யார் கேட்டாலும்   சொல்லிடாதீங்க!

""பிரயாணத்தில், எனக்கு என்ன தேவைன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கில்ல?'' - மனைவி காதோடு, வழக்கமான கடுமை தோய்ந்த குரலில் கட்டளையிட்டாள். 
யார் கேட்டாலும்   சொல்லிடாதீங்க!
Updated on
5 min read

""பிரயாணத்தில், எனக்கு என்ன தேவைன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கில்ல?'' - மனைவி காதோடு, வழக்கமான கடுமை தோய்ந்தகுரலில் கட்டளையிட்டாள்.
கட்டளையின் இலவச இணைப்பாக, பற்களை நறநறவென்று கடிக்கும் சத்தமும் கேட்டது.
ரயிலுக்கும், பஸ்ஸிற்கும் அவளுடன் காத்திருக்கும் தருணங்களில், இந்த மாதிரி கட்டளைகளும், கடி(டு)ப்புகளும் எனக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.
""அது எப்படி மறக்கும்... அதற்காகத்தானே, நான் இந்த மனித பிறவியே எடுத்திருக்கேன்!''
""பேசுவதை குறைச்சுக்கிட்டு, காரியத்தில் கண்ணா இருங்க.''
காரியத்தில் கண்ணை பதிக்க, ரயில்வே பிளாட்பாரத்தில் சற்று முன்னோக்கி நகர்ந்து, புக் செய்திருந்த ரயில் கம்பார்ட்மென்ட் எந்த பிரதேசத்தில் வந்து
நிற்கும் என்று அறிய முயற்சி செய்தேன்.
அதே சமயத்தில், என் விதியை பற்றி விளக்கிச் சொல்ல, கால அளவில், நான் சற்று பின்னோக்கி நகர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது.
திருமணம் முடிந்தவுடன், மாமனார், டவல் ஒன்றை வெற்றிலை பாக்குடன் சேர்த்து தட்டில் வைத்து,
அத்துடன் ஒரு விநோத கோரிக்கையையும் முன் வைத்தார்.
""கிளி மாதிரி வளர்த்த என் பொண்ணை கண் கலங்காமல் பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு மாப்பிள்ளை''
""அந்த கிளிக்கு என்ன பழம் ரொம்ப பிடிக்கும்னு சொல்லிடுங்க'' என்றுதான் கேட்க நினைத்தேன். ஆனால், முதல் பேச்சிலேயே மொக்கை போட வேண்டாம் என்று முடிவு செய்து, கேள்வியை மாற்றினேன்.
""அதற்கு நான் என்ன செய்யணும் மாமா?'' நான் இந்தக் கேள்வியை கேட்காமல் இருந்திருந்தால், என் விதியே மாறியிருக்கும்.
""அப்படி புத்திசாலித்தனமா கேளுங்க... நீங்க எங்கே இந்த கேள்வியை என்னிடம் கேட்காமல் இருந்துடுவீங்களோன்னு பயந்துட்டேன்!''
""வெங்காயத்தை உரிக்க சொல்லக் கூடாதா?... இல்ல., அதை உரிக்கும்போது, கண்களிலிருந்து வழியும் கண்ணீரை இந்த டவலால் துடைத்து விடணுமா?''
""ஹும்... சொன்னால் சிரிக்க மாட்டீங்களே?''
அவருடைய பெண்ணிற்கு நிலா காட்டி, சாப்பாடு ஊட்டச் சொல்வாரோ? ஊகத்தை, மண்ணுக்கும், விண்ணுக்கும், இடையே ஓட விட்டேன்.
""ஓடிப் போய்தான் பிடிக்கணும்னு அவசியம் இல்லை''
""நடுவில கொஞ்சம் வார்த்தைகளை காணோம் மாமா... எதைப் பிடிக்கணும்னு சொல்றீங்க?''
""காணோம்ங்கறதை கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே... நான் பேசும்போது, அப்படித்தான், நடுவில் கொஞ்சம் வார்த்தைகளை சாய்ஸில் விட்டுடுவேன். விட்டுப் போன வார்த்தைகளை யூகிக்க, தலையை அழுத்தமாகச் சொரிந்து, சொரிந்து, என் கூட பேசுபவர்களுக்கு சீக்கிரம் வழுக்கை விழுந்துடும். வழுக்கை விழுந்தவங்க யாரா இருந்தாலும், அவுங்க என் கூட பல தடவை பேசிய வாய்ப்பை பெற்றிருப்பாங்கன்னும் வச்சுக்கலாம்''
""ஐயோ மாமா... எனக்கு இப்பவே கண்ணை கட்டுதே. எதைத்தான் பெருமையா பேசணுங்கற விவஸ்தையே இல்லாம போச்சு... அது வாய்ப்பு இல்லை... விதியா இருக்கும். என் தலை முடி காலியாவதற்குள், ஒரு செல்பி எடுத்துக்கறேன்''
""எங்க குடும்பத்தில் என்னை மாதிரிதான் மற்றவங்களும்னா, பார்த்துக்கோங்களேன்!''
""நான் இப்ப உங்களை மட்டும்தான் பார்க்கிறேன்... மற்றவங்களும் ஒரு மாதிரிதானா?'' -
- ஃபர்ஸ்ட் லுக்கே, முடியை பறிக்குதுன்னா மற்றவை எப்படியோ என்ற பயத்துடன் கேட்டேன்.
""பயப்படாதீங்க மாப்பிள்ளை... உங்க அத்தை, வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளிடம் கஷ்டமான ஒரு கணக்கை கொடுத்து, விடை கேட்பா... தெரியலைன்னா, தலையில் ஓங்கி ஒரு குட்டு வைப்பா. ஸ்கூல் டீச்சரா இருந்தவளாச்சே... அதான்!''
""உங்க குடும்பத்தில் எல்லோரும், மற்றவங்க தலையையே குறி வைக்கறாங்களே... அப்புறம் உங்க பொண்ணோட விசித்திர குணத்தைப் பற்றி சொல்லுங்க. என் பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்காதீங்க''
வார்த்தைகளைத் தேட வைக்கிறவருடைய பொண்ணு எதைத் தேட வைப்பாளோ என்ற பயம் என்னை தொற்றிக் கொண்டது.
""என் பொண்ணு, ஜன்னல் சீட்டில் உட்கார்ந்துதான் செல்பி எடுத்துக்கணும்னு ஆசைப்படுவா''
""சில வார்த்தைகளுக்கு பதிலா, இப்ப ஒரு பத்தியே மிஸ்ஸிங்... ஒரு தம் பிடிச்சு, முழுசா சொல்லுங்க மாமா'
""ஆடிக்கு ஒரு தடவை..அமாவாசைக்கு ஒரு தடவை, வார்த்தைகளை முழுங்காமல் முழுசா பேசி, மயக்கம் போட்டுடுவேன்''
முதல் முறையாக, அழுகுன்னி ஆட்டம் ஆடாமல் பேசினார்.
""இன்றைக்கு அமாவாசைதான்... ஒரு தடவை முயற்சி பண்ணுங்க மாமா''அவரிடம் வார்த்தை பிச்சை கேட்டேன்.
ஏதோ கிணற்றில் குதிப்பது போல், குல தெய்வத்தைக் கும்பிட்டுவிட்டு, ஒரு பாட்டில் தண்ணீரை என்னிடம் பாதுகாப்பாக ஒப்படைத்த பிறகு, ஒரே மூச்சில் அவர் விவரம் சொல்ல ஆரம்பித்தார். அந்த தண்ணீரை, முகத்தில் அடித்துதான், அவருடைய மயக்கத்தை தெளிய வைக்க வேண்டும் என்று அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று எனக்குப் புரிந்தது.
""சின்ன வயசிலிருந்தே, அவளுக்கு ஜன்னல் சீட்டுன்னா உயிர்... அந்த சீட்டு கிடைக்கலைன்னா, அந்நியனா மாறிடுவா. நாங்க குடியிருந்த வீடுகளில், ஜன்னல்கள் குறைச்சலா இருந்ததால், அங்கங்கே சுவரை இடிச்சு, நிறைய ஜன்னல் வச்சதில், வீட்டு ஓனர்கள் எங்க மேல வழக்கு போட்டுட்டாங்க. அந்த வழக்குகள் எல்லாம் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. ஸ்கூல் படிக்கும்போது, ஸ்பெஷலா ஃபீஸ் கட்டித்தான், வகுப்பில் ஜன்னல் ஓர சீட்டை பிடிச்சேன். ஆனால், அவளுடைய அதிர்ஷ்டம் பாருங்க. பிரயாணத்தின் போது, முன்கூட்டிய ரிசர்வேஷனில் கூட, ஜன்னல் சீட் கிடைப்பதில்லை. அவளுக்கு, ஜாதகத்தில் ஜன்னல் தோஷம் இருப்பதாக ஜோசியர் சொல்லிட்டார். அதற்கு பரிகாரமே கிடையாதாம். ஆகவே, எங்கே போனாலும்,
அவளுக்கு ஒரு ஜன்னல் சீட் எப்படியாவது ஏற்பாடு பண்ணிடுங்க'' ஒரே மூச்சில் பேசியதால், மயங்கி விழுந்தார்.
""வெற்றிலை பாக்கோடு ஒரு டவல் கொடுத்தீங்களே... அது எதற்கு?'' தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்த பிறகு சந்தேகம் கேட்டேன்.
""போடத்தான்'' என்றார்.
""ரொம்ப சோதிக்காதீங்க... இன்னும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க... நான் கண்டு பிடிச்சுக்கறேன்..''
""சீட்டுக்கு''
""ஓ... ஜன்னல் சீட்டுக்கு துண்டு போடவா... பூ இவ்வளவுதானா?''
விடுபட்ட வார்த்தைகளை ஃபில் அப் செய்யும் அளவுக்கு குறுகிய இடைவெளியில், நான் டிரெயின் ஆகி இருந்தேன்.
""கரெக்ட்'' என்று அம்பயர் போல் விரலை உயர்த்தி, என் கையை அவர் தலை மீது எடுத்து வைத்துக் கொண்டார். அவுங்க குடும்ப வழக்கப்படி, அதுதான் சத்தியம் வாங்குற வழி முறையா இருக்கும் போல!
""பூ... இவ்வளவுதானா?'' என்று சொல்லிவிட்டேனே தவிர, போகப் போகத்தான் அதன் கொடுமை புரிந்தது.
டவுன் பஸ்ஸிலிருந்து, சதாப்தி எக்ஸ்பிரஸ் வரை,
ஜன்னல் சீட்டை விட்டுக் கொடுக்க, இந்த பூ உலகில் யாரும் தயாராக இல்லை என்பது எனக்குப் போக போகத்தான் புரிந்தது. இது வாழ்க்கை ஒப்பந்தம் என்பதால், நானும் விடுவதாக இல்லை.
ஆபீஸ், வீடு என்று எல்லா இடங்களிலும், அந்த டவல்தான் எனக்கு துணை நின்றது.
ஓடிப் போய், ஜன்னல் ஓர சீட்டுகளில், துண்டு போட்டு ரிசர்வ் செய்யும் வித்தையை கற்றுக் கொள்ள, ஆபீஸ், வீடு போன்ற எல்லா இடங்களிலும், கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். அந்த மாதிரி பயிற்சிகளின் போது, ஒரு சமயம், ஆபீஸில் ஜன்னல் பக்கத்தில் புதிதாக போடப்பட்டிருந்த காலி சீட்டில், தூரத்திலிருந்து டவலை எறிந்து, வெற்றிக் களிப்போடு அதை நெருங்கினேன்.
""சீட்டைப் பறித்தால், சீட்டை கிழிச்சுடுவேன்'' என் பின்னாலிருந்து ஒரு கம்பீர குரல் கேட்டதும் திரும்பி பார்த்தேன்.
""வாஸ்துபடி, ஜன்னல் ஓரமா உட்கார்ந்து ஆட்சி புரிய, இப்பத்தான் சீட்டை மாற்றினேன். அதற்குள், ஆட்சி பறிப்பு முயற்சியா? இது ஆபீஸ் துரோக குற்றம்'' என்று புது மானேஜர், அரசியல் பாணியில் கர்ஜித்ததை, அசடு வழிய வாங்கி கட்டிக் கொண்டேன்.
இந்த உலகில் ஜன்னல் சீட் ரசிகர்கள் ஏராளம் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த மாதிரி நிகழ்ச்சிகள் எனக்கு பெரிதும் உதவின. மருத்துவ கல்லூரி சீட்டைக் கூட விட்டுக் கொடுக்க ஆட்கள் இருப்பாங்க போல. ஆனால், ஜன்னல் சீட்டை விட்டுக் கொடுக்க யாரும் தயாரில்லை என்பது சீக்கிரமே புரிந்து விட்டது.
ஒரு முறை, மூச்சு முட்டும்படியான கூட்டம் இருந்த டவுன் பஸ்ஸில், ஜன்னல் சீட்டு பிடிக்க வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
""எந்த சலுகையும் கிடையாது. ஜன்னல் சீட் பிடிச்சுதான் ஆகணும்'' என்ற கட்டளை, வழக்கம் போல் காது ஓரமாக கடிக்கப்பட்டது.
வேறு வழி தெரியாமல், ஓவர் லோடில், டிக்கெட் கொடுக்க பஸ்ûஸ நிறுத்தியபோது, கண்டக்டரிடம் சரண் அடைந்து, என்னுடைய கஷ்டத்தை, காதோடு சுருக்கமாக விவரித்தேன்.
பரிதாபப்பட்ட அவர், கருணை அடிப்படையில், டிரைவரிடம் என்னுடைய கோரிக்கையை பரிந்துரைத்தார். உதவிக்கு கைமாறாக, 500 ருபாய்க்கு சில்லறை கொடுப்பதாக ஒப்பு கொண்ட பிறகு, "ஆபரேஷன் ஜன்னல் சீட்'
துவங்கியது.
""பஸ் பிரேக் டவுன்...எல்லோரும் கீழே இறங்கி பஸ்ûஸ தள்ளுங்க... உட்கார்ந்திருக்கறவங்க நிச்சயம் கீழே இறங்கி ஆகணும். அதிலும் ஜன்னல் சீட்டுக்காரங்க நிச்சயமா இந்த ஆபரேஷனில் கலந்துக்கிட்டு ஆகணும்'' என்று லாகவமாக ராணுவ பாணியில் அறை கூவல் விடப்பட்டது.
அப்படியும், ஒரு ஜன்னல் சீட்டுக்காரரை தவிர, மற்ற ஜன்னல் சீட்டுக்காரர்கள் எழுந்திருக்க தயாராக இல்லை. அந்த ஒரு ஜன்னல் சீட், அன்று என் மானத்தை காப்பாற்றியது.
மற்றொரு முறை, எலெக்ட்ரிக் டிரெயினில் ஏக கூட்டம். இருவர் உட்கார வேண்டிய சீட்டுகளில், அட்ஜெஸ்ட் செய்து மூவர் உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.
""அங்கே உட்கார்ந்தாகணும்'' ஜன்னல் சீட்டை காட்டி, மனைவி சாமியாட ஆரம்பித்தாள்.
""ஏதோ கை காட்டி, ஆவேசமா என்ன சார் சொல்றாங்க?'' ஜன்னல் சீட் காரர், சற்று பயத்தோடு கேட்டார்.
""ஆறு கிரகங்கள் சேர்ந்து, ராகுவை பார்க்கும் சூழ்நிலையில், ராசிப்படி இன்றைக்கு இவுங்க யாரைப் பார்த்தாலும், அவுங்களுடைய செல்வத்திற்கு பாதகம் ஏற்படும்னு எச்சரிக்க சொல்றாங்க!''
சொல்லி முடிப்பதற்குள், ஜன்னல் சீட்காரர் உள்பட, அங்கிருந்த அனைவரும், கோடிக்கணக்கான (?) தங்கள் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ள, சீட்டுகளை காலி செய்து, வேறு இடத்திற்கு ஓட்டம் பிடித்தனர்.
ஜோசியம் என்ற பெயரில், யார் எது சொன்னாலும், நம்புவர்கள் இருக்கும் வரை, என்னுடைய பிரச்னையை ஏதாவது ஒரு வழியில் சமாளித்து விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் இப்படித்தான் வளர்ந்தது.
மனைவியின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க, பல வருடங்களாக இந்த மாதிரி டிரென்டிங்காக
ஏதாவது ஒரு நாடகம் ஆடி, ஜன்னல் சீட்டைக் கைப்பற்றும் சாகசங்களை அரங்கேற்றுவதில் எனக்கு கொஞ்சம் சலிப்பு தட்ட ஆரம்பித்தது. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று என் தலையிலேயே அடித்து, புது வருட சபதம் மேற் கொண்டேன்.
அந்த சலிப்பு கம் சபத கட்டத்தை கடந்து கொண்டிருக்கும் போதுதான், மீண்டும் இந்த ரயில் பயணம்.
ரயில் நிற்கும் இரண்டு நிமிட இடைவெளியில், கம்பார்ட்மென்ட்டைக் கண்டுபிடித்து உள்ளே புகுந்தது பெரிது இல்லை. ஜன்னல் சீட் பிடித்து நான் ஒரு இமாலய சாதனை புரிந்தாக
வேண்டும்.
சோதனையாக, அன்று சுற்றுலா செல்லும் பள்ளிக் குழந்தைகள், அந்த கம்பார்ட்மென்ட் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அவர்களுக்குள், ஜன்னல் சீட்டுக்கு அடிதடி சண்டை நடந்து கொண்டிருந்தது.
""நீ அரை மணி நேரம்... அவன் அரை மணி நேரம் உட்காருவீங்களாம்'' என்று ஆசிரியர், கூட்டணி கட்சிகளுக்குள் முதல் அமைச்சர் பதவி பங்கீடு போல், சண்டை பார்ட்டிகளுக்குள் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார்.
என்ன செய்து காரியத்தைச் சாதிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, தினசரியில் ஏதாவது டிரென்டிங் செய்தி உள்ளதா என்று நோட்டம் விட்டேன்.
காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில், சூரிய கிரகணத்தன்று, அனைத்து பெண்களும், வாட்ஸ்அப் மூலம் பரவிய செய்தியின் அடிப்படையில், தங்கள் கணவன்மார்களின் ஆயுள் நீடிப்பு கருதி, வீட்டிற்கு முன்பு, பெரிய அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டார்கள் என்ற செய்தி கண்ணில் பட்டது. கணவன் மனைவிக்குள் எவ்வளவு சச்சரவுகள் இருந்தாலும், கணவனுக்கு நீடித்த ஆயுளை வேண்டுவது நம் பெண்களின் பண்பாடு என்பதுதான் இந்த செய்தியின் சாராம்சம் என்று எனக்குப் புரிந்தது.
நான் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, மனைவியின் முகம் இறுக்கமாகிக் கொண்டு
வந்ததைப் பார்க்க முடிந்தது. அது கூக்குரலாக உருவெடுப்பதவற்கு முன்பு, ஏதாவது செய்தாக
வேண்டும்.
""உன்னால் முடியும்'' என்று என் மூளை ஆராய்ச்சி மணி அடித்தது. அங்கு நிலவிய கூச்சல் குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, மனைவியிடமிருந்து சற்று விலகி, ஓரமாக ஒதுங்கி செயலி(யி)ல் இறங்கினேன்.
அடுத்த சில நொடிகளில், தன் கையில் வைத்திருந்த மொபைலில் டொங் என்று வந்து விழுந்த வாட்ஸ்அப் செய்தியை உற்று பார்த்த மனைவி, ""என்னங்க... ஆபத்து'' என்று அலறினாள்.
""ஏன்..என்ன ஆச்சு?'' வியப்பை வலுக்கட்டாயமாக கூட்டணி சேர்த்து கேட்டேன்.
""உங்க ஆயுள்தான் எனக்கு முக்கியம்''
என்றவள், தாலியை கண்ணில் தொட்டு, கண்களை மூடி, பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள்.
""கலி காலத்தில், ஆறு கிரக சேர்க்கையினால், பஸ், ரயில்களில், ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்யும் பெண்களின் கணவன்மார்களின் ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படும். இதுவரை, அம்மாதிரி பயணித்தவர்கள், இனி ஜன்னல் சீட்டிற்கு பை.. பை'னு கணவன் தலை மீது சத்தியம் அடித்து சபதம் ஏற்க வேண்டும். இது ஜன்னல் முனிவரின் கட்டளை. பச்சை தமிழச்சியாக இருந்தால், இந்த ரகசிய தகவலை யாரிடமும் பகிராமல் அழித்து விட வேண்டும்' என்ற வாட்ஸ்அப் தகவலை, கலவரத்துடன் என்னிடம் காட்டி, என்னை குனியச் சொன்னாள்.
அடுத்த நிமிடம், தலை கிர்ரென்று சுற்றி, நிலை தடுமாறி, உடலை ஒரு முழு சுற்று சுற்றினேன்.
""இப்ப என்ன செய்தாய்..?'' அரை கிர்ரில் அவளிடம் கேட்டேன்.
""வாட்ஸ்அப்பில் ஜன்னல் முனிவர், இனி ஜன்னல் சீட் வேண்டாம்னு உங்க தலையில் சத்தியம் அடிக்க சொல்லியிருக்கார்ல. அதைத் தான், அழுத்தம் திருத்தமாக செய்தேன். இனி உங்க ஆயுளுக்கு எந்த பங்கமும் வராது.'' என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டவளுக்கு, அந்த செய்தி எந்த எண்ணிலிருந்து வந்திருக்கிறது என்று பார்க்கக் கூட தோன்றவில்லை.
அது நான் அனுப்பியதுதான்னு யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com