பன்முகம் - பண்பட்ட உள்ளம்!

 மஹாஸ்வாமிகளின் கட்டளையை சிரமேற்கொண்டு பிரயத்தனம் செய்து ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளின் பூர்வாஸ்ரம இல்லத்தைக் காஞ்சிபுரத்தில் கண்டுபிடித்தார்.
பன்முகம் - பண்பட்ட உள்ளம்!

கலைஞர் வீயெஸ்வி பரணீதரனை "நடமாடும் சித்தர்' என்று காரணமில்லாமல் அழைத்திருக்க முடியாது. நகைச்சுவையாளர், கேலிச்சித்திர நிபுணர், மேடை நாடக ஆசிரியர், இயக்குநர், ஆன்மிகப் பயணக் கட்டுரையாளர் என்று பன்முகம் கொண்டு டி எஸ் ஸ்ரீதரன், பரணீதரன், மெரினா, சீலி போன்ற பெயர்களில் படைப்புகள் தந்தவர் பரணீதரன். "சின்ன வயதினிலே' என்கிற சுயசரிதம் எழுதியுள்ளார்.
 மஹாஸ்வாமிகளின் கட்டளையை சிரமேற்கொண்டு பிரயத்தனம் செய்து ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளின் பூர்வாஸ்ரம இல்லத்தைக் காஞ்சிபுரத்தில் கண்டுபிடித்தார். அந்த இல்லத்தை இப்போது காஞ்சி மடம் நிர்வகித்து வருகிறது.
 ஒருமுறை மஹாஸ்வாமிகளுக்கு ஒரு மர பெஞ்ச் தேவைப்பட்டபோது பரணீதரன் அதைத் தயாரிக்க உத்தரவானது. எங்கே பெரியவர் மனம் மாறி விடுவாரோ என்று உடனேயே அன்றிரவு முழுதும் அமர்ந்து ஒரு பெஞ்ச் தயாரிக்க அதைப் பெரியவர் ஏற்றுக் கொண்டார்.
 தன் புதிய மேடைநாடகத்திற்குப் பெரியவரின் ஆசி பெறச் சென்ற போது "கஸ்தூரி திலகம் லலாட படலே வக்ஷஸ்தலே கெளஸ்துபம்' (ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் - நெற்றியில் கஸ்தூரி திலகம் மார்பில் கெளஸ்துப மாலை போன்ற ஆபரணங்கள் கொண்டகோபாலன் ஆசிர்வதிக்கட்டும்) என்ற சுலோகம் சொல்லிப் பெரியவர் ஆசீர்வாதம் செய்து "மகாத்மாவின் மனைவி' நாடக ஏட்டை அவரிடம் திரும்பக் கொடுத்தார். இந்த ஸ்லோகத்தை நினைவில் நிறுத்தி அதன் தலைப்பை மாற்றிப் பின்னர் "கஸ்தூரிதிலகம்' என்கிற புத்தகமாகவும் பரணீதரன் கொண்டு வந்தார்.
 எழுத்துப்பணியில் இருந்த ஈர்ப்பின் காரணமாக வசதியான ரிஸர்வ் வங்கி வேலையை உதறி விட்டு ஆனந்தவிகடன் இதழில் சேர்ந்து சுமார் 30 வருடங்கள் பணிபுரிந்தார். 1985 -ஆம் ஆண்டு பத்திரிகையிலிருந்து ஓய்வு பெற்றாலும் நாடகப் பணி தொடர்ந்தது.
 அவருடைய தந்தை டி. என். சேஷாசலம் (1898 - 1937) ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் தன் தாய்மொழியின் மீது நீங்காப்பற்றுக் கொண்டவர். சென்னை புரசைவாக்கம் பகுதியில் வாழ்ந்தார். இவர் ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் தாய் மாமன் ஆவார். இவர் 1930- களில் மேடை நாடக ஒத்திகைகளில் ஈடுபடுவது கண்டு பரணிக்கும் மேடைப் பற்றுதல் ஏற்பட்டது. தந்தை பழகிய காமராஜர், ராஜாஜி போன்ற பெரிய மனிதர் நட்பையும் பரணீதரன் நிலைநிறுத்திக் கொண்டார்.
 அவர் "அன்பே அருளே‘ தொடரை விகடனில் தொடராக எழுதிக் கொண்டிருக்கும்போது தான் ஜனவரி 8, 1994- ஆம் ஆண்டு மஹாஸ்வாமிகள் சித்தியடைந்தார். அதன் அடுத்த அத்தியாயத்தை இப்படி பரணீதரன் உருக்கமாக ஆரம்பித்தார்:
 "சாக்கியர் கூத்தைப் பற்றித் தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது. நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களைக் குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்துவிட்டார்'.
 "கலா நிலையம்' நாடகக் குழுவை 1968 - இல் தொடங்கிய பரணீதரன் 69- இல் "தனிக் குடித்தனம்' நாடகத்தை "மெரினா' என்கிற புனைபெயரில் எழுதி அரங்கேற்றினார். பிரபல நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்புப் பெற்ற அந்த நாடகம் (அப்போதுதான் கூட்டுக் குடும்பங்கள் பிரிகிற கால கட்டம்) பல நாடக சபாக்களைக் கண்டது. "மஹாத்மாவின் மனைவி' நாடகம் ஓர் உண்மையான ரயில் கோச் தோற்றத்தை மேடையில் கொணர்ந்தது. 1979- இல் "ரசிக ரங்கா குழு' தொடங்கிய இவருக்கு 1993 - இல் தமிழக அரசின் "கலைமாமணி' விருது வழங்கப்பட்டது.
 "சாக்கியர் கூத்து' பற்றிய ஒரு சம்பாஷணை தான் அவருக்கு மஹா ஸ்வாமிகளிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஸ்வாமிகள் சொற்படி நிறைய தீர்த்த யாத்திரைகள் செய்து அந்த அனுபவங்களை "ஆலய தரிசனம்', "விகடன்' போன்ற இதழ்களில் எழுதினார். அவருடைய "அருணாச்சல மகிமை' பகவான் ரமணர் பற்றியும்திருவருணை பற்றியும் நிறைய தகவல்கள் தெரிவித்துப் பல வாசகர்களுக்குப் பக்திப் பரவசத்தை ஊட்டியது. பாடகச்சேரி ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சாய்பாபா போன்ற மஹான்கள் பற்றியும் பரணீதரன் எழுதினார்.
 காளிதாசனின் வட மொழியிலிருந்த ரகு வம்சம், ஆர். கே.நாராயணனின் "கைட்', "சுவாமி மற்றும் நண்பர்கள்' படைப்புகளைத் தமிழில் தந்துள்ளார். ஆங்கிலத்தில் "இந்தியாவின் ஆறு மஹான்கள்' என்கிற புத்தகமும் எழுதியுள்ளார்.
 திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுதும் எழுத்துப் பணியிலேயே நிறைவு கண்டவர் பரணீதரன்.
 மஹாஸ்வாமிகள் அரவணைப்பில் இருந்த அவர். ஒருமுறை தன் சகோதரர் அறுவை சிகிச்சைக்குப் பின் வயிற்று வலியால் துடிப்பது கண்டு பொறுக்காமல், அவரை ஒரு சித்தரிடம் அழைத்துப் போயிருக்கிறார். அவர் பரிகார பூஜை செய்து பிரசாதம் கொடுத்த பின் இவர் எழுத்தாளர் என்று தெரிந்து தம்மைப் பற்றி பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். இவர் கண்டு கொள்ளாமல் இருந்த பொழுது அவரைத் தனியாக அழைத்து பல சித்து வேலைகள் செய்து காண்பித்து இடையே இவர் வலது தோள் பட்டையைத் தொட்டு கையைச் சில நிமிடங்கள் செயலிழக்கச் செய்தார். பயந்து போன பரணீதரனின் கையை மீண்டும் சரி செய்து அனுப்பியிருக்கிறார்.
 சில நாட்கள் இந்த பயத்திலிருந்து வெளியே வராமல் சட்டென்று பெரியவாளை நினைவு கூர்ந்து தன் நண்பனுடன்அவரைப் பார்க்க காரில் சென்றார். மஹாஸ்வாமிகள் அப்போது தமிழ்நாடு-ஆந்திர எல்லைப்பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அர்த்தராத்திரியில் பெரியவரின் சைக்கிள் கூண்டுவண்டியைக் கண்டு அணுகியபோது "ஸ்ரீதர் வந்திருக்கானா'' என்று அபயக் குரல் கொடுத்து பெரியவர் அவரைக் கூப்பிட நடந்தது அனைத்தும் சொல்லியிருக்கிறார். அவர் "ஏன் பயப்படறே? அவரால உன்னை என்ன பண்ண முடியும்?'' என்று ஆறுதல் சொல்லி அன்று இரவே திருப்பி அனுப்பினார். அதன் பிறகு எந்த பயமும் அவரை அண்டவில்லை.
 பரணீதரன் காஞ்சி மஹாஸ்வாமிகளின் பரிபூரண அருள்பெற்றவர் என்பதற்கு ஓர் உதாரணம்:
 1961- ஆம் வருடத்திய விகடன் தீபாவளி மலருக்கான காஞ்சி மட பீடாதிபதியின் ஆசிச் செய்தி பெற்று வர பரணீதரன் மஹாஸ்வாமிகளைச் சந்தித்த போது "இந்த வருஷம் நீயே எழுதிடு'' என்று மஹான் சொல்லிவிட்டார். பரணீதரன் தயக்கம் காட்டியும் அவர் மசியாததால் இளையாத்தங்குடி பெரியவர் அதிஷ்டானத்தில் அமர்ந்து பரணீதரன் பெரியவர் நடையில் அன்பைப் பொழிந்து ஏதோ எழுதினார். அதைப் பெரியவர் ஒப்புதலுக்குக்காட்டியபோது "அக்ஷர லக்ஷம் பெறும்'' என்று பெரியவாள் பாராட்டி அனுப்பினார். "அன்பின் சக்தி' என்னும் தலைப்பில் வெளியான அந்தச் செய்தியின் ஒரு முக்கியமான பத்தி இதோ:
 நாட்டில் தற்போது ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஒற்றுமை என்பது, வேற்றுமை பாராட்டாமல் இருப்பது அல்ல. "வேற்றுமையே கிடையாது' என்று தெளிவதுதான் அது. பரம்பொருள் ஒன்றுதான் உண்டு. அதைத் தவிர, வேறு வஸ்து தனியாகக் கிடையாது. அந்தப் பரம்பொருளைப் பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லாரையும் சேர்த்து வைக்கக் கூடியது. மதமும், பக்தியும், எல்லாரும் ஒன்றாக வாழ்ந்து சந்தோஷமாக இருக்க ஏற்பட்டவை. ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு துன்பப்பட அல்ல. "
 - ஸ்ரீதர் சாமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com