சிவபெருமானுக்குப்பெண் குழந்தைகள் உண்டா?
"தேவர்களின் தேவன் - மகாதேவன்' என்ற சின்னத்திரை இந்தித் தொடரில், "அசோக சுந்தரி', சிவபெருமானின் திருமகளாகத் தோன்றியபோது, பார்வையாளர் எல்லாருக்கும் ஒரே வியப்பு.


"தேவர்களின் தேவன் - மகாதேவன்' என்ற சின்னத்திரை இந்தித் தொடரில், "அசோக சுந்தரி', சிவபெருமானின் திருமகளாகத் தோன்றியபோது, பார்வையாளர் எல்லாருக்கும் ஒரே வியப்பு. சிவபெருமானுக்கு விநாயகர், முருகன் என்று இரண்டு மகன்கள்தானே உண்டு? மகள்கள் கிடையாதே? யார் இந்த அசோக சுந்தரி? எங்கிருந்து வந்தாள் இவள்? - என்று வினா எழுப்பினார்கள்.
இது குறித்துக் கேட்ட போது, புராண இதிகாசக் கதைகளைச் சுவைபட எழுதிவரும் தேவ்தத் பட் நாயக் என்ன சொல்கிறார் தெரியுமா?
""சிவபுராணத்தின் நோக்கமே, சிவபெருமான் எப்படி சந்நியாசியாக இருந்து சம்சாரியானார் என்ற அவருடைய சமூக வாழ்க்கையைச் சித்திரிப்பதுதான். அதாவது, ஒரு தந்தையாகப் பொறுப்பேற்று, தந்தையின் கடமைகளைச் செய்வது. சாதுவாக அவர் இருக்கையில், உலக ஆசாபாசங்களிலிருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அம்பாள் அவரை உலக வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொள்ள வைத்தாள். அதற்கு விஷ்ணுவும், பிற கடவுளரும் அவளுக்கு உதவினார்கள். விஷ்ணுவின் சகோதரியல்லவோ அவள்? தமிழில் புராதன கோயில்கள் வரலாற்றில், விஷ்ணு அவளுடைய சகோதரராகவும், பிரம்மா அவள் தந்தையாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். இருவருமாகச் சேர்ந்து, சந்நியாசியாக இருந்த சிவபெருமானை சம்சாரியாக்க முயல்கிறார்கள். அப்போதுதான் அவருடைய சக்தி முழுவதும் இந்த உலகுக்குப் பயன்படும் என்பது உட்கருத்து.
எனவே, அதற்குக் குழந்தைகள் இருக்க வேண்டும். அதனால் மகன்கள் பிறந்தார்கள். மனித குலத்தின் முக்கியத் தேவைகளைக் கவனித்துக் கொண்டார்கள். விநாயகர் உணவுக்கும், முருகன் பாதுகாப்புக்கும் படைக்கப்பட்டார்கள். ஆக, சிவபெருமான் இரு பிள்ளைகள் மூலமாக இந்த இரு கடமைகளைச் செய்து வரப் பணித்தார். மகன்களுக்குக் கிடைத்த முக்கியத்துவத்தை, பக்தர்களும் ஞானிகளும் கவனிக்கத் தவறவில்லை. அப்படித்தான் நாடோடிக் கதைகளில் சிவபெருமானுக்கு மகள்கள் உண்டு என்பதைப் படிக்க நேர்ந்தது.
இப்படித்தான் அசோக சுந்தரியின் கதை, குஜராத் பகுதிகளில் நாடோடிக் கதையாக வழங்கப்படுகிறது. தனிமையிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்க பார்வதி அவளை ஒரு மரக்கிளையிலிருந்து உருவாக்கினாள். அவளுக்கு "அசோக' என்று பெயரிட்டார்கள். அதாவது, பார்வதியின் சோகத்தைப் போக்க வந்தவள் என்று பொருள். "சுந்தரி' என்றால் அழகானவள். விநாயகரின் தலையைக் கொய்தபோது, அசோகசுந்தரி சாட்சியாக இருந்தாள் என்பது தவிர, வேறு குறிப்பு ஏதும் இல்லை. அவள் பயந்துபோய், ஓர் உப்பு மூட்டையின் பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்தாளாம்.
தமிழ்நாட்டில் சிவன் கோயில்களில் சில இடங்களில் ஜோதியை ஒளிமயமான அம்பாளாகப் பார்க்கலாம். அவள்தான் அவருடைய பிரபையின் பின்னே இருந்து ஒளி வீசுபவள். அருளையும் தருபவள்.
வங்காள நாடோடிக் கதைகளில் "மான்ஸô' - பாம்புக் கடிக்கு மருந்தாக இருந்து குணப்படுத்துபவளாக, நாகங்களின் தலைவி "வாசுகி'யின் சகோதரியாகக் குறிக்கப்படுகிறாள். சிவபெருமானின் விந்துத்துளி, நாகங்களின் தாயான "காத்ரு'வின் சிலை மீது பட்டபோது பிறந்தவள் வாசுகி. எனவே, வாசுகி சிவபிரானின் மகள். ஆனால் பார்வதிக்குப் பிறந்தவள் அல்ல. பார்வதியை, கிராமப்புறக் கதைகளில் சண்டி என்று குறிப்பிடுகிறார்கள். அவளுக்கு மான்ஸôவைக் கண்டாலே பிடிக்காது. சிவபெருமானின் ரகசிய மனைவி என்று அவளுக்கு எப்போதும் அவள் மீது வெறுப்பு. ஏன், பொறாமையும்கூட உண்டு. அதனால்தான் மான்ஸôவின் ஒரு கண்ணைக் குத்திவிடுகிறாள். பாற்கடலைக் கடைந்து விஷம் வந்தவுடன் அதை சிவபெருமான் குடிக்கும்போது, அவர் தொண்டைக்குழியிலிருந்து இறங்காமல் தடுத்தவள் அவள்தான் என்று இந்த வங்காளக் கதை தெரிவிக்கிறது. அப்போது சிவபெருமானின் மகள் என்று அவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறாள்.
உலக - அதாவது சமூக - வாழ்க்கையில் சிவபெருமானைச் சிக்க வைக்க வேண்டும் என்று போட்ட திட்டம் என்ன ஆயிற்று தெரியுமா? இந்தக் குடும்பச் சண்டைகளில் துளியும் விருப்பம் இல்லாததால், சிவபிரான் மான்ஸôவை துறந்துவிடுகிறார். அவளுக்குத் துணையாக "நேடா' என்ற தோழியை விட்டுவிட்டுச் செல்கிறார். பின்னர் மான்ஸôவுக்குத் திருமணம் ஆகிறபோது, சண்டி அவளை ஆபரணங்களுக்குப் பதிலாக, நாகங்களை அணிந்து மாப்பிள்ளையிடம் செல்லப் பணிக்கிறாள். கணவன் ஜராதகரு அவள் கோலத்தைக் கண்டு பயந்து ஓடிப் போய்விடுகிறான்.
கணவனாலும், தந்தையாலும் கைவிடப்பட்ட மான்ஸô, சினம் மிகுந்த தேவியாக ஆகிவிடுகிறாள். பாம்புக் கடியிலிருந்து தப்பித்துப் பிழைக்க வேண்டும் என்றால், மான்ஸô தேவியைத்தான் கெஞ்சிக் கூத்தாடி பிரார்த்தனை செய்தாக வேண்டும்.
இந்து மதத்தில் கடவுளர்களை, பக்தர்களும், ஞானிகளும்தான் உருவாக்குகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இந்து புராணங்களில் "சந்தோஷி மா' என்று ஒரு தெய்வம் இருப்பதாக, 1970 இல் திரைப்படம் ஒன்று வரும் வரை யாருமே அறிந்திருக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்களில், இனி அசோக சுந்தரி அடுத்ததாக வரும் தெய்வமாக இருக்கக் கூடுமோ? இப்போது வரை தெரியவில்லை.
தேவைகள்தாம் புதுப் புதுத் தயாரிப்புகளை உருவாக்குகின்றன. மனிதகுலத்தின் தேவைக்கு ஏற்ப தயாரிப்புகள் அமைந்து வரும்போது, அவை மக்களுக்கு அன்றாடத் தேவைக்கு அத்தியாவசியமானதாக ஆகிவிடுகின்றன. அப்புறம் "ப்ரொபகான்டா' என்ற பிரசார உத்தி வகுக்கப்படுகிறது. பெயர் பரவியதும், புகழும் பரவிவிடுகிறது. நம் தேவைகளில் ஒன்றாக அந்தத் தயாரிப்பு மாறிவிடுகிறது. லௌகீக விஷயங்களைப் போலவே, தெய்வீக விஷயங்களிலும்கூட, அப்படித்தான் நடக்கிறது என்பதைத்தான் இம்மாதிரியான நாடோடிக் கதைகள், கிராமப்புறக் கதைகள் எல்லாம் நமக்குத் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...