'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 84

நடராஜனின் அவசரம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எந்தவொரு பிரச்னையையும் முன்கூட்டியே உணர்ந்து செயல்படும் திறமை
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 84

நடராஜனின் அவசரம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எந்தவொரு பிரச்னையையும் முன்கூட்டியே உணர்ந்து செயல்படும் திறமை அவருக்கு உண்டு என்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். 1987-இல் எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு முதல்வரான ஜானகி ராமச்சந்திரன் தில்லிக்கு வந்ததும், அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை நடராஜன் தில்லிக்கு அழைத்து வந்ததும் நான் அருகிலிருந்து பார்த்த நிகழ்வுகள்.

யாருமே எதிர்பார்க்காத விதத்தில், ஜெயலலிதா வெஸ்டர்ன் கோர்ட்டுக்குச் சென்று ஜி.கே. மூப்பனாரைச் சந்தித்தது, ம. நடராஜனின் அரசியல் சாதுர்யத்துக்கு எடுத்துக்காட்டு. அந்த சந்திப்பின் விளைவாகத்தான், தமிழக சட்டப்பேரவையில் ஜானகி அமைச்சரவைக்கு எதிராகக் காங்கிரஸ் வாக்களிக்கத் தீர்மானித்தது என்பது அன்றைய அரசியலில் இருந்தவர்கள் பலருக்கும் தெரியும்.

நடராஜனின் வலையில் சுப்பிரமணியன் சுவாமி விழவில்லை என்பது வேறு விஷயம். 

சுப்பிரமணியன் சுவாமி - ஆளுநர் சென்னா ரெட்டி சந்திப்பு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை சட்டெனப் புரிந்துகொண்டு, காயை நகர்த்தத் தொடங்கிவிட்டார் நடராஜன். 

சுப்பிரமணியன் சுவாமியைப் பற்றி ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். அவரை சந்தித்திருக்கிறேன், பேசி இருக்கிறேன், பேட்டி எடுத்திருக்கிறேன் என்பது அல்லாமல் அவருடன் மிக நெருக்கமாக நான் பழகியதில்லை. அதே நேரத்தில் அவரது அரசியல் பேராற்றலையும், தொடர்புகளையும் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கிறேன். 

கடந்த அரை நூற்றாண்டு சுதந்திர இந்திய வரலாற்றை சுப்பிரமணியன் சுவாமியை அகற்றி நிறுத்தி யாரும் எழுதிவிட முடியாது. கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவைத் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பதவி விலக வைத்தது; சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சிக்க வைத்து தண்டனை வாங்கிக் கொடுத்தது; 2ஜி வழக்கில் ஆ. ராசாவும், கனிமொழியும் சிறை செல்ல நேர்ந்தது - இதுபோன்ற பல நிகழ்வுகளின் பின்னணியில் சுவாமி இருந்திருக்கிறார். ஊடகங்களும், புலனாய்வு அமைப்புகளும் சாதிக்க முடியாததை எல்லாம் தனி மனிதராக, சட்டத்தின் துணையோடு நீதிமன்றத்தில் போராடி அவரால் சாதிக்க முடிந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சென்னையில் பிறந்து, தில்லியில் படித்த தமிழர் ஒருவர், தமிழர்களுக்கு எதிரான சிவசேனையின் கோட்டை என்று அழைக்கப்படும் பம்பாயில் (இன்றைய மும்பை), மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா? ஜனசங்கத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, 1977-இல் ஜனதா கட்சி வேட்பாளராக மும்பை வடகிழக்குத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவர் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

1977, 1980 தேர்தல்களில் மும்பை வடகிழக்குத் தொகுதியில் சுப்பிரமணியன் சுவாமியும், மும்பை வடமேற்குத் தொகுதியில் பிரபல வழக்குரைஞர் ராம் ஜெத்மலானியும் வெற்றி பெற்றது தேசிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஜனதா கட்சி வெற்றிகள். ஒருபுறம் மராத்திய உணர்வு பேசப்பட்டாலும், பிற மாநிலத்தவர்கள் மும்பையில் வெற்றி பெற முடிந்தது என்பது அந்த மாநகரின் பரந்த அரசியல் பார்வைக்கும், தேசிய சிந்தனைக்கும் எடுத்துக்காட்டு.

அவசரநிலைச் சட்டக் காலம். முக்கியமான எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவசரநிலை அறிவிக்கப்படுவதை மோப்பம் பிடித்துவிட்ட சுப்பிரமணியன் சுவாமி, அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார். அவசரநிலைக் காலத்தில் நாடாளுமன்றம் கூடியது. சுவாமிக்கு எதிராகப் பிடிவாரண்ட் அறிவிக்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவில் இருக்கும் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

பிரதமர் உள்பட ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் வியப்பில் திகைக்க வைக்கும் விதத்தில் சுப்பிரமணியன் சுவாமி மாநிலங்களவைக்கு வருகை தந்தார். யாருமே எதிர்பார்க்கவில்லை. அதைவிட ஆச்சரியம், அவரைக் கைது செய்ய வெளியே காத்திருந்த காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சுவாமி மாயமாய் மறைந்து அமெரிக்காவுக்கு மீண்டும் பறந்ததுதான். 

இந்திரா காந்தி அரசால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அவசரநிலை அகற்றப்பட்ட பிறகு தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய சுப்பிரமணியன் சுவாமி மும்பையில் ஆஜரானபோது, அவர் ஒட்டுமொத்த இந்தியாவின் ஹீரோவாக உயர்ந்துவிட்டார். 

சுப்பிரமணியன் சுவாமியின் ஆற்றல் எத்தகையது என்பதை ம. நடராஜன் உணர்ந்த அளவுக்கு ஏனோ முதல்வர் ஜெயலலிதா புரிந்துகொள்ளவில்லை. ஜெயலலிதா மட்டுமல்ல, திமுக தலைவர் கருணாநிதியும் தெரிந்துகொள்ளவில்லை. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 356-இன் கீழ் மாநில ஆட்சியைக் கலைக்க முடியும் என்பதை அன்றைய பிரதமர் சந்திரசேகருக்கு எடுத்துக்கூறி, 1990-இல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரைத்தவர், அப்போது சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. 

திமுக ஆட்சிக் கலைப்புக்குப் பிறகு டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்குத் தமிழக பத்திரிகைகள் மரியாதை கொடுக்கத் தொடங்கி இருந்தன என்றாலும், அவர் பிராமணர் என்பதால் ஒருவித ஏளனத்துடன்தான் பல பத்திரிகையாளர்கள் அவரைப் பார்த்தனர். ஜெயலலிதா எதிர்ப்பு பத்திரிகைகளுக்கு அவரது பேட்டிகள் பரபரப்புக்கு உதவின என்பதால், அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்தனவே தவிர, அவரை யாரும் "சீரியசாக' எடுத்துக்கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் கவலைப்படவும் இல்லை.

ஆளுநர் மாளிகையில் நடந்த சுப்பிரமணியன் சுவாமி - சென்னா ரெட்டி சந்திப்பு மட்டும்தான் வெளியே தெரிந்தது. பரபரப்பை ஏற்படுத்தியது. சுப்பிரமணியன் சுவாமி - நடராஜன் சந்திப்பும், நடராஜன் - சென்னா ரெட்டி சந்திப்பும் வெளியில் தெரியாமலே நடந்தது. அவை எங்கே, எப்படி, எப்போது நடந்தன என்பது எனக்குத் தெரியுமே தவிர, அந்தச் சந்திப்புகளில் நான் இருக்கவில்லை என்பதால் அவை குறித்த எதுவும் பதிவு செய்ய விரும்பவில்லை.

பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் மூலம் தன்னை உடனே வந்து சந்திக்கும்படி தகவல் அனுப்பி இருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி. அவரது சாஸ்திரி நகர் வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தேன். நான் உட்காருவதற்குள் அவர் பேசத் தொடங்கினார்.

"என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? நடராஜன் சுவாமியை சந்தித்தாராமே. என்ன பேசினார்கள்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?''

"என்ன நடக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கென்ன தெரியும்? சுவாமியை மட்டுமல்ல, ஆளுநர் சென்னா ரெட்டியையும்தான் நடராஜன் சந்தித்திருக்கிறார். நீங்களும்தான் ஆளுநர் சென்னா ரெட்டியைச் சந்தித்ததாகச் சொன்னார்கள். அவர் என்ன சொல்கிறார்?''

"அது ஊரறிந்த ரகசியம்தானே... ஜெயலலிதா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கேட்டிருப்பதாகப் பத்திரிகைகளிலேயே கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்களே. அதைத்தான் அவரும் சொன்னார். அந்த அம்மாவின் அனுமதியுடன்தான் சுவாமியையும், சென்னா ரெட்டியையும் நடராஜன் சந்தித்தாரா? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.''

"இதற்கு என்னிடம் கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? உங்களுக்கும் போயஸ் கார்டனுக்கும்தான் தொடர்பு. நீங்கள்தான் அதை முதல்வரிடம் கேட்க வேண்டும். அவர் என்ன சொன்னார் என்பதை எனக்கும் சொல்லுங்கள்.''

"உங்களிடம் நடராஜன் ஏதாவது சொல்லி இருப்பார் என்று நான் எதிர்பார்த்தால் நீங்கள் பந்தை என்னிடமே அடிக்கிறீர்கள். அந்த "அம்மா' காங்கிரûஸயும், பிரதமரையும், சென்னா ரெட்டியையும் பகைத்துக் கொள்வதுகூடத் தவறில்லை. சுவாமியைப் பகைத்துக் கொள்வது, அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தைத் தேடித் தரப் போகிறது.''

முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், தேவே கெüடா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடனும், ஜஸ்வந்த் சிங் போன்ற பாஜக தலைவர்களுடனும் முதல்வர் ஜெயலலிதா தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பிரதமர் நரசிம்ம ராவ் விரும்பவில்லை என்கிற தகவலைத் தெரிவித்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. இரவு பத்து மணிக்கு மேல்தான் நான் சாஸ்திரி நகரிலிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன்.

அப்போது எனது வீடு அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் இருந்தது. எனது வீட்டுக்கு அருகில்தான் அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேசத்தின் விருந்தினர் மாளிகை இருந்தது. அப்போது அந்தமானின் துணைநிலை ஆளுநராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் வைக்கம் புருஷோத்தமன்.

கேரள அரசியலுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததால், வைக்கம் புருஷோத்தமனை எனக்கு முன்பே தெரியும். அந்தமானிலிருந்து கேரளா செல்லும் வழியில் துணைநிலை ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் சென்னை அந்தமான் ஹெüசில் தங்கிச் செல்வது வழக்கம். அப்படி வரும்போதெல்லாம், எனது வீடு அருகில் இருப்பதால் தகவல் அனுப்பி வரச் சொல்வார். அதேபோல, 
அப்போதும் அவர் வந்திருப்பதாகவும், என்னை வரச் சொன்னதாகவும் 'அந்தமான் ஹெüஸ்' ஊழியர் ஒருவர் வீட்டுக்கு நேரில் வந்து தெரிவித்தார்.

நான் போயிருந்தபோது, துணைநிலை ஆளுநர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்த நாளிதழ்களைப்  புரட்டிக் கொண்டிருந்தேன். அவரது "ஏடிசி' (ஆளுநர்களின் பாதுகாப்பு அதிகாரி) நான் வந்திருப்பதைத் தெரிவித்ததும் வைக்கம் புருஷோத்தமன் என்னை உள்ளே அழைத்தார்.

"உங்களுக்கும் தெரிந்த இரண்டு முக்கியமான பிரமுகர்கள் இப்போது இங்கே வரப்போகிறார்கள்'' என்று மலையாளத்தில் சொன்னபடி என்னை வரவேற்றார் வைக்கம் புருஷோத்தமன்.

1970 முதல் தொடர்ந்து 14 ஆண்டுகள் கேரள சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்; அமைச்சராகவும், கேரள சட்டபேரவைத் தலைவராகவும் இருந்தவர்; பிற்காலத்தில் மக்களவை உறுப்பினராகவும், திரிபுரா, மிஜோரம் ஆளுநராகவும்கூட இருந்த வைக்கம் புருஷோத்தமன் சில நாள்கள் 2006-இல் முதல்வர் பொறுப்பை இடைக்கால நிலையில் வகித்திருக்கிறார்.

நாங்கள் சில நிமிடங்கள் பொது விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும்போதே, வெளியே சலசலப்பு கேட்டது. உள்ளே வந்த இரண்டு பிரமுகர்களையும் பார்த்து, எழுந்து நின்ற நான் திகைத்தேன். கேரள முதல்வர் கே. கருணாகரனுடன் வந்திருந்தவர் ஜி.கே. மூப்பனார். அப்போது அவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த நேரம்.

என்னைப் போலவே, அவர்களும் என்னை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. வழக்கமான "ஹா...' என்கிற உற்சாகக் குரலுடனும், சிரிப்புடனும் வந்தமர்ந்தார் முதல்வர் கருணாகரன். பொதுவான விஷயங்களை அவர்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். மூப்பனார்தான் பேச்சைத் திரும்பினார் - என்னைப் பார்த்தபடி.

"சுப்பிரமணியன் சுவாமி - நடராஜன் சந்திப்பில் என்ன நடந்தது, தெரியுமா உங்களுக்கு?''

"சந்தித்தார்கள் என்று தெரியும். என்ன பேசினார்கள் என்று தெரியாது. சுவாமி திட்டமிட்டுக் களமிறங்கி இருக்கிறார் என்று தெரிகிறது. அதன் பின்னணிதான் தெரியவில்லை.''

மூப்பனார் எதுவும் பேசவில்லை. துணைநிலை ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் கருணாகரனிடம் திரும்பினார்.

"லீடர் என்ன சொல்கிறீர்கள்? இதற்குப் பின்னணி எதுவும் இருக்கிறதா?''

"ஜெயலலிதாஜி தவறு செய்கிறார். நரசிம்ம ராவ், சென்னா ரெட்டி, சுப்பிரமணியன் சுவாமி என்று அரசியல் அனுபவசாலிகளுடன் மோதுவது அவருக்கு நல்லதல்ல. அவர் அடக்கி வாசித்து, சமாதானமாகப் போகாவிட்டால் பெரிய பிரச்னைகளில் மாட்டிக் கொள்ளப் போகிறார் என்று நான் நினைக்கிறேன்.''

நான் முதல்வர் கருணாகரனிடம் சிறு பிள்ளைத்தனமாக ஒரு கேள்வி கேட்டேன்.
"சுப்பிரமணியன் சுவாமியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

முதல்வர் கருணாகரன் சொன்ன பதில் - "புத்தி ராட்சசன்!''

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com