அடுத்து என்ன..?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த  அறிவிப்பு வெளியாகி கொண்டே இருக்கின்றன.  இதுவரையிலான அப்டேட்.
அடுத்து என்ன..?
Updated on
3 min read


தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டே இருக்கின்றன. இதுவரையிலான அப்டேட்.

ரஜினியுடன் அமிதாப்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர்' ஆகஸ்ட் 10இல் திரைக்கு வருகிறது. தொடர்ந்து 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஒரு முக்கியமான கதாபாத்திரத்துக்காக, சூர்யாவைக் கேட்கலாம் எனச் சொல்லப்பட்டதற்கு ரஜினி மறுத்துவிட்டார் என்று தகவல் வந்தது. இது முற்றிலும் தவறான தகவலாம். சூர்யாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சிக்கே யாரும் செல்லவில்லையாம்.

அதேபோல், விக்ரமிடம் கேட்கப்பட்டு அவரின் கால்ஷீட் இல்லை என்று சொன்னதாகவும் தகவல் வந்தது. சூர்யா, விக்ரம் என்று சொல்லப்பட்ட அந்த முக்கியமான கேரக்டரில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம். ரஜினிக்கு இணையான ஒரு முக்கியமான கதாபாத்திரம் அது. அமிதாப் பச்சனிடம் கேட்கலாம் என்று சொல்லும்போதே மிகவும் சந்தோஷப்பட்டாராம் ரஜினி. மும்பை சென்று அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்டது. அவரும் மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்திருப்பதாகத் தகவல்.

ஹிந்தியில் 1991ஆம் ஆண்டு வெளியான 'ஹம்' படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான். அதுமட்டுமில்லாமல் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படமும் இதுதான். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நண்பருடன் சேர்ந்து நடிப்பதால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கமல் கேட்ட நான்கு கதைகள்

அதிரி புதிரி வெற்றி கொடுத்த 'விக்ரம்' படத்துக்குப் பிறகு, படு சுறுசுறுப்பாகிவிட்டார் கமல். அடுத்து 'இந்தியன் 2', படப்பிடிப்புகளில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார். அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படங்களின் ஷெட்யூல்களையும் மும்முரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.
'விக்ரம்' படத்தை அடுத்து மல்டி ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் கமல். அந்த ஆர்வத்தை 'பொன்னியின் செல்வன்' படமும் தூண்டி விட்டிருக்கிறது. கமலின் பிறந்தநாள் பரிசாக அறிவிக்கப்பட்ட மணிரத்னம் கமல் கூட்டணியின் படமும் மல்டி ஸ்டார் படம்தான் என்கிறார்கள்.
இப்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். அவர் 'விஸ்வரூபம் 2' படத்தின் எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறார் என பேச்சு இருந்தது. மகேஷ் சொன்ன கதை, கமலை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறது. அதன் ஸ்கிரிப்ட் ஒர்க் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கும் போதுதான், கமல் அடுத்து சமகால டிரெண்டிங் இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்க ஆரம்பித்தார். அதில் வெற்றிமாறன், ஹெச்.வினோத், பா.ரஞ்சித், முத்தையா, ஆகியோர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். அவர்கள் அத்தனை பேர் சொன்ன ஒன்லைன்களும் வேறுவேறு ஜானர்களில் இருக்கவே, அத்தனையும் கமலை இம்ப்ரஸ் செய்துவிட்டது.

அதனை முடித்துவிட்டு ஹெச்.வினோத் படத்தை துவங்குவதா அல்லது மகேஷ் நாராயணன் படத்துக்குச் செல்லலாமா என்பது குறித்து விவாதித்து வருகிறார் கமல். அநேகமாக மணிரத்னம் கமல் இணையும் படத்தின் ஷூட்டிங் 2024 இல் தான் இருக்கும் என்ற பேச்சும் இருக்கிறது. இதற்கிடையே கமல் எப்போது கூப்பிட்டாலும் அவரை இயக்க ரெடியாக இருக்கிறேன் என லோகேஷும் ஒரு பக்கம் தயாராக இருக்கிறார்.
கமல் இப்போது படுபிஸி. இதற்கிடையே அவரது ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி படம் இருக்கிறது.

விஜய் - வெங்கட்பிரபு கூட்டணி

அரசியலுக்கு வரப் போகிறார் விஜய் என ஒரு பக்கம் பரபரக்கிறது பேச்சு. இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'விஜய் 68' அப்டேட்டுகள் குவிந்து கொண்டிருப்பதால், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ'வைப் பலரும் மறந்தே விட்டனர். கமலின் 'விக்ரம்' படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து 'லியோ'வை இயக்கி வருகிறார். விஜய்யுடன், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், கதிர், பாபு ஆண்டனி, சாண்டி, மனோபாலா, மன்சூர் அலிகான் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

லோகேஷின் மனம் கவர்ந்த அனிருத்தான் இசையமைக்கிறார். 'பீஸ்ட்' மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துவருகிறார். 'லியோ'வின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ஈ.வி.பி. திரைப்பட நகரைத் தொடர்ந்து, பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெறுகிறது.

அன்பறிவ்வின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையிலும் அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டன. த்ரிஷா காம்பினேஷனில் பாடல்களும் ஷூட் செய்யப்பட்டுவிட்டன.

இதற்கிடையே படத்தின் ஓப்பனிங் பாடலை இப்போது எடுத்து வருகிறார்கள். டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடன அமைப்பில் விஜய்யுடன் இணைந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆடி வருகிறார்கள்.

இதற்காக சில வாரங்களுக்கு முன்னரே தினேஷ் மாஸ்டர், ஏராளமான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து டான்ஸ் ரிகர்சல் கொடுத்து வந்தார். அவர்களுடன் விஜய் ஆடியிருக்கிறார். இப்போது எடுக்கப்பட்டு வரும் பாடல் காட்சியினைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் கூட்டணியில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை எடுக்க உள்ளனர்.

அடுத்த வாரத்தோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது என்கிறார்கள். படத்தின் கேரளா விநியோக உரிமை, வெளிநாட்டு உரிமை என அத்தனையும் மிகப் பெரிய விலைக்குப் போயிருப்பதாகவும் தகவல்.

லண்டனில் விடா முயற்சி

அஜித்தின் 'விடாமுயற்சி' ஒரு வழியாக டேக் ஆப் ஆகப் போகிறது. படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துவிட்டார்கள்.

இதுபற்றி பட இயக்குநர் மகிழ்திருமேனி வட்டாரத்தில் விசாரித்ததில், 'சென்ற மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது.

இதற்கிடையே அஜித் கதையைக் கேட்டு, சில திருத்தங்கள் சொல்லியிருப்பதால், மகிழ் அதற்கான வேலைகளில் உள்ளார், அதனால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது' என்றும் செய்திகள் வந்தன.

இந்த நிலையில், புனேயில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும் அங்கே அரங்கம் அமைக்கும் வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்தக் கதையில் த்ரிஷா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். மெயின் வில்லனாக பக்கத்து மாநிலத்திலிருந்து ஒருவர் வரவிருக்கிறார் என்கிறார்கள்.

இன்னொரு விஷயம், அஜித்தும், இயக்குநர் மகிழும் படத்தின் முன் திட்டமிடல் வேலைகளுக்காக லண்டனில் உள்ளனர் என்றும் சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் லண்டனில் பைக் ரைடில் இருந்த அஜித், அங்கே லுக் டெஸ்ட் எடுத்தார். 'விடாமுயற்சி'யின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கிறது என்றும், அடுத்த மாதம் இரண்டாவது வாரங்களில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் ரிலீஸைகூட அநேகமாக வரும் பொங்கல் பண்டிகைக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com