இழப்பின் இருப்பு -சா. கந்தசாமி

நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் ஓர் இழையாக இருந்துகொண்டு புதுக்கவிதைகள் எழுதியவர்
இழப்பின் இருப்பு -சா. கந்தசாமி

நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் ஓர் இழையாக இருந்துகொண்டு புதுக்கவிதைகள் எழுதியவர் ஆர்.ரங்கநாதன் என்னும் இயற்பெயர் கொண்ட ஞானக்கூத்தன். அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் அரசியல்வாதிகள், கவிஞர்கள், கதாசிரியர்கள் புனைபெயர் வைத்துக் கொண்டெழுதுவது பழக்கமாக இருந்தது. எனவே ரங்கநாதன் ஞானக்கூத்தன் என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிதைகள் எழுத ஆரம்பித்தார். முதலில் அவர் மரபான கவிதைகள் இலக்கணம் வழுவாமல்தான் எழுதி வந்தார்.
 ஞானக்கூத்தன் 1938-ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் காவிரியின் வடகரை ஊரான திருஇந்தளூரில் பிறந்தார். தாய்மொழி கன்னடம். மாயூரம் நகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்து தேர்ச்சி பெற்றார்.
 மாயூரம் அரசியல், இசை, இலக்கியம், நடனம் என்று பலவற்றுக்கும் உரிய களமாக இருந்தது. அரசியல் தலைவர்கள் எல்லாம் வந்து சொற்பொழிவாற்றினார்கள். இளைஞராக இருந்த அவர் ம.பொ.சிவஞானகிராமணியாரின் தமிழரசுக் கழகத்தால் கவரப்பட்டார். அதில் சேர்ந்து உழைக்கவும் ஆரம்பித்தார். அவரோடு தமிழரசுக்கழகத்தில் சேர்ந்து உழைத்தவர் கீரன். பின்னாளில் புலவர் கீரன் என்ற பெயரோடு ஆன்மிகச் சொற்பொழிவாளரானார். அவரோடு சேர்ந்து தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் எல்லாம் படித்ததாக ஒருமுறை குறிப்பிட்டார்.
 ஞானக்கூத்தன் அரசுப் பணிக்கான தேர்வெழுதி, பணியில் சேர்ந்தார். சென்னை, அடுத்து அறுபதாண்டுகளுக்கு அவர் வாழ்க்கை களமாகியது. நகர வாழ்க்கை, படித்தப் புத்தகங்கள், கேட்ட இலக்கியக் கூட்டங்கள், சிற்றிதழ்கள் புதுமையாக எழுதத் தூண்டின.
 தீவிரமான இலக்கியவாதியான க.நா.சுப்பிரமணியம், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். அது புதுக்கவிதை எழுதத் தூண்டியது. சி.சு.செல்லப்பா நடத்தி வந்த எழுத்து இதழுக்குச் சில புதுக்கவிதைகள் அனுப்பி வந்தார். சொல்லாலும், சொல்லப்படும் முறையாலும், கருத்தாலும் வித்தியாசப்படும் ஞானக்கூத்தன் கவிதைகளை அவர் வெளியிடவில்லை. ஏனெனில் செல்லப்பா ஸ்தாபித்து வைத்திருந்த "எழுத்து' இதழின் புதுக்கவிதைகளோடு சேர்ந்து போகவில்லை.
 புதுக்கவிதை என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா புதுக்கவிதைகளும் ஒன்றில்லை. "எழுத்து' இதழில் எழுதி வந்த சி.மணி தன் நண்பர்களோடு சேர்ந்து "நடை' என்ற புதிய சிற்றிதழ் ஒன்றைத் தொடங்கினார். "நடை' ஞானக்கூத்தன் கவிதைகள் சிலவற்றை வெளியிட்டது. புதுக்கவிதை என்று ஏற்கப்பட்டு இருந்ததில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தது பரவலான அங்கீகாரம் பெற்றது.
 இலக்கியம் என்பது - குறிப்பாகக் கவிதைகள் என்பது கடவுளைத் துதிக்க; திருவிழாக்களைப் போற்றி வரவேற்க; தலைவர்கள் பெருமைகளைச் சொல்லி பெருமிதம் கொள்வது என்று ஏற்கப்பட்டிருந்த விதிமுறைகளைப் புறந்தள்ளி வாழ்க்கையை - அதன் அழகுகளோடும், அவலங்களோடும் சொல்லிய புதுக்கவிதைகள் சிற்றிதழ்கள் மூலமாக இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. அது எண்ணிக்கையைச் சார்ந்தது இல்லை. சர்வதேச அளவில் இலக்கியத்தின் தொனி மாறியது. தமிழில் மரபில் கால் கொள்ள வைத்தது. அதனோடு இயல்பாகவே ஞானக்கூத்தன் இணைந்து போனார்.
 "கசடதபற' - என்னும் சிற்றிதழின் தொடக்கத்திலும் செயற்பாட்டிலும் முக்கியமான பங்காற்றினார். ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த "ஞானரதம்' ஆசிரியர் குழுவில் இருந்தார். மற்றும் "ழ', "கவனம்' ஆகிய சிற்றிதழ்களை இலக்கிய நண்பர்களோடு சேர்ந்து நடத்தினார்.
 அவரின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பு 1973-ஆம் ஆண்டில் வெளிவந்தது. பெயர் "அன்று வேறு கிழமை'. அது "கசடதபற'வில் வெளிவந்த கவிதை. "க்ரியா' ராமகிருஷ்ணன் முழு முயற்சி எடுத்துக்கொண்டு வித்தியாசமான முறையில் ஆதிமூலம், பாஸ்கரன், வரதராஜன், தட்சிணாமூர்த்தி, சிதம்பர கிருஷ்ணன் கோட்டோவியங்களோடு கொண்டு வந்து ஞானக்கூத்தன் திருமண அன்பளிப்பாக வழங்கினார். அது தமிழ்ப் புத்தகத் தயாரிப்பில் புதுமையானது.
 ஞானக்கூத்தன் திருமணத்திற்கு முன்னால் ஐந்தாண்டு காலம் திருவல்லிக்கேணியில், தோப்பு வெங்கடாசலம் தெருவில் சரஸ்வதி கான நிலையத்தில், மாடியில் ஓர் அறை எடுத்துக்கொண்டு நண்பரோடு தங்கி இருந்தார். சரஸ்வதி கான நிலையத்தில் எப்போதும் பாட்டும், நடனமும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஞானக்கூத்தன் அறையில் சிமெண்ட் தரையில் உட்கார்ந்து இரவு நெடுநேரம் வரையில் நண்பர்கள் இலக்கியம் பேசிக் கொண்டிருப்பார்கள். அறையே பெரும் இலக்கிய அரங்கமாகவே இருந்தது. ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், பூரணம் சோமசுந்தரம், சாகித்ய அகாதமி உதவி செயலாளர் பிரபாகர மாச்வே, ஸ்பெயின் நாட்டு இலக்கிய ஆசிரியர்கள் என்று பலரும் அறையில் அமர்ந்து அளவளாவி இருக்கிறார்கள்.
 ஞானக்கூத்தன் பொதுப்பணித் துறையில் கிளார்க்காகச் சேர்ந்து அதிலேயே ஓய்வு பெற்றவர். அவர் ஈடுபாடு இலக்கியமாகவே இருந்தது. எழுதுவதில் முழு நம்பிக்கையோடு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பல நாள்கள் எழுதவும், படிக்கவும் சம்பளம் இல்லாத விடுமுறை எடுத்துக்கொண்டு இருந்தார். அவருக்குத் தரமான இலக்கியம் படைக்கத் தெரிந்ததுபோல உயர்வானவற்றைப் படிக்கவும், அவற்றைப் பற்றிச் சொல்லவும் மனமிருந்தது.
 ஒரு மனிதன் எப்போதும் இருக்க வேண்டும் என்பது இல்லை; அவன் இருப்பை - படைப்புக்களை ஜீவிதமாக வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் ஒரு மனிதன்
 ஞானக்கூத்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com