பைத்தானி புடவைகளை மீட்டெடுத்தவர்!
சரியான வருமானம் இல்லாமல் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழில் அழிந்து வரும் நிலையில், அத்தகைய நெசவுத் தொழிலில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடுவதுடன், புதிய ரகங்களை உருவாக்கி


சரியான வருமானம் இல்லாமல் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழில் அழிந்து வரும் நிலையில், அத்தகைய நெசவுத் தொழிலில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடுவதுடன், புதிய ரகங்களை உருவாக்கி சந்தைப்படுத்தி பல நூறு பேரின் வாழக்கைத் தரத்தையும் உயர்த்தி வருகிறார் பெண் ஒருவர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஆர்த்திதான், இத்தகைய சவாலான பணியை மேற்கொண்டு, தானும் சம்பாதித்து, நெசவாளர்களின் வாழ்க்கையையும் வசந்தமாக்கி வருகிறார்.
மகாராஷ்டிர மாநில பாரம்பரிய திருமணங்களில் மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய இடம் பிடிப்பது பைத்தானி புடவைகள்தாம். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் இந்த புடவைகள் நெய்யப்படுவதால் இந்த பெயர் அதற்கு வந்தது. ஆறு கஜம் மற்றும் ஒன்பது கஜங்களில் கிடைக்கும் இந்தப் புடவையின் இரு புறமும் ஒரே மாதிரியாக நெய்யப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம். புடவைகள் அகலமான பார்டருடன் அமைந்திருப்பது இதன் தனி அம்சம் என கூறும் ஆர்த்தி, ""போதிய ஆதரவு இல்லாததால் நெசவாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். இந்தியாவின் பெயர் பெற்ற பெரும்பாலான கைத்தறிப் புடவைகளைப் போலவே பைத்தானி புடவைகளும் விசைத்தறியால் தற்போது நெய்யப்பட்டு வருகிறது'' என்கிறார்.
எலக்ட்ரானிக் பொறியாளரான ஆர்த்திபாந்தல் தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரிவில் பணியாற்றியுள்ளார்.
""எனது அம்மாவிற்கு புடவைகள் மீது ஈடுபாடு அதிகம். புடவைகளை வாங்குவதோடு மட்டுமின்றி, அவற்றை முறையாகவும் பராமரிப்பார். அவர் புடவை அணிவதை பார்த்துப் பார்த்து எனக்கு புடவைகள் மீது ஆர்வம் வந்தது.
எனது திருமணத்திற்காக மும்பையில் புடவை எடுப்பதற்காக பல கடைகளில் ஏறி இறங்கினோம். அப்போது, சிறப்பான பைத்தானி புடவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பெரிய கடைகளில் கூட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பைத்தானி புடவைகள் இருந்தன. அதுவும் கூட கவர்ந்திழுக்கும் வண்ணங்களில் இல்லை. அப்போதுதான் நாம் ஏன் பைத்தானி புடவைகளைத் தயாரித்து மார்கெட்டிங் செய்யக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. இருந்தாலும் திருமணமானவுடன் அதை தொடங்க வேண்டாம் என விட்டுவிட்டேன்.
அதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 2008-இல் நான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, ஆன்லைன் பிரிவில் பணியாற்றுவது என முடிவெடுத்தேன். மகாராஷ்டிராவைத் தவிர பிற பகுதிகளில் பைத்தானி புடவைகள் பிரபலமாக அறியப்படாதது எங்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்துதான் பைத்தானி புடவைகளை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தேன்.
எனது கணவர், மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்புடன் "ஒன்லி பைத்தானி' (ஞய்ப்ஹ் டஹண்ற்ட்ஹய்ண்) தொடங்கினேன். இதில் 80 சதவீத வகைகள் எங்களது சொந்த தறியில் கைகளால் நெய்யப்பட்டதாகும். இதற்கான வண்ணங்களின் கலவை மற்றும் வடிவமைப்பை நானே தீர்மானிக்கிறேன். பைத்தானியின் உண்மையான வேலைப்பாடுகளை தக்க வைத்துக் கொள்ள பாரம்பரிய வடிவமைப்பையே பயன்படுத்துகிறோம். கட்டங்களைக் கொண்ட மென்மையான வெளிர் நிறங்களைக் கொண்ட வகைகள் என புதுமைகளையும் புகுத்துகிறோம். பைத்தானி வடிவமைப்புகளில் மிகவும் பழமையானவற்றை மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். மற்ற புடவைகளின் வடிவமைப்பிற்காக நேரடியாக நெசவாளர்களுடன் பணியாற்றுகிறோம்.
நாங்கள் நேரடியாக நெசவாளர்களிடம் மட்டுமே இணைந்து செயல்படுகிறோம். இடைத்தரகர்களை வைத்துக் கொள்வதில்லை. இங்குள்ள ஆடைகள் கைகளால் நெய்யப்படுவதுடன் கைகளாலேயே சாயம் போடப்படுகிறது. நெசவாளர்கள் பொதுவாக பைத்தானி புடவைகளை மயிலின் உருவத்துடன் நெய்வது வழக்கம். ஆனால் பல்வேறு டிசைன்களை நெய்வதற்கு வசதியாக கைவினைஞர்களுடன் இணைந்து செயல்படுகிறோம். அதனால் எங்களின் ஒவ்வொரு பைத்தானி புடவைகளும் தனித்துவமாக மலர்கிறது'' என்கிறார் ஆர்த்தி.
மக்கள் மறந்து போன பாரம்பரியம் மிக்க மாநிலத்தின் புடவை ரகங்களைச் சந்தைப்படுத்தி சாதிக்க முடியும் என நிரூபித்துக் காட்டிய ஆர்த்தியின் வெற்றி இன்றைய இளைஞர்களுக்கு- இளம் பெண்களுக்கு - ஓர் ஊக்கசக்தியாக அமையும் என்றால் மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...