தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

60 ஆண்டு நாடகப் பயணம்!

ஒய்.ஜி.மகேந்திரன். சுருக்கமாக ஒய்.ஜி.எம்.  அவருக்கு வயது எழுபத்து மூன்று. பி.டெக்., எம்.பி.ஏ. படித்தவர்.

News image
Updated On :5 மார்ச் 2023, 12:30 am

எஸ். சந்திர மௌலி

ஒய்.ஜி.மகேந்திரன். சுருக்கமாக ஒய்.ஜி.எம். அவருக்கு வயது எழுபத்து மூன்று. பி.டெக்., எம்.பி.ஏ. படித்தவர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடக மேடையிலும், திரைப்படம்,சின்னத் திரையிலும் பிரபலமாக வலம் வருபவர். பல்வேறு நாடகங்களின் மூலமாக 7 ஆயிரம் நாடகங்களுக்கு மேலாக மேடைகளைக் கண்டவர்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி, கலைவாணர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர். இவருக்கு 2022-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமியின் "சிறந்த நாடகக்கலைஞர்' என்ற விருது அண்மையில் வழங்கப்பட்டது.

அவருடன் ஓர் சந்திப்பு:

நீங்கள் முதன்முதலில் மேடைஏறி நடித்தது எப்போது?

1961-ஆம் ஆண்டில் எனது தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி யுனைட்டட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் குழுவின் "பெற்றால்தான் பிள்ளையா?' என்ற நாடகத்தின் மூலமாக நான் மேடையில் அறிமுகமானேன். பள்ளியில் படித்துகொண்டிருந்த எனக்கு அப்போது வயது பதினொன்று. நடிப்பெல்லாம் வேண்டாம் என்றார் அம்மா. இதனால் பெற்றோருக்கு இடையே சண்டை. கடைசியில் அம்மா சம்மதித்தார். நான் மேடை ஏறினேன். அந்த நாடகம்தான் பிற்காலத்தில் சிவாஜி நடிப்பில் "பார் மகளே பார்' என்ற திரைப்படமாக வந்தது.

மேடையில் உங்களூடைய குரு யார்?

என்னை அறிமுகப்படுத்தி, நடிகனாக வாழ்க்கைப் பாதை அமைய பிள்ளையார் சுழி போட்டவர் எனது தந்தை ஒய்.ஜி.பி. தான். ஆனால், அவருடன் சேர்ந்து நாடகக் குழுவை ஆரம்பித்த பட்டு என்பவரையும் எனக்கு "நாடக உலக குரு' என்று,சொல்ல வேண்டும். சோவுக்குக் கூட அவர்தான் நாடக உலக குரு.

உங்கள் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டது ...

செய்யும் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பதுதான் அவரிடமிருந்து கற்ற முக்கியமான விஷயம். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தலைமைப் பண்புகள் போன்ற அவரது குணங்களை இன்றும் கடைபிடிக்கிறேன். மத்திய அரசு அலுவலராக நேர்மையாகப் பணியாற்றியவர். அதேஅளவு மேடையிலும், நாடகக் குழுவை நிர்வகிப்பதிலும் கடைபிடித்தார்.

அந்தக் காலத்தில் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழு பிரசித்தி பெற்றது. தன் குழு உறுப்பினர்களிடம் ஒய்.ஜி.பி.யின் நாடகக் குழுவினர் தொழில்முறை நாடக நடிகர்கள் இல்லை என்றாலும், அவர்களின் மேடை ஈடுபாடும், அர்ப்பணிப்புத் தன்மையும் அபாரம் என்று டி.கே.சண்முகம் பாராட்டுவார். அந்தக் குழுவில் பட்டை தீட்டப்பட்ட கமலஹாசன் கூறிய தகவல் இது.

உங்களுடைய சூப்பர் டூப்பர் ஹிட் நாடகம் எது?

என்னை பொருத்தவரை எல்லாமே அற்புதமான படைப்புகள்தான்! பட்டு இருந்த காலத்தில் "ஓ! வாட் எ கேர்ல்!' நாடகம் பெரிய அளவில் வரவேற்பைப்
பெற்றது.

"ஃப்ளைட் 172', "ரகசியம் பரம ரகசியம்', " ரூபாய்க்கு மூணு கொலை', நான் மேடையில் ஏழு விதமான பாத்திரங்களில் நடித்த "அந்த ஏழு ஆட்கள்', "காதலிக்க நேரமுண்டு', "சுதேசி ஐயர்' என்று பெரிய பட்டியல் போடலாம். தற்போதைய "சாருகேசி' முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.

எங்கள் நாடகக் குழுஆரம்பித்து 70 ஆண்டுகளாகிவிட்டன. பத்து, பத்து ஆண்டுகளாகப் பிரித்து, அந்தந்த காலகட்டத்தின் டாப் மூன்று நாடகக் குழுக்கள் பட்டியலிட்டால் நாங்கள் நிச்சயம் அவற்றில் இடம்பெறுவோம். அதுதான் எங்களுடைய பெருமை! சாதனை!

சீரியஸ் நாடகம், நகைச்சுவை நாடகம்- இவற்றில் எது மனநிறைவை அளிக்கிறது?

நகைச்சுவை நாடகங்களில் நடிக்கும்போது, ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைப்பதால் சந்தோஷம் ஏற்படும். சீரியஸ் ரோலில் நடித்து, தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் நடிகர்களுக்கு இருக்கும். எனக்கும் நிறைய வாய்ப்புகள்கிடைத்தன. "குருசேத்திரம்' என்ற நாடகம் தொடங்கி நிறைய நடித்துள்ளேன்.

நடிகனின் வேலை ரசிகர்களை மகிழ்விப்பதாகும். அதை சிரிப்பின் மூலமாகச் செய்தால் என்ன? சோகத்தின் மூலமாகச் செய்தால் என்ன?

மறக்கவே முடியாத மேடைஅனுபவங்கள் உள்ளதா?

மேடை நாடகமானது நேரடியாக நடக்கும் என்பதால், பலவிதமான சவால்கள், சமாளிப்புகள், அனுபவங்கள்.. உண்டு.
"ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா' என்ற நாடகம் நடந்தபோது, இடைவேளை நேரத்தில் ஒரு நடிகருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து நடிக்க முடியாத நிலைமை! கதைக்கு அவசியமான ஒரு கதாபாத்திரம் இல்லாமல் நாடகத்தை எப்படி நடத்துவது? பத்து நிமிட இடைவேளை நேரத்தில் அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்தாக வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை. கூடவே இருந்த ஏ.ஆர்.எஸ்., மெளலி ஆகிய இருவரிடம் ஆலோசனை செய்தேன்.

அந்தக் கதாபாத்திரம் பேச வேண்டிய வசனங்களை நாங்கள் மூவரும் பிரித்துக் கொள்ளுவது என்றும், அவர் ஊருக்குப் போய்விட்டார் என்று சொல்லிவிட்டு, அவர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதாக நாங்களே அவருடைய வசனங்களைப் பேசி விடுவது என்றும் முடிவு செய்தோம். அப்படியே செய்தும் சமாளித்தோம். நாடகம் முடிந்ததும், ஒருவர், அதையும் ஒரு புதுயுக்தி என்று பாராட்டினார்.

"பாவம் பரத்வாஜ்' என்ற நாடகத்தில் இடைவேளை அறிவிப்புக்கு முன்பாக, உணர்ச்சி பொங்க வசனம் பேசிவிட்டு, வலது பக்கம் திரும்பிப் போவதற்குப் பதிலாக இடது பக்கம் திரும்பி நடந்தேன். சீன்செட்காரர் தனது வழக்கப்படி பின்னணி திரைச்சீலையை வேகமாக மேடையை நோக்கித் தள்ள, அது என் கண்ணில் பட்டு, காயம் ஏற்பட்டது. ஆனாலும், நாடகத்தை பாதியில் நிறுத்த விரும்பாமல், வலியையும், பார்வை தடுமாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு, மீதி நாடகத்தையும் முடித்துவிட்டு, கண் மருத்துவரிடம் விரைந்தேன்.

மேடை நாடகம் நலிந்து போனதற்கு என்னகாரணம்?

நாடகங்களின் தரம் குறையவில்லை. நல்ல சப்ஜெக்ட்டுகள், நடிப்பு எல்லாம் உள்ளன. ஆனாலும்கூட மக்களுக்கு நாடக ரசனை குறைந்துள்ளது. காசு கொடுத்து நாடகம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை! திரையரங்குகளுக்குச் சென்று, திரைப்படம் பார்ப்பதே குறைந்துவிட்டது. கைப்பேசியிலேயே எல்லாவற்றையும் பார்த்துவிடுகிறார்கள்.

இன்று திரைப்படம் எடுத்து முடித்து, ரிலீஸ் செய்ய முடியாமல் 150-க்கும் அதிகமான படங்கள் காத்திருக்கின்றன. அதனால் திரைத்துறை நலிவடைந்து விட்டது என்று சொல்லிவிட முடியுமா?

Story image

தமிழ் மேடை நாடகத்தின் எதிர்காலம் குறித்து..?

கர்நாடக இசை, பரத நாட்டியம், கிராமியக் கலைகள், மேடை நாடகங்கள்- இவற்றின் எதிர்காலம் பற்றிக் கவலையே பட வேண்டாம். இவையெல்லாம் பாரம்பரிய கலைகள். எப்போதும் யாராவது இந்தக் கலைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.

சங்கீத நாடக அகாதெமி விருது கிடைத்திருப்பது குறித்து?

விருது கிடைத்த செய்தி கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. தரமான மேடை பங்களிப்புக்காக வழங்கப்பட்ட அங்கீகாரம் இது! எனது பெற்றோர், எனது யூ.ஏ.ஏ. குழுவினர், என் குடும்பம், சக நாடகக் குழுக்கள், நான் மதிக்கும் நடிகர் சிவாஜிகணேசன்உள்ளிட்டோருக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.