வாசிப்புக்கு வயது நூறு!
மங்கல வாத்தியம் எனப்படும் நாதசுரம் இல்லாத சுப நிகழ்ச்சி ஏதும் உண்டோ? அந்த வாத்தியத்துக்குப் புகழ் சேர்த்தவர்கள் பட்டியலில் பலர் முன் வரிசையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை.


மங்கல வாத்தியம் எனப்படும் நாதசுரம் இல்லாத சுப நிகழ்ச்சி ஏதும் உண்டோ? அந்த வாத்தியத்துக்குப் புகழ் சேர்த்தவர்கள் பட்டியலில் பலர் முன் வரிசையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை.
ஜூன் 1938இல் ஆல் இந்தியா ரேடியோ துவங்கியபோது இவருடையதுதான் முதல் வாசிப்பு. வயலின், மிருதங்கம், தம்புராவோடு நாதசுரக் கச்சேரி செய்த முதல் கலைஞர் இவர். காந்திஜிக்குப் பிடித்த "ராம் துன்' பாடல்களை அவர் இறந்ததும் முதலில் நாதசுரத்தில் இசைத்தவர். பாரதியார் பாடல்களை முதலில் இசைத்தவரும் இவரே. தேசிய கீதத்தை நாதசுரத்தில் வாசித்த முதல் கலைஞர். ஹட்சின்ஸ், கொலம்பியா, எச்.எம்.வி. என்று அதிக எண்ணிக்கையில் நாதசுர ரெக்கார்டுகளை வெளியிட்டு ஒரு ரெகார்டு படைத்தவரும் இவர்தான்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் 1965இல் இவருக்குத்தான் முதன் முதலாக விருது கொடுத்து கௌரவித்தது. மத்திய சங்கீத நாடக அகாடமி 1976இல் இவருக்கு பெலோஷிப் அளித்தது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1984இல் இவருக்கு முதன் முதலாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்ந்தது.
ஏப்ரல் 26, 1906-ஆம் ஆண்டு பிறந்த இந்த நாதசுரக் கலைஞர், தம் பத்தாவது வயதிலேயே, அதாவது 1916இலேயே நாதசுரம் வாசிக்க ஆரம்பித்து விட்டார். முதலில் பாட்டனார் முத்துவீரப்பிள்ளையிடமும், பின்னர் மாமா சாமிதுரைபிள்ளையிடமும் கற்றுக் கொண்டார். பத்தாம் வயதில் வாசிக்கத் தொடங்கியவர், வாத்தியத்தைக் கீழே வைத்தது 70ஆவது வயதில்தான்.
இத்தனைக்கும் அன்றைக்கு நாதசுர வாசிப்பில் கொடிகட்டிப் பறந்த ராஜரத்தினம் பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள், செம்பனார்கோயில் சகோதரர்கள், திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை எல்லாரும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த காலம். ஆனால் இவர் வாசிப்பில் ரசிகர்களை மயக்கும் ஒரு தனிக்கவர்ச்சி இருந்தது.
மிகப் பெரிய நாதசுர மேதைகளின் இசையை ரசித்துக் கேட்டவர் காஞ்சி மகா பெரியவர். இவருக்கு "ஸ்வேதாரண்ய புன்னாக நாதமூர்த்தி' என்று ஒரு பெரிய பட்டம் கொடுத்தார். திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனங்கள் இவரை ஆஸ்தான பிரதம வித்வானாக நியமித்துப் பெருமை தேடிக் கொண்டன.
சரி, அதெல்லாம் அவர் கலைச் சிறப்புக்கும், ஞானத்துக்கும் கிடைத்த பாராட்டுகள், வெகுமதிகள், பரிசுகள். ஆனால் எந்த ஒரு நாதசுர வித்துவானாவது மாநில காதி-கைத்தொழில் வாரியத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறாரா? இவர் இருந்திருக்கிறார். மாநில ஹிந்து சமய அறநிலையத் துறையில் இவர் உறுப்பினர். மயிலாடுதுறை நகராட்சியில் இரண்டு முறைகள் கவுன்சிலர். சாயாவனேசுவரர் கோயிலின் தர்மகர்த்தா. திருவையாறு தியாகபிரம்ம மஹோத்சவ சபா செயலராக இருந்திருக்கிறார். பழனி, திருவையாறு நாதசுரக் கல்லூரிகளில் பிரின்ஸிபலாக செயலாற்றியிருக்கிறார்.
எந்த நாதசுர வித்துவானாவது, எந்தக் கடவுளுக்காவது கோயில் கட்டியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை தம் ஊரில், 70 வருடங்களுக்கு முன்னால், விநாயகருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார்.
மயிலாடுதுறையில், சேர்ந்தாற்போல் பத்து நாட்களுக்கு அருணகிரி நாதர் உற்சவம் கொண்டாடியிருக்கிறார். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல. தொடர்ந்து நாற்பது வருடங்கள்.
தமிழ்நாடு இசைக்கல்லூரிகளில், தவில் வாத்தியம் கற்றுத் தர இவர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
இவருக்கு "நாதசுர செல்வம்' விருது அளித்த முத்தமிழ்ப் பேரவை, இவருடைய 110ஆம் ஆண்டைக் கொண்டாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால், திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையை ரசிகர்கள் மறந்துவிடவில்லை என்று நிரூபிக்க முன்வந்ததற்காக மனமாரப் பாராட்டலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...