

ஞாயிற்றுக்கிழமைகளில் என் குடும்பத்தினர் இறைச்சி, மீன் சாப்பிட வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். இப்படி சாப்பிடுவது நல்லதா?
பேஹம்,
காரைக்சபீதா கால்.
பொதுவாகவே பிற உயிரினங்களை வதைத்து உண்பதே தவறாகும். ஆனால் உங்களுடைய கேள்வியில் இறைச்சிகளைச் சாப்பிடுவது நல்லதா? என்று கேட்டிருப்பதால் அவை பற்றிய மருத்துவக் குணங்களை அறிய விரும்புகிறீர்கள் என்பது தெளிவாகிறது. அதனால் அவை பற்றிய விவரங்கள் ஆயுர்வேத நூல்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? உடலுக்கு நல்லதா?, கெட்டதா? என்ற விவரங்களைச் சற்றே ஆராய்வோம்.
ஆட்டிறைச்சி மிகவும் குளிர்ச்சியானதல்ல. செரிப்பதற்குக் கடினமானது. நெய்ப்புத் தன்மையுடையது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களுக்கு வளர்ச்சியையோ, சீற்றத்தையோ அளிப்பதில்லை. குணங்களில் பெருவாரியாக, மனிதர்களின் ரஸம் ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்தணுக்களை தன் குணங்களால் நிரப்பி, புஷ்டியை ஏற்படுத்தித் தரும். உட்புற அணுக்களில் கசிவை ஏற்படுத்துவதில்லை.
செம்மறியாட்டின் இறைச்சி, ஆட்டிறைச்சிக்கு நேர்எதிரானது. ஆனால் உடல் ஊட்டத்தை ஏற்படுத்தும்.
பசு மாட்டிறைச்சியை உண்பதால் வரட்டு இருமல், நெஞ்சு படபடப்பு, தீவிரமான பசி, விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சல், மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், உடல் இளைத்தல், வாத தோஷத்தினால் மட்டுமே அதாவது பித்த பகங்களின் கூட்டைப் பெறாமல் தான் மட்டும் சீற்றமடைதல் போன்ற உபாதைகளை விரைவாகக் குணப்படுத்தும்.
எருமை மாட்டிறைச்சி சூடான வீரியமுடையது. செரிப்பதில் மிகவும் கடினமானது. நல்ல உறக்கத்தை ஏற்படுத்தும். வலுவைக் கூட்டி உடல் வனப்பைத் தரும்.
வெண் பன்றியின் மாமிச குணமும் மாட்டிறைச்சிக்கு ஒப்பானது. உடல் வாட்டத்தைப் போக்கி, ருசி பசியை நன்கு ஏற்படுத்தும். ஆண்களுக்கு விந்தணுப் பெருக்கம், உடல் வலு ஆகியவற்றை அதிகப்படுத்தும்.
மீன் வகையறாக்கள் பொதுவாகவே கபதோஷத்தை அதிகப்படுத்தும். இறால், மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்களை சீற்றமுறச் செய்து பெரும்
உபாதைகளை விளைவிக்கும்.
புதியதாக வெட்டப்பட்ட, சுத்தமான இளம் வயதுடைய மிருகங்களின் மாமிசங்களை உண்ணத் தகுந்தவை. தாமகவே இறந்த, மெலிந்த மிகவும் கொழுத்தல், பிராணிகளுடைய மாமிசமும், நோய் வாய்ப்பட்டு தண்ணீரில் மூழ்கி, விஷத்தால் மடிந்த மாமிச வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.
ஆண் மாமிச வகைகளின் மேல்புறம், பெண் மாமிச வகைகளின் கீழ்ப்புறம் செரிப்பதில் கடினமானவை. வயிற்றில் சிசுவுடன் உள்ள பிராணிகளின் மாமிசமும் கனமானவை. நான்கு கால்களுடைய பெண் பிராணி மாமிசம் செரிப்பதில் சுலபமானவை.
ஆண் பறவைகளின் மாமிசம் லேசானவை செரிப்பதில் எளிதானவை. பெண் பிராணிகளுடைய தலை, தோள் பட்டை, தொடை, முதுகு, இடுப்பு, கால், வயிறு, குடல் போன்றவை ஆண் பிராணிகளைவிட செரிப்பதில் கடினமானவை.
ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை வரிசைக்கிரமாக கனமானவை. செரிப்பதில் தாமதப்படுபவை.
விரைக்கொட்டை, பிறப்புறுப்பு, சிறுநீரகம், கல்லீரல், பெருங்குடல் ஆகியவை மிருகங்களுடைய தசையைவிட கனமானவை என்பதால் நிதானமாகவே செரிக்கக்கூடியவை.
மாமிசங்களுக்கு இத்தனை வகையான குணங்களிலிருந்தாலும், அவை மனம் சார்ந்த ரஜஸ் தமஸ் எனும் ஆக்ரோஷத்தையும், மந்தமான தன்மையும் மனித மனங்களுக்குத் தகுந்தவாறு சீற்றத்தை ஏற்படுத்தும் தன்மையுடையவையாக இருப்பதால், காய்கனிபால் போன்ற மன அமைதிஉடல் குளிர்ச்சி தரும் உணவுகளையே தேர்ந்தெடுத்து சாப்பிட்டு பயன்பெறுவோம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.