அவர் ஓர் ஆர்ட்டூனிஸ்ட்!
எண் 8, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முதல் அவென்யூ வீட்டு மாடியில், சமீபத்தில் மறைந்த ஓவிய மேதை கோபுலு தாம் பகல் நேரங்களில் தூரிகையால் சித்திரங்கள் தீட்டி மகிழ்ந்த அறை, அவரது நினைவு அறையாக உருவாகி வருகிறது.


எண் 8, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முதல் அவென்யூ வீட்டு மாடியில், சமீபத்தில் மறைந்த ஓவிய மேதை கோபுலு தாம் பகல் நேரங்களில் தூரிகையால் சித்திரங்கள் தீட்டி மகிழ்ந்த அறை, அவரது நினைவு அறையாக உருவாகி வருகிறது. அவர் வரைந்த ஓவியங்கள், அவர் ஓவியம் வரைந்த பத்திரிகைகள், புத்தகங்கள், பரிசுகள், பாராட்டுகள் எல்லாம் அங்கே இடம் பெற ஏற்பாடு செய்து வருகிறார் அவரது ஒரே மகன் ராஜேசுவரன். (வருகிற ஜூன் முதல் வாரத்தில் 92 வயதை அமைதியாகக் கொண்டாடியிருப்பார் கோபுலு. ஆனால் ஏப்ரல் 29 அதற்கு வாய்ப்பு அளிக்காமல் முந்திக்கொண்டது.)
கோபுலுவின் நினைவுகளை நிரந்தரமாக்க முயன்று வரும் அவரது மகன் ராஜேசுவரனிடம் அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம்:
வர் கண்டிப்பானவர் அல்ல. மகிழ்ச்சி இல்லாத உலகத்தில் மகிழ்ச்சியைப் பரப்ப வேண்டும் என்று சொல்லுவார் அப்பா'' என்று கூறும் ராஜேசுவரன்,
கிண்டி எஞ்சினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்று, பிறகு மும்பை ஐஐடியில் எம்.டெக் முடித்து, அமெரிக்க ஸ்டேட் யூனிவர்சிடி ஆஃப் நியூயார்க்கில் பிஎச்.டி. செய்துவிட்டு, அரசின் úஸôலார் எனர்ஜி துறையில் சில ஆண்டுகள் பணியாற்றிய பின், புகழ்பெற்ற கோடக் நிறுவனத்தில் மிக உயரிய பதவி வகித்தவர் ராஜேசுவரன். காலக்ஸி போன்ற வகைகளைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர். பின்னர் ஜப்பானில் 2001 முதல் 2007 வரை பணி. (சரளமாக ஜப்பானிய மொழி பேசுவார். சீன மொழியும், கொரிய மொழியும் கூடத் தெரியும்) அதன் பிறகு மோசர்பேர் நிறுவனத்தில் தொழில் நுட்பத் தலைமை அதிகாரி. தற்போது சொந்த பிஸினஸ். இனி, ராஜேசுவரன்:
""முதலில் பெஸன்ட் தியாசபிகல் பள்ளியில் சேர்த்தார். பிறகு எழும்பூர் டான்போஸ்கோ பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதுகூட, என் விஷயத்தில் எதிலும் தலையிடவே மாட்டார். பிராக்ரஸ் கார்டில் அப்பாவின் கையெழுத்து வாங்குவது பள்ளியில் கட்டாயம். கொடுத்தவுடன் உடனே சிரித்துக் கொண்டே கை எழுத்துப் போட்டுத் தந்துவிடுவார். நான் அவரிடம் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்பதோடு, நன்றாகவே படித்தேன். அதனால் என்னிடம் கோபித்துக் கொள்ளவே மாட்டார். யாரிடமும் ஒருபோதும் அவர் கோபித்துக் கொண்டதே இல்லை. அடுத்தவர்களைச் சந்தோஷமாக வைப்பது எப்படி? என்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது அதே போலத்தான், யாரையும் குறை கூறவும் மாட்டார். அது அவருக்குப் பிடிக்காது. முடிந்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பார். உன்னைப் பற்றி எல்லோரும் நல்லதை மட்டுமே பேசும்படி நடந்துகொள்ள வேண்டும் என்பார்'' என்ற ராஜேசுவரனிடம், ""நீங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அப்பா கோபுலு பிஸியாக இருந்திருப்பாரே?'' என்று கேட்டோம்.
""என்ன பிஸியாக இருந்தால் என்ன? அவரை மாதிரி எளிமையானவரைப் பார்க்க முடியாது. எல்லா இடமும் பளிச்சென்று தூய்மையாக இருக்க வேண்டும் அவருக்கு. வெண்மையான சுவர். வெள்ளைக் கதவு. வெள்ளை சன்னல். வெள்ளையாகப் பிரம்பு நாற்காலிகள். எங்கேயும் ஒரு பொட்டு அழுக்கையோ, தூசையோ பார்க்க முடியாது. சுவரில் ஆணி அடிப்பது அவருக்குப் பிடிக்காது. யாராவது காலண்டர் கொடுத்தால்கூட, அதை வீட்டில் மாட்டாமல், யாருக்காவது கொடுத்துவிடுவார். வீடு கட்டியபோது அடித்த அதே மெல்லிய வெள்ளை மற்றும் வெளிர் பச்சையும்தான் இன்றுவரை தொடர்கிறது. காலையில் சரியான நேரத்துக்குக் குளிக்கப் போய்விடுவார். குளித்து வந்ததும் சுவாமி அறையில் பிரார்த்தனை. அங்கே அவர் குரு மாலியின் படமும் இருக்கும். முதல் முதலில் வரைந்த ராமர் பட்டாபிஷேகப் படமும் இருக்கும்.
விகடன் நிறுவனம் என்று இல்லை. எந்த அலுவலகத்துக்கும் குறித்த நேரத்துக்குக் கிளம்பிவிடுவார். எதையும் தாமதப்படுத்த மாட்டார். அவரிடம் நினைவுபடுத்த வேண்டிய தேவையே இருக்காது. சொன்ன தேதிக்குச் சித்திரம் போய்ச் சேர்ந்துவிடும். அதே மாதிரி, பாரம்பரிய விஷயங்கள் எதையும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. தன் தந்தையின் மீது அளவற்ற மதிப்பு வைத்திருந்தார். தன்னுடன் பிறந்தவர்களையும் விட்டுக் கொடுக்காமல் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். ஒரு நியூக்ளியர் ஃபேமிலியைக் காப்பாற்றுவதில், கல்யாணம் முதற்கொண்டு அத்தனை சிரத்தை எடுத்துக்கொண்டார். தன் அப்பாவுக்கு நிறையக் குழந்தைகள் இருந்ததனாலேயே தனக்கு மட்டும் ஒரே பையனோடு நிறுத்திக் கொண்டார்'' (புன்னகை செய்தார் ராஜேசுவரன்).
""எப்போதும் வரவுக்குள் செலவு செய்து வாழ வேண்டும் என்று அப்பா சொல்வார். அது மட்டுமல்ல, சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிப்புக்கு வைத்துவிட வேண்டும் என்பார். இங்கே இப்போது இருக்கும் இடத்தை, அவருடைய நெருங்கிய நண்பர் மர்ரே கம்பெனி ராஜம்தான் சிபாரிசு செய்து வாங்க வைத்தார். இந்த வீடு கட்டும்போது எதிரில் உள்ள வீட்டில்தான் குடியிருந்தோம். அதற்கு முன்பு அபிராமபுரம் முதல் தெருவில் குடியிருந்தோம்.
மர்ரே ராஜம் வந்தால் எங்களை எல்லாம் கூட்டிக்கொண்டு நீண்ட டிரைவ் போவார். மகாபலிபுரம் கூடப் போயிருக்கிறோம். தவறாமல் போண்டாவும் ஐஸ்கிரீமும் வாங்கித் தருவார். அதனால் அப்போது அவரிடம் எனக்கு பிரியம் அதிகம்''என்று கூறி புன்னகைக்கிறார் ராஜேஷ்வரன்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, ராஜேசுவரன் அமெரிக்காவிலிருந்து அப்பாவைப் பார்க்க வந்து
கொண்டிருந்தாலும், கோபுலுவும் பல முறை அமெரிக்காவுக்குச் சென்று மகனுடைய குடும்பத்துடன் சில காலம் இருந்திருக்கிறார். அப்போது அவர் ஓய்வு நேரத்தில் வரைந்தவை. பன்னிரண்டு ஆயில் பெயின்டிங்குகள். ராஜராஜ சோழன் பிரகதீசுவரர் கோயில் கட்டுவது, குற்றாலக் குறவஞ்சி, ராதா, ருக்மணி என்று அவர் வரைந்தவை அத்தனையும் தன் ராச்செஸ்டர் வீட்டு வரவேற்பறையில் சட்டமிட்டு மாட்டி வைத்திருக்கிறார் ராஜேசுவரன். அங்கே அமெரிக்காவில் வரைந்த படங்களில் எல்லாம் தமிழில் வழக்கமாகப் போடுவது போல் அல்லாமல், கோபுலு என்று ஆங்கிலத்தில் பெயரை எழுதியிருக்கிறாராம்.
ராஜேஷ்வரன் தொடர்கிறார்: ""அவருக்கு ஸ்ட்ரோக் வந்த போது உடனே வந்து ஹாஸ்பிடலுக்குப் போனேன். அவர் ஓரளவு குணமாகி, டாக்டர் செரியனும், நர்ஸகளும் ஊக்கம் அளித்து, இடது கையால் ஓவியம் வரையும் அளவுக்கு முன்னேறினார். அவருக்கு வில் பவர் அதிகம். அது மட்டுமல்ல. என் அத்தை எங்கள் கூடவே இருந்தார். அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பா சின்ன வயதிலேயே வீட்டில் இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் படங்களைப் போட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பாராம். ஒரே படத்தை இரண்டு கைகளால் ஒரே மாதிரி வரைவாராம்''
1990ல், கோபுலு அமெரிக்கா சென்றபோது ஆஃப்ரிக்கன் சஃபாரி போக வேண்டும் என்று சொன்னார்.
""அப்போது கென்யாவுக்கும், தான்சானியாவுக்கும் அப்பாவை அழைத்துக் கொண்டு போனேன். மூன்று வாரங்கள் கிழக்கு ஆப்ரிக்கக் காடுகளில் ஆனந்தமாகச் சுற்றினோம். ஏராளமான புகைப்படங்கள் எடுத்தோம். ஆயிரக்கணக்கில் இருக்கும் அவை கோடக் கம்பெனியில் இருந்ததால் எடுத்த புகைப்படங்கள். எல்லாம் முடிந்து அமெரிக்கா திரும்பும்போது, தமாஷாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்: "அனிமல்ஸ் ஆர் வெரி úஸப். பீப்பிள் ஆர் வெரி டேஞ்சரஸ்' இன்னொரு முறை வந்தபோது பேரக் குழந்தைகளுடன் டிஸ்னி லேன்ட் எல்லாம் போய்விட்டு வந்தார்''
""கோபுலு அவர்களை கார்ட்டூனிஸ்ட் என்று மட்டுமே குறிப்பிடுவது தவறு. அவரே சொல்வது போல் அவர் ஓர் ஆர்ட்டூனிஸ்ட். அவருக்குப் பிடித்த அயல் நாட்டு கார்ட்டூனிஸ்ட்டுகள். நார்மன் ராக்வெல்லும், டேவிட் லோவும்தான். அவர்களின் நூல்கள் கோபுலுவின் அறையில் இருக்கின்றன. புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு எத்தனை ஆர்வம் என்பதை அவருடைய சொந்த நூலகத்தைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். அத்தனை முக்கிய ஆங்கில நாவலாசிரியர்களுக்கும் அங்கே இடம் கொடுத்திருந்தார். தொடர்கதைகளுக்கு அவரைப் போல் அக்கறை எடுத்துக்கொண்டு ஓவியம் வரைந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருக்கும். தொடர்ந்து கடைசிவரை அவர்களைத் தம் ஓவியத்தில் கொண்டு செல்வார். ஒரு ஜோக்குக்குக் கூட அலட்சியமாகச் சித்திரம் வரைந்ததில்லை. ஒரு மத்தியதரக் குடும்பம் என்றால் எத்தனை விவரங்கள் தேவையோ அத்தனையும் அதில் இருக்கும்
ஒரு முறை மதுரை டி.வி.எஸ். விருந்தினர் மாளிகையில் ஜவஹர்லால் நேரு தங்க நேர்ந்த போது, அங்கே படியேறும் பாதையில் சுவர்களில் தெரிந்த ஓவியங்களைப் பார்த்து வியந்த நேரு, இதெல்லாம் யார் வரைந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டாராம். குங்குமம் இதழ், சன் டிவி, கலைஞர் டிவி, ஸ்ரீராம் சிட்ஃபண்ட்ஸ், நாதெள்ள சம்பத் செட்டி என்று கோபுலு உருவாக்கிக் கொடுத்த "லோகோ' எல்லாம் புகழ் பெற்றவை.
""பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைவதிலிருந்து அட்வர்டைசிங் துறைக்குப் போனார். அது 1964ஆம் வருஷம். எஃபீஷியன்ட் பப்ளிசிடீஸ் நிறுவனத்தில் முதலில் ஆர்ட் டைரக்டராகச் சேர்ந்தார். பின்னர் எஃப்.டி.ஸ்டூவர்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். 1972இல், இதே வீட்டின் கீழேதான் "ஆட்வேவ்' விளம்பர கம்பெனியைத் தொடங்கினார். 1975க்கு அப்புறம் ஆழ்வார்பேட்டை, பிறகு தி. நகரில் சொந்தக் கட்டட'மாக "ஆட்வேவ்' நிறுவனம் வளர்ந்தது''.
""1967-68 வாக்கில் புதிதாக ஸ்டான்டர்ட் ஹெரால்ட் கார் வாங்கினார் அப்பா. ஒரு டிரைவரை வைத்துக் கொண்டு நாங்கள் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பல இடங்களுக்கும், குறிப்பாக முக்கியமான எல்லாக் கோயில்களுக்கும் போனோம். மறக்க முடியாத பிரயாணம் அது. பிறகு 80களில் கொடைக்கானலில் ஒரு வீடு வாங்கினார். வருடத்துக்கு ஒரு தடவை போய்த் தங்குவதற்காக வாங்கினது. அவர் இயற்கைக் காட்சிகளை வெகுவாக ரசிப்பார். செடிகொடிகளை, பூக்களை ரசிப்பார். ராச்செஸ்டாரில் எங்கள் வீட்டுக்கு வந்தால், கொட்டும் பனியை ரசித்துப் பார்த்து மகிழ்ந்து போவார்.
அப்பாவுக்கு கர்நாடக இசை மிகவும் பிடிக்கும். உடம்புக்கு வரும் வரை, அம்மாவையும் அழைத்துக் கொண்டு காரில், மாலை வேளையில் கடற்கரைக்குக் கிளம்பிவிடுவார். மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் ஸிடி எல்லாம் காரில் இருக்கும். அவற்றைக் கேட்டுக்கொண்டு காரில் உட்கார்ந்து காற்று வாங்குவது அவருக்குப் பிடித்தமானது'' என்கிறார் ராஜேசுவரன்.
கோபுலு வெராந்தாவில் வழக்கமாக அமரும் சக்கர நாற்காலி இப்போது வெறுமையாக அவர் அறையில் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...