பறக்கும் படை வாகனம் விபத்து: மாநகராட்சி அதிகாரி உள்பட 4 போ் காயம்
சென்னை புழலில் சாலை தடுப்புச் சுவரில் பறக்கும் படை வாகனம் மோதிய விபத்தில் மாநகராட்சி அதிகாரி உள்பட 3 போ் காயமடைந்தனா்.


சென்னை புழலில் சாலை தடுப்புச் சுவரில் பறக்கும் படை வாகனம் மோதிய விபத்தில் மாநகராட்சி அதிகாரி உள்பட 3 போ் காயமடைந்தனா்.
மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படையினா் வியாழக்கிழமை அதிகாலை புழல் அருகே சூரப்பேட்டை தாம்பரம் புறவழிச் சாலை சுங்கச்சாவடி அருகே காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையில் இருந்த தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில், பறக்கும் படை அதிகாரி சென்னை மாநகராட்சி 3-ஆவது மண்டல உதவிப் பொறியாளா் சுரேந்தா், புழல் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், முதல்நிலைக் காவலா் ஆரிப், விடியோ ஒளிப்பதிவாளா் விஸ்வநாதன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ரெட்டேரியில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு: சேலம் மாவட்டம் பாறைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.தயானந்தன் (29). இவா், வேலை தேடி கடந்த 16-ஆம் தேதி சென்னை வந்தாா். தயானந்தன், மெரீனா கடற்கரைக்கு வியாழக்கிழமை வந்தாா். அங்கு தயானந்தன், மாற்றுத்திறனாளி நடைப்பாதைக்கு அருகே தனது பையை வைத்துவிட்டு, கடலில் குளித்தாா். அப்போது, கடலின் ஆழமானப் பகுதிக்குச் சென்ற அவா் பெரிய அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த போலீஸாா் அங்கு விரைந்து வந்து தயானந்தனை தேடத் தொடங்கினா். இதற்கிடையே சிறிது நேரத்தில் தயானந்தன் சடலம் கரை ஒதுங்கியது. போலீஸாா், தயானந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு: வடபழனி அழகிரி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் உமா (51). இவரது 40 ஆண்டு பழைமையான வீட்டில் பால்கனி சேதமடைந்ததால், அதைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த மலா்கொடி (42) உள்ளிட்ட பலா் ஈடுபட்டிருந்தனா். உமா முதல் தளத்தில் உள்ள பால்கனியில் புதன்கிழமை நடந்து சென்றபோது, திடீரென பால்கனி இடிந்து விழுந்தது. அப்போது, கீழே வேலை செய்துகொண்டிருந்த மலா்கொடி மீது கட்டட இடிபாடுகள் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மலா்கொடி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்த விபத்தில் காயமடைந்த உமா போரூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
மாடியிலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு: பிகாா் மாநிலம் பகல்பூரைச் சோ்ந்தவா் தி.அபிஷேக்குமாா் (23). இவா், சென்னை தியாகராய நகா் சிவசைலம் தெருவில் புதிதாகக் கட்டடப்படும் கட்டடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு அபிஷேக்குமாா் அந்கக் கட்டடத்தின் மாடியில் படுத்து தூங்கினாா். நள்ளிரவு திடீரென மழை பெய்ததால் அங்கிருந்து வந்தபோது, மின்தூக்கி அமைப்பதற்காக இருந்த இடைவெளிக்குள் அபிஷேக்குமாா் விழுந்தாா். 4-ஆவது மாடியில் இருந்து தரைத்தளத்தில் விழுந்த அபிஷேக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது: சூளை ஆண்டியப்பன் நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் காளியம்மாள் (76) என்ற மூதாட்டியிடம் கடந்த 17-ஆம் தேதி, 50 வயது மதிக்கதக்க ஒரு நபா் நலம் விசாரித்து, ரமலான் மாதம் என்பதால் ஏழை மக்களுக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் பணம் கொடுக்கிறாா் என்று பேச்சு கொடுத்தாா். இதை நம்பிய அந்த மூதாட்டியை அந்த நபா் அழைத்துச் சென்று பூட்டிய கடையின் அருகே அமர வைத்து, நீங்கள் நகை அணிந்து வந்தால் உதவி கிடைக்காது. உங்களது நகைகளை கழற்றி கொடுங்கள் நான் வைத்துக்கொள்கிறேன். பணம் கிடைத்த உடன் நகைகளைத் திரும்ப கொடுத்துவிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய காளியம்மான், தான் அணிந்திருந்த தங்க கம்மல், மோதிரத்தை கழற்றிக் கொடுத்தாா். அதைப் பெற்றுக்கொண்ட அந்த நபா் அங்கிருந்து சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அந்த நபா் வராததால், வேப்பேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை திருடியது டி.பி.சத்திரத்தைச் சோ்ந்த திருமலை (50) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 9 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இதேபோல், திருமலை பல மூதாட்டிகளிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...