புகைப்பிடிக்கத் தடை!
மக்களின் நீண்டகால பழக்க, வழக்கங்களைக் கரோனா தொற்று மாற்றிக் கொண்டே இருக்கிறது.


மக்களின் நீண்டகால பழக்க, வழக்கங்களைக் கரோனா தொற்று மாற்றிக் கொண்டே இருக்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கமும் அவற்றில் ஒன்று. கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து ஒரு மில்லியன் பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை பிரிட்டனில் விட்டுவிட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
புகைப்பிடிப்பவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அது உயிருக்கு ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்வதால்தான் இந்த மாற்றம். இதை உலக சுகாதார நிறுவனம் மட்டும் இன்றி, உலகின் பல்வேறு நாடுகளின் ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.
பிரான்சில் ஆன்லைன் மூலம் நிகோடின் பொருள்களை விற்பனை செய்வதைத் தடை செய்திருக்கிறார்கள். மருந்துக் கடைகளில் மிகவும் தேவையுள்ளவர்களுக்கு மட்டும் நேரடியாக விற்பனை செய்கிறார்கள். அதுவும் நிகோடின் பொருள்களை வாங்குபவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்ட பிறகே விற்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு மருந்துக் கடையிலும் பதிவேடு ஒன்று உள்ளது.
பிரான்சில் புகைப்பிடிப்பதற்கும், கரோனா வைரஸ் தொற்றுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்ந்த குழு ஒன்று, கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பிரான்சின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று தெரிவித்திருந்தது. " புகைப்பிடிப்பவர்களை கரோனா தொற்று பாதித்தால் அவர்களின் நிலைமை படுமோசமாகப் போவதும் உண்மையாக இருக்கிறது' என்று இதற்குப் பதில் கூறும்விதமாக, பிரான்சின் தலைமை மருத்துவ அதிகாரி கூறியிருக்கிறார். ""அது மட்டுமல்ல, கரோனா வைரஸ் தொற்று ஏற்படாதபோது, புகைப்பிடிப்பதால் மட்டுமே ஒவ்வோராண்டும் 75 ஆயிரம் பேர் பிரான்சில் இறந்துவிடுகின்றனர்'' என்கிறார் அவர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கலீசியா மற்றும் கேனரி தீவுகளில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. சாலைகள், உணவகங்கள், மதுவருந்தும் இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற "சமூக இடைவெளி'யைக் கடைப்பிடிக்க முடியாத இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. முதலில் கலீசியாவில்தான் தடை செய்தார்கள். இப்போது கேனரி தீவுகளிலும் அது தொடர்ந்திருக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஆய்வின்படி, புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கும் கரோனா தொற்றுக்கும் அதிகமான தொடர்பிருப்பது தெரிய வந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
புகைப்பிடிப்பவர்கள் பிறரை விட அதிக அளவில் இருமுகிறார்கள்; தும்முகிறார்கள். அப்போது காற்றில் பரவும் நீர்த்திவலைகள், சளியில் கரோனா வைரஸ் இருந்தால், பிறரையும் அது தொற்றிக் கொள்கிறது. புகைப்பிடிப்பவர்கள் வெளியேற்றும் புகையைச் சுவாசிப்பவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமல்ல, புகைப்பிடிப்பவர்கள் சிகரெட்டைத் தொடும்போது, அதில் கரோனா வைரஸ் இருந்தால் விரல்களில் தொற்றிக் கொள்ளும்.
மேலும் சிகரெட்டை வாய்க்குள் வைக்கும்போது கரோனா வைரஸ் வாய்க்குள் சென்றுவிடும். அது மட்டுமல்ல, புகைப்பிடிப்பதற்காக, முகக்கவசத்தை கழற்றும்போதும், திரும்பவும் மாட்டும்போதும் கைகளில் உள்ள கரோனா வைரஸ் முகக்கவசத்துக்குத் தாவ வாய்ப்புகள் உள்ளன... இப்படி புகைப்பிடிப்பதன் தீங்குகளை ஸ்பெயின் நாட்டு அரசு சொல்லிக் கொண்டே போகிறது.
புகைப்பிடிப்பவர்கள் தனியாகப் பிடிக்கமாட்டார்கள். நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு பிடிப்பார்கள்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று புகைப்பிடிப்பதைத் தடை செய்ததற்கான காரணத்தை ஸ்பெயின் அரசு சொல்கிறது.
ஸ்பெயினைப் போலவே தென் ஆப்பிரிக்காவிலும் புகைப்பிடிப்பதற்கு தடைவிதித்திருக்கிறார்கள். மது அருந்தவும் தடை விதித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...