானுஜம் (சேரா) அன்பு வேதாச்சலம் ஆகியோர் கூடி தமிழ் எழுத்தாளர் சங்கம் மீண்டும் உருப்பெற திட்டம் தீட்டினோம். அதுவே அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கமாக உருப்பெற்றது.

 1977 முதல் 80 வரையில் சங்கத் தலைவராகவும்  81 முதல் 83 வரை பொதுச் செயலாளராகவும்  84 மற்றும் 89இல் மீண்டும் தலைவராகவும் பணியாற்றினேன்.

 1984 முதல் 1988 வரை ஏறக்குறைய நான்கு ஆண்டு காலம் எழுத்தாளர் சங்கம் தனித்தன்மையுடன் வீறு நடைபோட்டது.

 கல்கத்தாவில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் கு. ராஜவேலு, நாரண துரைக்கண்ணன், ராஜம்கிருஷ்ணன் ஆகியோருக்கு என் முன் முயற்சியில் சிறப்பு பாராட்டு, பட்டம் வழங்கப் பெற்றது. அதில் தமிழகத்திலிருந்து 110 பேர் கல்கத்தாவுக்கு கே. ராமமூர்த்தி துணையுடன் அழைத்துச் செல்லப்பட்டு, எழுத்தாளர்களின் வாழ்த்தையும் பாராட்டையும் பெற்றனர்.

 அ.இ.த. எழுத்தாளர் சங்கம் செயல்பட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த காலத்தில், எழுத்தாள அன்பர்களின் வேண்டுகோளின் பேரில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை எனும் அமைப்பை 92-இல் முறைப்படி பதிவு செய்து, அச்சங்கத்தை பத்தாண்டுகளாக நடத்தி வந்தோம். இதில் எழுத்தாளர் நலம் மட்டுமல்லாமல், காவிரி நதிநீர் பங்கீடு குறித்து 2002-ல் தமிழகம் முழுவதும் அ.இ.த. எழுத்தாளர்கள் அடையாள உண்ணாவிரதம் இருந்து தமிழர் நலனுக்குக் குரல் கொடுத்தோம்.

 எனக்கு சிறு பத்திரிகைகள் என்று சொல்வதில் விருப்பமில்லை. லட்சியப் பத்திரிகை என்று வேண்டுமானால் சொல்லலாம். நம் எண்ணங்களை- சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவே பத்திரிகை நடத்துகிறோம். பத்திரிகை என்றால் பொருளாதாரத்தை சரியாகப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதார பலம் இல்லாவிடில் லட்சியம் கருகிப் போய் விடுகிறது. அதனால்தான் பத்திரிகை நடத்துவதில் வியாபார மனப்பான்மையும் இருக்க வேண்டும். அதில் நல்ல லட்சியங்களைச் சொன்னால் வெற்றி அடையலாம்.

இலக்கியப் பீடம் 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் இது நாள் வரை தொடர்ந்து வருகிறது. முதலில் காலாண்டு இதழாக  வந்தது. அஞ்சல்துறை சலுகை கிடைக்காததால் மாத இதழாகப் பரிணமித்து வருகிறது. இலக்கியப் பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.

 இதழியலை அதன் பத்திரிகை கொள்கைகளுக்காக நான் தேர்ந்தெடுக்கவில்லை. என்னுடைய கடமைகளையும் குறிக்கோள்களையும் வெளிப்படுத்தும் கருவியாகவே நான் அதைப் பயன்படுத்துகிறேன். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுதல் என் லட்சியம். என் உயிர்க் கொள்கைகளை இதழ்கள் மூலமாகவே பரப்புவேன். பிறரைப் பற்றி சினந்தும் அவதூறாகவும் எழுதமாட்டேன். உணர்ச்சிகளைத் தூண்டுகிற மாதிரியும் என் எழுத்துகள் அமையா. இதழியல் எனக்கோர் அனுபவமாக அமைகிறது. என்னை நானே அறிந்துகொள்வதற்கும், என் குறைகளைக் கண்டு திருத்துவதற்கும் இதழ்கள் எனக்கு உதவட்டும் என்ற காந்தி மகானின் வழியில் நின்று முத்தமிழ் அமுதத்தை உங்கள்முன் படைக்கிறேன்.

 https://thoguppukal.wordpress.com இலிருந்து...

வண்ணப்படம் : யோகா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.