

1910- ஆம் ஆண்டில் ஒருநாள் அதிகாலை நேரம்.
ஒரு பூ மலர்வதைப் போல பொழுது விடிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் தூங்காமல் விழித்திருந்து அழுது தொந்தரவுதருகின்ற சிறு குழந்தையைப் போன்று அரச மரங்கள் சலசலத்தபடி இருந்தன. காக்கைகளும், குருவிகளும், பெயர் தெரியாத பறவைகளுமாக மரங்களில் அமர்ந்து கொண்டும், கிளைக்குக் கிளை தாவி ஊஞ்சல் ஆடிய வண்ணமும் ஆக அங்கே இயற்கையின் பேரின்பஉற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அருகே இருந்து வீசிய கடற்கரைக் காற்றின் சிலுசிலுப்பில் கண் மயங்கிய மஞ்சள் கொன்றை மரங்கள் மெல்ல அசைய அவற்றின் அழகு மிளிரும் மென்மையான பூக்கள் ஒரே சீராகத் தரையில் வந்து விழுந்தன. உருக்கிய பொன்னை வாரி வீசியது போன்று இருந்தது. சுற்றிலும் இருட்டிய புதரைப் போல ஏதேதோ செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து கிடக்க ஒரு வனாந்திரம் மாதிரி தெரிந்த புதுச்சேரி ரயில்வே நிலையத்தின் உறக்கத்தை கலைத்தபடி நிலக்கரிப் புகையைக் கக்கியவாறு காலை ஐந்தரை மணிக்கான ரயில் வந்து நின்றது.
22 வயது நிரம்பிய இளைய தோற்றம். ஒடிசலான தேகம். பயமறியாத முகம். இந்த விதமாக நாலு முழ வேட்டியை கட்டிக் கொண்டு, மீசை இல்லாமல் கதர் ஜிப்பா சகிதமாக. தேஜஸ் நிறைந்த ஆகிருதியோடு வ.ரா. ரயிலில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். கண்கள் யாரையோ எதிர்பார்ப்பது போல "துறுதுறு' என்று அலைந்து கொண்டிருக்க, எதிரே மிகுந்த கலை நயத்தோடு இந்தியாவின் "மோன் மார்த்ரு' என்று புதுச்சேரி மக்களால் புகழப் பெற்ற திரு இருதய ஆண்டவர் கோயில் பார்வையில் பட்டது. லத்தீன் சிலுவை வடிவமைப்பில் "கொத்தீக்' எனும் பாரம்பரியமான படைப்புத் தன்மை மேலோங்க செம்மண்ணைக் குழைத்துப் பூசியது போன்று திரு இருதய ஆண்டவர் கோயிலைக் கட்டியிருந்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது வ.ரா.வுக்கு.
"என்ன ஓர் நேர்த்தியான கட்டட அமைப்பு. இது போன்று வேறெங்காவது கிறிஸ்தவர்களுக்கென்று தேவாலயம் இருக்குமா' என வியந்தபடியே வ.ரா. சாலையைக் கடக்க முயற்சி செய்தார். அது அந்நாளைய பழம்பெருமையைச் சொல்லும் புகழ் பெற்ற தென்னண்டை புல்வார் வீதி.
ரயில்வே நிலையத்தின் இடது புறத்தில் ரயில்வே தடுப்புகளின் வடக்குத் திசையை நோக்கி நிறைய குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அவை பெரும்பாலும் அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவை. அவற்றைப் பார்த்தவாறு "வெகு சீக்கிரம் போய்ச் சேர்ந்தாக வேண்டுமே' என்று வ.ரா. நினைத்த போதே "புஷ்' வண்டியை இழுத்துக் கொண்டு ஒரு ஆள் அவர் எதிரே வந்து நின்றார்.
அதன் தோற்றத்தை கண்டவுடனே வ.ரா.வுக்கு இன்னும் ஆச்சரியம் அதிகமாயிற்று. அவர் எதிரே சாலையில் அதே போன்று பல "புஷ்' வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. நாலு சக்கர வண்டியின் மேலே ஒரு மூடு போட்டு அதிலே பயணியை ஏற்றிக் கொண்டு முன்னே ஒருவன் உட்கார்ந்து சுக்கானைப் பிடித்தபடி வண்டியை இயக்க, பின்னே ஒருவன் வண்டியைத் தள்ளிக் கொண்டே ஓடுவதைப் பார்க்க ரொம்பப் புதுமையாக இருந்தது. வ.ரா.வுக்கு அதிலே போக வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. கணமும் தாமதிக்காமல் வண்டியிலே ஏறி அமர்ந்து கொண்டு வண்டி ஓட்டுபவனிடத்தில் கேட்டார்.
""மிஸ்டர், உமக்குப் பாரதியார் வீடு தெரியுமோ?''
அவர் வ.ரா.வை ஏற இறங்கப் பார்த்தார்.
""என்ன மிúஸ.. அப்படிக் கேட்கிறீங்க? பட்டணத்தில இருந்து வந்திருக்காரே பாட்டுச் சாமி. மீசையெல்லாம் கூட வச்சுகிட்டு எங்களை மாதிரியான ஏழை, பாழைகளுக்கும் விளங்கிற மாதிரி கவிதை எழுதுவாரே அவருதானே. பிச்சேரியில அந்த ஐயா இருக்கிற இடம் எனக்கு நல்லா தெரியும். உட்காருங்க?''
வண்டிக்காரர் இவ்விதமாகச் சொன்னதும் வ.ராவுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. வெகு உற்சாகமாக வண்டியில் ஏறி அமர்நது கொண்டார். அதே சமயம் அவர் மனம் பாரதியிடத்தில் தஞ்சமடைந்து கிடந்தது. இதற்கும் முன்பே பாரதியின் சுதேச கீதங்களைப் படித்துப் பார்த்து அவற்றில் பரவசமாகிப் போயிருந்த வ.ரா.வுக்கு இன்றைய தினம் அவரை நேரில் சந்திக்கப் போகிறோம் என்கிற நினைப்பே பெரும் சந்தோஷமாய் இருந்தது. அவர் இனம் புரியாத அந்த உணர்வுக்குள் பெரிதும் ஆட்பட்டிருந்தார்.
"புஷ்' வண்டி ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தது. புதுச்சேரியின் தனித்தன்மை வாய்ந்த அழகும், தூய்மையாகவும், நேர்க்கோடு போன்றும் அமைந்த மேடு பள்ளம் இல்லாத விசாலமான தெருக்களும், பிரெஞ்சுக் கட்டடப் பாணியில் அமைந்திருந்த அமைதியான வீடுகளும் வ.ரா.வுக்கு பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருந்தது. சாலையில் கைவீசிப் போய்க் கொண்டிருந்த ஆண்கள் கோட்டும், சூட்டும் அணிந்தபடி, தலையில் தொப்பியுடன், காலில் சப்பாத்து போட்டிருந்தனர். அவர்களுக்கு இணையாகப் பெண்கள் தோளோடு தோள் உரசியபடி குட்டைக் கவுனும், குதிகால் சப்பாத்துமாக முகத்தில் பூதர் மாவு பூசிக் கொண்டு. உதட்டில் சிகப்புச் சாயத்தோடு பிரெஞ்சு மொழியில் கலகலப்பாகப் பேசி சிரித்தபடியே போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை. இதுவரையிலும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் பழக்க வழக்கங்களை மட்டுமே பார்த்து வந்திருந்த வ.ரா.வுக்கு முதன் முறையாகப் புதுச்சேரிப் பிரதேசத்தின் பிரெஞ்சிந்திய மக்களையும் அவர்களது நடை, உடை, பாவனைகளையும் ரசித்துக் கொண்டு போனது வேடிக்கையாகத்
தோன்றியது.
"புஷ்' வண்டி பட்டணத்துப் பெரிய வாசல் வழியாகப் போய், அங்கிருந்து வலது பக்கமாய்த் திரும்பி
ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருவின் வழியாக கோடியில் இருந்த ஒரு பழைய மாடி வீட்டின் முன்பு நின்றது. வண்டிக்காரர் இறங்கிக் கொண்டார்.
""மிúஸ, நீங்க கேட்ட பாட்டுச் சாமி இருக்கிற வீடு இதுதான்!''
வ.ரா. வண்டிக்காரனுக்கு கூலியைக் கொடுத்து அனுப்பிவிட்டு சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தியவராய் அந்த வீட்டை ஆர்வத்துடன் பார்த்தார். பவித்ரமான ஒரு கோயிலை தரிசிப்பது போன்ற பக்தி உணர்ச்சி அவருக்குள் பிரவாகமெடுத்தது, வானத்து மூன்றாம் பிறைகளைத் தரையில் கவிழ்த்து வைத்திருப்பது மாதிரியான வளைவான மாடங்கள். சுற்றிலும் இரும்புக் கிராதிகளைக் கொண்டு வரிசைப்படுத்தி அமைத்திருந்த வாசல். சுவரில் சுண்ணம்புக் காறைகள் அங்கங்கே பெயர்ந்து போய் மக்கி உளுத்துப் போன மரச் சட்டங்களால் ஆன சாளரங்கள். அவற்றில் தூசு படிந்து அந்தக் காலத்து வீடு என்பதைப் பார்த்த உடனே புரிந்து கொள்ளும்படியான நிலைமை.
""இந்தச் சாதாரண வீட்டுக்குள்தானா சுப்பிரமணிய பாரதி என்கிற சூறாவளிக் காற்று சுற்றி வருகிறது. என்ன கொடுமை, என்ன கொடுமை''
வ.ரா.வுக்கு கண்கள் கலங்கின. ஒன்றும் பேச தோன்றாது நடுங்கின உள்ளத்தோடு மெல்ல அடியெடுத்து வைத்துக் கதவை லேசாகத் தட்டினார். உள்ளே இருந்து "யாரது' என்று கம்பீரமாய்க் குரல் ஒலித்தது. மறுபடியும் கதவைத் தட்டலாமா வேண்டாமா என்று வ.ரா. யோசிக்கும் வேலையில் "படீர்' என்று கதவு திறந்து கொள்ள பாரதி பட்டப் பகல் சூரியனைப் போன்று மிகுந்த சிந்தனை வசப்பட்டவராய் வெளிப்பட்டார். நெற்றியில் அப்பிய குங்குமப் பொட்டும், முறுக்கி விடப்பட்ட மீசையுமாகத் துடிக்கும் உதடுகளோடு, உணர்ச்சிப் பிழம்பான வடிவம். கருப்பு நிற மேல் கோட்டைப் போட்டுக் கொண்டு, தலையில் பஞ்சாபி கட்டு கட்டியபடி கண்களில் தீட்சண்யம் பொங்க ஒரு மகா புருஷனைப் போன்று நின்றிருந்த பாரதியைக் கண்டதுமே வ.ரா. தன் வசம் இழந்து போனார். கண் இமைக்கும் நேரம்தான். ஒன்றும் புரியாத வ.ரா. பாரதியின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரிக்கவும், பாரதி அதே வேகத்தில் சட்டென்று குறுக்கே பாய்ந்து வ.ரா.வைத் தூக்கி நிறுத்தினார்.
""இங்கு பாரும். யாரும் யார் காலிலும் அவர் எப்படிப்பட்டவராக இருப்பினும் கூட விழக் கூடாது. அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. நீர் யார். வந்த விஷயத்தைச் சொல்லும்''
பாரதி அச்சம் இல்லாதவராய் கட்டளையிடுவது போன்று பேசியதும் வ.ரா.வுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது போல் ஆயிற்று. பயத்தில் அவருக்குப் பேச முடியாமல் நா குழறியது. சட்டென்று இங்கிலீஷில் பேச ஆரம்பித்தார்.
""போதும் நிறுத்துமய்யா. ஒரு தமிழன் மற்றொரு தமிழனிடத்தில் பேசும்போது, இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும். தமிழிலே பேசப்படாதா?''
இந்த விதமாகப் பாரதி வேதனை கலந்த பாவத்தோடு சொன்னதைக் கேட்டதும் வ.ரா.வுக்கு அழுகையே வந்துவிட்டது. திக்கித் திணறி பேசினார்.
""நமது கொடியாலம் ரங்கசாமி அய்யங்காருடைய குருநாதர் நாகை ஜபதா யோகியார் மகா சமாதி அடையும் சமயம் "தமிழ்நாட்டுக்கு அண்மையில் வரப்போகும் உத்திரயோகி ஒருவரை நீ எனக்குப் பிறகு குருவாகக் கொள்ளலாம்' என்று சொல்லி விட்டார். அதன் பேரில் உத்திரயோகியைப் பாரத்துப் போய் நேரில் சொல்ல எனக்கு உத்தரவு. தாங்கள்தாம் அதற்கு உதவ வேண்டும்''
வ.ரா. முடிக்கும் முன்பாகப் பாரதி இடைமறித்துக் கேட்டார்.
""உத்திரயோகியா அது யாருமய்யா. விவரமாகச் சொல்லும்!''
""அரவிந்தர்தான்''
""அப்படியா சங்கதி. நம்ம பாபுதானே. மண்டயம் சீனிவாசாச்சாரியாருடன் இன்றைய தினம் சாயங்காலமே பாபுவைச் சந்தித்து விடலாம். நீர் கவலையை விட்டுத் தள்ளும்!'' என்று கொஞ்சமும் நிறுத்தாமல் பேசிய பாரதி, பக்கத்திலே, திரும்பி அங்கு நின்றிருந்த ஓர் இளம் வயது பையனிடம் மிகுந்த பரிவோடு சொன்னார்:
""அம்பி, பாபு பாவம். அவருக்கு இருக்க இடம் இல்லை, உடுத்திக் கொள்ள வஸ்திரம் இல்லை. அதோடு உண்ண உணவும் இல்லாது சிரமப்படுகிறார். நம் பெருமை மிகு தெற்குத் தேசத்தைத் தேடி வந்த ஓர் அதிதியை நாம் நிர்க்கதியாக விட்டு விடுவது தர்மமா? நியாயமா? அதற்கான ஏற்பாட்டை உன்னிடம் செய்ய சொன்னேனே என்ன ஆயிற்று?''
""ஏற்பாடு செய்துவிட்டேன் ஐயா'' என்று உறுதியாகக் கூறிய பின்னர்தான், அங்கிருந்து சென்றார் பாரதி.
பாரதி அரவிந்தரைப் பக்தியுடனும், அன்புடனும் பாபு என்றுதான் அழைப்பது வழக்கம். அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து தலைமறைவு வாழ்க்கை வாழத் தலைப்பட்ட போது அவர் இருப்பதற்கு எந்த ஒரு வீடும் கிடைக்காத சமயத்தில் பாரதிதான். தம் நண்பரான கலவை சங்கரன் செட்டியாரிடம் சொல்லி அவர் வீட்டிலேயே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்திருந்தார்.
கலவை சங்கரன் செட்டியார் அந்நாளில் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர். புதுச்சேரி தேசப் பக்தர்களின் உற்ற நண்பராகத் திகழ்ந்து அவர்களைப் பல்வேறு ஆபத்துகளில் இருந்தும், நெருக்கடியான சமயங்களிலும் காப்பாற்றியவர். அதே போன்று பாரதி புதுச்சேரிக்கு வந்த புதிதில் அவருக்கும் இந்தக் கலவை சங்கரன் செட்டியார் செய்த உதவிகள் அநேகம். அவர் வீட்டில்தான் அரவிந்தரும் தங்கி இருந்ததால் தினமும் பாரதியும், மண்டயம் சீனிவாசாச்சாரியாரும், வ.வே.சு. அய்யரும் மணிக்கணக்கில்
கலந்துரையாடுவது அன்றாடம் நடக்கும் வேலையாக இருந்தது. மாலை நாலு மணி அளவில் அவர்களது பேச்சு தொடங்கினால் இரவு பத்து மணி வரையிலும் கூட நீளும். இம்மாதிரியான சம்பாஷணைகளில் பல தரப்பட்ட விஷயங்களுடன், தேசத்தின் விடுதலைக்குத் திட்டமிடுதல் குறித்தும், அதன் போராட்ட வடிவங்கள் பற்றியும், உலக இலக்கியங்களின் போக்குகள் அதன் தாத்பரியங்கள் யாவும் ஒரு சேர அலசப்படுவது வழக்கமாய் இருந்து வந்தது.
அன்றைய தினம், மாலை ஐந்து மணி இருக்கும். பகலின் நிறம் மெல்ல மெல்ல சிவந்து அந்திப் பொழுதை ஆராதிக்கக் காத்திருந்தது. பாரதி மண்டயம் சீனிவாசாச்சாரியாருடன் வ.ரா.வை அழைத்துக் கொண்டு அரவிந்தரைப் பார்க்க கலவை சங்கரன் செட்டியார் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். செட்டியார் வீடு அந்தக் காலத்திலேயே பர்மா தேக்கினால் கட்டப்பட்ட பிரமாண்டமான மூன்று மாடி கட்டடம். அந்த வீட்டின் மூன்றாவது மாடியில்தான் அரவிந்தர் தங்கி இருந்தார்.
கண்களில் தவழும் சுடரொளி. தோளில் அலையெனப் புரளும் தலைமுடி. மெலிந்த சரீரத்தோடு மீசையும், குறுந்தாடியுமாய் அரவிந்தர் ஒரு மூலையில் தன்னந்தனியே உட்கார்ந்திருந்தார்.
பாரதியும், மண்டயம் சீனிவாசச்சாரியாரும், வ.ரா.வுடன் அரவிந்தரை நமஸ்கரித்துவிட்டு அவர் அருகில் போய் அமர்ந்தனர். பாரதி சற்றும் தாமதிக்காது வ.ரா.வைத் "தமிழ்நாட்டு தேச பக்தன்' என்று அரவிந்தரிடத்திலே அறிமுகம் செய்து வைத்த போது வ.ரா.வுக்கு பெரிதும் மகிழ்ச்சி உண்டாயிற்று. இந்திய விடுதலையின் மீதான ஈடுபாடு அல்லவா தம்மை இவ்விதம் உயர்த்தி இருக்கிறது என்கிற தேசாபிமானத்துடன் கொடியாலம் ரங்கசாமி அய்யங்கார் இங்கு அனுப்பி வைத்திருக்கும் நோக்கத்தைச் சொல்லி, அரவிந்தருக்கு உதவும் பொருட்டுத் தாம் கொஞ்ச காலம் புதுச்சேரியிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அன்றைய இரவு நேரம் போனதே தெரியாமல் எல்லோரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அங்கே சந்தோஷமும், சுதந்திர வேட்கையும் பூரணமாய் நிரம்பிக் கிடந்தது.
பாரதிக்கு பிரெஞ்சு சங்கீதத்தின்மீது அலாதியான பிரியம் உண்டு.அதில் மிகுந்த ஈடுபாடும் இருந்தது. அவருக்கு "லா-மர்ஸியேஸ்' என்றழைக்கப்படும் பிரெஞ்சு தேசிய சுதந்திரப் பாடல் என்றால் ஒரே மோகம்தான். எப்போது பார்த்தாலும் அதையேதான் பாடிக் கொண்டிருப்பார்.
அந்நாளில் "அந்துவான் அர்லோக்' எனும் பிரெஞ்சு வாத்தியார் புதுச்சேரியில் இருந்தார். அவர் பியானோ வாசிப்பதிலும், பிரெஞ்சுப் பாடல்களைப் போலவே லத்தீன் பாடல்களைப் பாடுவதிலும் நல்ல பயிற்சி பெற்றிருந்தார். ஏற்கெனவே பாரதிக்கு கர்நாடக சங்கீதத்தில் அபார ஞானம். அது தவிர அவருக்கு இந்தப் பிரெஞ்சு வாத்தியாரின் தொடர்பும் ஏற்படவே அவரிடத்தில் அதீத சங்கீதப் புலமை மேலும் ஒரு புதிய பரிமாணத்தில் விரிவடைந்திருந்தது. அதன் விளைவாக பாரதி பிரெஞ்சு சுதந்திர கீதத்தை மிக அருமையாகக் கற்றுக் கொண்டிருந்தார்.
"லா-மர்ஸியேஸ் சுதந்திர கீதத்தை பாரதி வீட்டுக்குள் இருந்தபடி தனிமையில் பாடும் போது கேட்க வேண்டுமே. தமது வலது காலைத் தரையிலே வெகு ஆக்ரோஷமாக உதைத்துக் கொண்டு வீரம் கொப்பளிக்கப் பாடுவது மிக நேர்த்தியாக இருக்கும். அச்சமயம் வெளியே நின்று கேட்பவர்களின் செவிகளுக்கு அந்தப் பாட்டு ஒரு தமிழன் பாடுவது போலத் தோன்றாது. யாரோ ஓர் பிரெஞ்சுக்காரனே நேரில் வந்து பாடுவது போன்றுதான் தெரியும். பாரதியின் பிரெஞ்சு மொழி உச்சரிப்பு அவ்வளவு தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்கும். வீரம் பொருந்திய அந்த பிரெஞ்சு சுதந்திரப் பாடலைப் போலவே நம் தமிழிலும் அதே வேகத்தோடு கேட்பவரை நிமிர்ந்தெழச் செய்யும் வகையில் அமரத்துவம் வாய்ந்த ஓர் பாடலைப் பாடி வைக்க வேண்டும் என்ற நெடுநாளைய ஆசை பாரதியின் நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது.
ஆனால் அதற்கான காலம்தான் இன்னும் கனிந்து வரவில்லை. எல்லா நேரத்திலும், என்றைக்கும் நிலைத்து நிற்கும் அழியாத ஜீவனுள்ள கவிதைகள் எப்போது உருவாகும் என்பது யாருக்குத் தெரியும். அது எழுதுகிற கவிஞனுக்கே கூட புலப்படாத சிருஷ்டியின் ரகசியம்.
புதுச்சேரியின் அரசியல் நிலைமை மிகவும் மோசமாய் இருந்த சமயம். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து நூற்றுக் கணக்கான போலீஸார் இங்கு வந்து முகாமிட்டு பாரதி, அரவிந்தர், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட எண்ணற்ற தேச பக்தர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்று மறைமுகமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். அடைக்கலம் தேடி தஞ்சம் அடைந்தவாறு இந்திய சுதந்திரத்திற்குப் பல்வேறு வழிகளில் பாடுபட்டுக் கொண்டிருக்கிற தேச விடுதலை வீரர்களுக்குப் புதுச்சேரி குடியிருப்புப் பாத்தியதை இல்லாமல் செய்துவிட்டால் பிறகு வெகு சுலபத்தில் அவர்களை வெளியேற்றி விடலாம் என்பது போலீஸாரின் திட்டம்.
அதன் காரணமாக, பிரெஞ்சிந்திய சட்டசபையில் "அந்நியர் சட்டம்' என்று ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு பிரிட்டிஷாரால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. வேறு வழியின்றி பிரெஞ்சு அரசாங்கம் கொண்டு வந்த அச்சட்டத்தின்படி அது அமலுக்கு வந்த தேதிக்கும் முன்பிருந்து ஒரு வருஷ காலம் புதுச்சேரியில் வசித்து வரும் அந்நியர்கள் ஐந்து ஹானரரி மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் இருந்து கையெழுத்து வாங்கிப் பிரெஞ்சுப் போலீஸாரிடம் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து அவர்கள் புதுச்சேரியில் குடியிருக்கலாம் என்கிற புதிய ஷரத்து சட்டத்தில் புகுத்தப்பட்டது.
இந்தச் செய்தி எப்படியோ பாரதிக்குத் தெரிந்துவிட்டது. "தலைமறைவு வாழ்க்கைக்குத் தடை வந்து விட்டாலும் கூட நமக்குப் பயமில்லை. என்றாலும் இங்கிருக்கும் தேசாபிமானிகளை வெளியேற்றி விட்டால் பிறகு நாம் எப்படித் தேசிய விடுதலைக்குத் திட்டமிடுவது, மக்களைப் பொது வெளியில் திரட்டுவது. இந்தப் போக்கை எங்ஙனமாயினும் தடுத்து நிறுத்தியாதல் வேண்டும்' என்று உடனே முடிவெடுத்த பாரதி எத்தகைய சிரமம் வந்தாலும் ஐந்து மாஜிஸ்ட்ரேட்டுகளைப் பிடித்துப் புதுச்சேரியிலேயே தொல்லையின்றி இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தலைப்பட்டார்.
அன்றிரவே யாருக்கும் தெரியாமல் பாரதியும், மண்டயம் சீனிவாசாச்சாரியாரும், வ.வே.சு. அய்யரும் கூடி என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்தனர். பாரதி ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் பக்கத்தில் இருந்த வ.ரா.விடம் கண்களில் உற்சாகம் மின்ன "கணீர்' என்ற குரலில் சொன்னார்.
""நீர் நாளை காலையில் நம்மை வீட்டில் வந்து பாரும். வேண்டியது செய்யலாம். பராசக்தி நமக்கு அருள் புரிவாள். இனி யாவும் ஜெயமாய் நடக்கும்!''
பாரதியின் இந்த நம்பிக்கை வார்த்தைகளைக் கேட்டு அனைவரும் கலைந்து போயினர். வ.ரா.வுக்கு மாத்திரம் அதே நினைப்பாய் இருந்தது.
மறுநாள் காலை. முன்பே பேசிக் கொண்டதுபடி வ.ரா. பாரதியை அவர் வீட்டுக்குப் போய் தனியே சந்தித்தார். அவருக்காகக் காத்திருந்த பாரதிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
""வாருமய்யா உம்மைத்தான் எதிர்பார்த்திருந்தேன். உடனே தாமதம் செய்யாது சங்கரன் செட்டியார் வீட்டுக்குப் போக வேண்டும். ம்.. எம்மோடு புறப்படும்'' என்றபடி பாரதி, வ.ரா.வை அழைத்துக் கொண்டு தமது முறுக்கிய மீசையைக் கைவிரல்களால் தடவியவாறு, மார்பை முன் நிறுத்தி ஒரு போர் வீரனைப் போன்று கம்பீரமாய்க் குதித்து நடந்து சென்றார்.
சிறிது நாழிகையில் இருவரும் சங்கரன் செட்டியார் வீட்டை அடைந்திருந்தார்கள். பாரதியை எதிர்பாராது பார்த்துவிட்ட இன்ப அதிர்ச்சியில் செட்டியார் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார்.
""வாருங்கள், வாருங்கள். என் வீடு தேடி வந்தது நான் செய்த பாக்யம். உள்ளே வந்து இப்படி அமருங்கள்'' என்று முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலைக் காட்டினார்.
பாரதிக்கு அதெல்லாம் காதில் விழவில்லை. சட்டென்று செட்டியார் அருகில் போய் நின்று கொண்டு "படபட' என்று பேசினார்.
""செட்டியாரே மன்னிக்க வேண்டும். நாம் இங்கு அமர்வதற்கு நேரமில்லை. உம்மால் ஒரு காரியம் ஆக வேண்டும். செய்வீரா?''
சங்கரன் செட்டியார் ஆடிப் போய்விட்டார். பாரதி இது போன்று பேசி அவர் கேட்டதில்லை.
""எதற்குப் பீடிகை . உத்தரவிடுங்கள். உடனே செய்ய சித்தமாயிருக்கிறேன்''
""பிரிட்டிஷ்காரன் நம்மையும், நம்மைப் போன்ற தேசாபிமானிகளையும் பிடிப்பதற்குப் பொறி வைத்திருக்கிறான். நீர்தான் எப்படியாவது நாங்கள் புதுச்சேரியிலேயே தங்கி இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்''
""இதென்ன பிரமாதமான காரியம். இரண்டு மணி நேரம் அவகாசம் கொடுங்கள். எல்லாவற்றையும் சரிசெய்து விடுகிறேன். நீங்கள் கவலையே பட வேண்டாம்!'' என்று தைரியப்படுத்திய சங்கரன் செட்டியார் கையெழுத்துப் போட வேண்டிய முக்கியமான தஸ்தாவேஜிகளில் எல்லாம் தேவையான சமாச்சாரங்களை எழுதிப் பூர்த்தி செய்து தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.
""சபாஷ் செட்டியாரே அப்படியே செய்கிறோம்''
பாரதி சொல்லி முடிக்கவில்லை. அதற்காகவே காத்திருந்தவரைப் போல சங்கரன் செட்டியார் குறுக்கிட்டுத் தம் இரண்டு கைகளையும் மார்பின் முன்பாகக் கட்டிக் கொண்டு தயவாகப் பேசினார்.
""இந்தக் காரியம் நான் செய்கிறேன். அதற்குப் பிரதி உபகாரமாகத் தாங்கள் உடனே ஒரு பாட்டுப் பாட வேண்டும்''
சங்கரன் செட்டியார் கேட்ட மறு விநாடியே பாரதி "கலகல' என்று வெண்கலம் போன்ற தம் குரலில் சிரிக்கத் தொடங்கினார்.
""செட்டியாரே எம்மைப் பற்றித்தான் உமக்கு நன்றாகத் தெரியுமே. எந்த விஷயத்திலும் நான் வேண்டியவன், வேண்டாதவன் என்றோ, அவன் இன்ன சாதி, இந்தப் பிரிவு என்றோ பார்ப்பதில்லை. உலகம் என் உறவு. அதில் வாழும் யாவரும் சிநேகிதர்கள். நான் இந்தப் பிரபஞ்சம் முழுமைக்குமான கவி. ஆதலால் சொல்கிறேன். உம்மைப் போன்ற நல்ல மனுஷர்களுக்கு இல்லாத பாட்டு ஒரு பாட்டா. இதோ ஒரு நொடியில்''
பாரதி மிடுக்குக் குறையாத ஒரு வேங்கையைப் போன்று அப்படியும், இப்படியுமாகத் தம் விழிகளை உருட்டியபடி அந்த வீட்டுக்குள் உலாவத் தொடங்கினார். உணர்ச்சிப் பெருக்கில் நெருப்புக் கங்குகளாய்ச் சிவந்திருந்த தம் கண்களை மூடி ஆவேசத்துடன் நடந்த போது "லா-மர்ஸியேஸ்' பிரெஞ்சு சுதந்திர கீதம் அவர் மனப் பிரதேசம் எங்கும் எதிரொலித்தது. நடந்து கொண்டிருந்தவர் சட்டென்று அங்கேயே நின்று தம் தலையை உயர்த்தி மறுபடியும் பலமாகச் சிரித்தார்.
""செட்டியாரே இந்தாரும் நீர் கேட்ட பாட்டு'' என்று சொல்லிவிட்டுப் பாரதி இடி முழக்கம் போன்ற தம் குரலில் "ஜெயமுண்டு பயமில்லை மனமே /இந்த/ ஜென்மத்திலே விடுதலையுண்டு' என்று தொடங்கும் அந்தப் பாட்டை முழுமையாக ராகம் போட்டுப் பாடிக் காட்டினார்.
அது பிரெஞ்சு நாட்டுத் தேசிய கீதத்தைப் போன்று தமிழிலும் எழுத முடியும் என்ற அவர் வெகுவாக நம்பியிருந்த லட்சியப் பாட்டு. எந்த மொழிக்கும் தமிழ் மொழி தாழ்ந்ததில்லை என்பதைப் பிறருக்கு உணர்த்துவதற்காகக் பாடிய துடிப்பு மிகுந்த விடுதலைப் பாட்டு.
அதன் மதிப்புமிக்க மேன்மையில் கரைந்து போனவர்களாய் கலவை சங்கரன் செட்டியாரும், வ.ரா.வும் வாய் பேசாது அப்படியே அசைவற்று நின்றிருந்தார்கள். வெளியே புதுச்சேரி நகரத் தெருக்கள் எங்கும் ஏற்றி வைத்திருந்த விளக்குகளின் பிரகாசத்தினால் இருள் மறைந்து மெல்ல மெல்ல வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது.
(செப். 11; பாரதியார் நினைவு நூற்றாண்டு நிறைவு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

