டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஓர் கபடு வாராத  நட்பு!

எங்கோ பிறந்த இருவர் வாழ்க்கையின் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அவர்களுக்கு இடையே நட்பு பிறக்கிறது. இந்த நட்பு ஜாதி, மத, மொழி இனங்களைக் கடந்து உருவாகிறது.

News image
Updated On :21 ஜூன் 2020, 6:26 pm IST

எங்கோ பிறந்த இருவர் வாழ்க்கையின் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அவர்களுக்கு இடையே நட்பு பிறக்கிறது. இந்த நட்பு ஜாதி, மத, மொழி இனங்களைக் கடந்து உருவாகிறது. நட்பு என்ற மூன்று எழுத்து அச்சில் அவர்கள் உலகம் இயங்குகிறது.

மகாபாரதத்தில் பாசமும் நட்பும் தங்க இழையாகப் பின்னி இழையோடுகிறது. ரத்த பாசத்தையும் மிஞ்சி நிற்கும் நண்பர்கள் மகாபாரதத்தில் பலர், புராணத்திலும் பலர். 

அறியாத பருவத்தில் குருகுலத்தில் நட்பு கொண்ட சிறுவர்கள் பாஞ்சால தேசத்து இளவரசன் துருபதனும், குருவின் புதல்வன் துரோணரும். ஓடியாடிக் கல்வியில் தேர்ச்சி பெற்ற அவர்களைக் காலம் பிரித்தது. "நான் அரசனானால் பாஞ்சால நாட்டின் பாதியை உனக்குத் தருகிறேன்' எனப் பிரியும் முன்பு நண்பனுக்கு வாக்களித்தார் இளவரசன் துருபதன். 

கல்வியும் வறுமையும் இரட்டைப் பிள்ளைகளாக இருந்த காலம் அது. மகன் அஸ்வத்தாமனின் பசிக்காக நண்பனிடம் சென்று பழைய உறுதிமொழியை நினைவுபடுத்தி, "நட்பின் அடிப்படையில் ஒரு பசு மாடு தா'  என்றார் துரோணர். அதிகார போதை கண்ணை மறைக்க, "அரசனும் ஆண்டியும் நண்பர்களா? யாசகம் கேள், பசு மாடு என்ன கிராமங்களையே உனக்கு தானமாகத்  தருகிறேன்' என்றான் துருபதன்.   

Story image

அவமானப்படுத்தப்பட்ட துரோணர் சபதமேற்றுத் தன் சீடன் அர்ஜுனன் மூலம் துருபதனைச் சிறைபிடிக்க, துரோணரைக் கொல்ல மகன் வேண்டி துருபதன் யாகம் செய்ய, அவர் பெற்ற பிள்ளைதான் திருஷ்டித்யுமன். தன்னைக் கொல்லப் பிறந்த திருஷ்டித்யுமனை சிறு வயது நண்பனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக மாணவனாக ஏற்று கற்பித்த உத்தம ஆசிரியர் துரோணர். ஓர்  கபடு வாராத நட்பு...  இந்தத் துரோணர்தான் தன்னை மானசீக குருவாக ஏற்ற ஏகலைவனிடம் கட்டை விரலை கேட்டதற்காகப் பழிக்கப்படுகிறார்.. 

மகாபாரதத்தின் அச்சாணி கிருஷ்ணன் அல்ல. தனக்குத் தீங்கு இழைக்கப்பட்டதாகக் குரல் எழுப்பிக் கொண்டே இருந்த துரியோதனனைச் சுற்றித்தான் மொத்தக் கதையும் நகர்கிறது. பிறப்பின் பிரச்னையால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்த கர்ணனைத் தன் நண்பனாக ஏற்கிறான். தன் நண்பனை அங்க தேசத்து அரசனாக்கி அழகு பார்த்தான். 

துரியோதனின் நட்பு சுயநலத்தையும் தாண்டியது என்பதற்கு இரண்டு சான்றுகள் இருக்கின்றன. கர்ணனுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த மனைவி பானுமதி, கணவன் துரியோதனன் வருவதை கண்டு எழ, கர்ணன் அவளை உட்கார வைக்கும் முயற்சியில் ஈடுபட மேகலை அறுந்து முத்துகள் சிதற அவற்றை எடுக்கவோ கோர்க்கவோ என்று சொன்ன துரியோதனின் அன்பும் நம்பிக்கையும் நட்பின் உச்சமாகப் போற்றப்படுகிறது. இதில் நட்பையும் மீறி மனைவி பானுமதியின் மீது துரியோதனனுக்கு உள்ள நம்பிக்கையையும் அது காட்டுகிறது. துரியோதனன், கர்ணன் இருவரின் நட்பை விளக்க இதைவிட மற்றொரு சான்றும் மகாபாரதத்தில் உள்ளது.  

வில்லுக்கு விஜயன் என்றால், கொடைக்கு கர்ணன் என்று இன்று வரை சிலாகிக்கப்படுகிறார் கர்ணன். ஒரு தேரோட்டியின் வளர்ப்பு மகன் தானத்தை பிறவிக் குணமாக கொண்டது இறைவன் தந்த வரம். தானம் வழங்க கர்ணனுக்கு ஏது சொத்து? அவர் கொடுத்த தானம் எல்லாம் அவருடைய சொத்து அல்ல. அவருக்கு துரியோதனன் அளித்த அங்க தேசத்தின் கஜானா.  

அதாவது, கர்ணனின் கொடை துரியோதனன் கொடுத்த கொடையிலிருந்து வருவது; ஆனால், கர்ணனை மற்றவர்கள் கொடையாளி எனப் பாராட்டியபோது ஒருநாள்கூட துரியோதனன் முகம் சுளிக்கவில்லை. கம்பனின் வார்த்தையை மாற்றிச் சொல்வதானால், "என் நண்பன் பெற்ற பெயர் அடியேன் பெற்றதன்றோ' என துரியோதனன் அகமகிழ்ந்தான். ஓர் கபடு வாராத நட்பு... 

மகாபாரதத்தின் முக்கிய சூத்திரதாரியான கண்ணனின் நட்பு அலாதியானது. அவருக்கும் பள்ளிப் பருவத்தில் சுதாமா (குசேலர்) என்ற நண்பர் கிடைத்தார். கால ஓட்டம் அவர்களைப் பிரித்தது. கண்ணன் துவாரகையின் மன்னனாகி, உலகம் புகழ ஆட்சி நடத்தி  வந்தான். குசேலர் தன்னுடைய 27 குழந்தைகளுடன் கையது கொண்டு, மெய்யது பொத்தி, காலது கொண்டு, மேலது தழுவி கஷ்ட ஜீவனம் செய்து வந்தார். 

Story image

குசேலர் தன் நண்பர் கண்ணனைப் பார்க்கக் கிளம்புகிறார். நண்பரைச் சந்திக்கும்போது வெறும் கையுடன் செல்ல முடியுமா? இருக்கும் சிறிது அவலைக் கட்டித் தருகிறாள் அவர் மனைவி. குசேலனுடைய ஏழ்மை நிலையைப் பார்த்து அவரை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார் காவல்காரர். மாடத்திலிருந்து கவனித்த கிருஷ்ணனின் நட்பு நெஞ்சம் அன்பால் விம்மி குசேலரை அணைத்த கதை அனைவருக்கும் தெரியும். ஓர் கபடு வாராத நட்பு... 

கண்ணனுக்கு ஒரு குசேலர் என்றால், ஈசனுக்கு ஒரு சுந்தரர். சுந்தரரின் திருமணத்தன்று "நீ என் அடிமையென' அவரை ஆட்கொள்கிறார் இமையவான். பக்தியில் பல பாவங்கள் உள்ளன. அதில் உச்சமானது கடவுளையே நண்பராக ஏற்பது, அந்த நண்பருக்காக கடவுள் ஓடியாடி உதவுவது. இது சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை நமக்குத் தரும் பாடம். சுந்தரர் கண்ணை இழக்கிறார். குன்றில் முட்டி குழியில் விழும், நண்பருக்கு வெண்பாக்கத்தில் கம்பு கொடுத்து உதவுகிறார் சிவபெருமான். 

காஞ்சியில் "கள்ளக்கம்பன்' அவருக்கு இடது கண்ணைத் தருகிறார். சொந்த ஊரான திருவாரூர் வருகிற சுந்தரர், கண் போன வருத்தமும் ஒரு கண்ணைத் தந்து மறு கண்ணைத் தராத நண்பரின் மீது கோபமுமாய் பாடல்கள் வந்து விழுகின்றன. நல்ல நட்பின் உரிமைக்கு அந்த பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். இறைவனிடத்தில் தான் பட்ட கஷ்டங்களைச் சொல்லி,  "நீ நல்லாருப்பா' என்ற தொனியில் "வாழ்ந்து போதியே' என்று முடியும் பாடல்கள் நட்பின் - முதுமையின் உச்சம். ஓர்  கபடு வாராத நட்பு...  

உண்மையான நட்புக்கு ஜாதியும் மதமும் பொருளாதாரமும் வாழ்வின் நிலைகள் தடையல்ல. சோழ மன்னனுக்கும் பிசிராந்தையருக்கும் உள்ள நட்பு தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்தது.  

அன்பு செலுத்துபவர்களை தாய், நாய், நட்பு என மூன்றாகப் பிரிக்கலாம். ஒரு தாய் அல்லது பெற்றோர் அல்லது உறவினர் காட்டும் அன்பில் ஒரு தொப்புள்
கொடித் தொடர்பு உள்ளது.   

ஒரு நாய் எஜமானனிடம் காட்டும் அன்பும், பாசமும் நாய் வளர்ப்பவர்கள் - வளர்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இன்றைக்கு குடும்பங்கள் ஒற்றைக் குழந்தை குடும்பமாக மாறிவிட்ட சூழ்நிலையில், தனித்திருக்கும் குழந்தைகளின் மன அழுத்தத்தை மாற்ற நாய் வளர்க்க உளவியலாளர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். 

ஆனால், உண்மையான நட்புக்கு ஈடு உலகத்தில் ஒன்றுமில்லை. எங்கோ பிறந்த இருவர் வாழ்க்கையின் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அவர்களுக்கு இடையே நட்பு பிறக்கிறது. இந்த நட்பு ஜாதி, மத, மொழி இனங்களைக் கடந்து உருவாகிறது. நல்ல நண்பர்கள் குற்றம் பார்ப்பதில்லை. பிரதி உபகாரம் எதிர்பார்ப்பதில்லை. நட்பு என்ற மூன்று எழுத்து அச்சில் அவர்கள் உலகம் இயங்குகிறது.  

நல்லவன் ஆனாலும் சரி, கெட்டவன் ஆனாலும் அவர்களுக்கு என்று நட்பு வட்டம் உள்ளது. "உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரெனச் சொல்கிறேன்' என்று ஆங்கிலப் பழமொழி உண்டு. உண்மையான நண்பர்களுக்கு இடையே ரகசியங்கள் கிடையாது. அந்த ரகசியங்கள் வெளியே சொல்லப்படுவதில்லை. அதனால்தான் பட்டர் அபிராமியிடம் தனது தேவைகளைச் சொல்லும்போது "ஓர் கபடு வாராத நட்பு தேவையென' கேட்கிறார்.

கட்டுரையாளர்: மூத்த வழக்குரைஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.